×

தமிழக மக்கள் ஹைட்ரோகார்பன் போன்ற நாசகாரத் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதிக்க மாட்டார்கள்: வைகோ

சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். திட்டத்தை செயல்படுத்த மக்கள் கருத்தை கேட்க மாட்டோம் என மத்திய அரசு அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது. மேலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் காவிரி படுகை மாவட்ட மக்கள் வாழ்வாதாரத்தை பறிகொடுக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார். காவிரி வடிநிலப் படுகையில் ஓஎன்ஜிசி நிறுவனம் 37 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்குத் திட்டம் வகுத்துள்ளது.

காவிரிப் படுகை மாவட்டங்களில் மத்திய பாஜக அரசு செயல்படுத்த முனைந்துள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொதுமக்களும், விவசாயிகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 41 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும், மரக்காணத்திலிருந்து வேளாங்கண்ணி வரையில் 5099 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு, தனியார் நிறுவனமான வேதாந்தா குழுமம் மற்றும் ஓஎன்ஜிசி பொதுத்துறை நிறுவனத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது; ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஆய்வு நடத்த கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 10-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வேதாந்தா குழுமம் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது. கடந்த 2019 டிசம்பர் 5-ம் தேதி ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பான கேள்வியை மாநிலங்களவையில் நான் எழுப்பினேன். தமிழக மக்கள் ஹைட்ரோகார்பன் போன்ற நாசகாரத் திட்டங்களைச் செயற்படுத்துவதை ஒருகாலும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என்பதை மத்திய பாஜக அரசும், தமிழக அரசும் உணர வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.

Tags : Vaiko ,Tamil Nadu , People of Tamil Nadu, Hydrocarbon, Permits, Vaiko
× RELATED பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி.....