×

தஞ்சை கோயிலில் ஐம்பொன் சுவாமி சிலைகள் கொள்ளை

தஞ்சை: தஞ்சை கோயிலில் மர்ம நபர்கள் புகுந்து பலகோடி மதிப்புள்ள ஐம்பொன் சுவாமிசிலைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை கரந்தை புதுக்குளம் ஜெயின் முதல் தெருவில் ஜெயின் சமூகத்தினருக்கான ஆதீஸ்வரர் கோயில் உள்ளது. 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலை அப்பகுதியை சேர்ந்த ஜெயின் சமூகத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கோயில் குருக்கள் ஜலேந்திரன் தனது சொந்த ஊரான மன்னார்குடிக்கு சென்று விட்டு நேற்று காலை கோயிலை திறக்க வந்தார். அப்போது கோயிலின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அவர் பின்புறமாக சுற்றி வந்து பார்த்தார். அப்போது மர்ம நபர்கள் பின்னால் உள்ள காம்பவுண்டு சுவரை ஏறிக்குதித்து உள்ளே சென்று சிலைகளை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதில் 3 அடி உயர ஐம்பொன்னால் ஆன ஆதீஸ்வரர் சிலை, ஒரு அடி உயர 24வது தீர்த்தங்காரர் சிலை(தாமிரம்), முக்கால் அடி உயர நவக்கிரக தீட்சதர் வெண்கல சிலை, நவதேவதா வெண்கல சிலை 1, அரை அடி உயர நதீஸ்வரர் 1, ஒன்றரை அடி உயர ஜினவாணி 1, ஒன்றரை அடி உயர ஜோலமணி 1 உள்ளிட்ட 8 சிலைகள் திருட்டு போய் உள்ளது.

திருட்டு போன சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. சுவாமி சிலைகள் இருந்த ஒவ்வொரு கருவறையின் கதவு பூட்டுகளையும் மர்ம நபர்கள் காஸ் வெல்டிங் மூலம் உடைக்கப்பட்டு கைவரிசை காட்டியுள்ளனர். கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் நுறை பொருத்திய ஸ்பிரே செய்து கேமராக்களில் காட்சிகள் பதிவு ஆகாதபடி சாதுர்யமாக செயல்பட்டுள்ளனர். மேலும் கொள்ளை சம்பவத்தை சாமர்த்தியமாக முடித்து திரும்பிய அவர்கள் கோயிலின் பின்பகுதியில் உள்ள கேட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்து 200 மீட்டர் தூரமுள்ள வடவாறு கரை வரை மிளகாய் பொடியை தூவிவிட்டு சென்றுள்ளனர்.

இதுபற்றி கோயில் குருக்கள் ஜலேந்திரன் அறங்காவலர் அப்பாண்டேராஜனுக்கு தகவல் கொடுத்தார். அறங்காவலர் இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்தார். தஞ்சை எஸ்பி மகேஸ்வரன், டிஎஸ்பி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், எஸ்ஐ சுகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு நடத்தினர். போலீஸ் நாய் சிறிது தூரம் ஓடிச்சென்றதே தவிர, மிளகாய் பொடி தூவப்பட்டு கிடந்ததால் எந்தவித அடையாளமும் காட்டவில்லை. கைரேகை நிபுணர்களும் ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Imbon Swami ,Tanjore ,robbery , Statues, robbery
× RELATED திருப்பரங்குன்றம் அருகே திருள்ளுவர்...