பொங்கல் கொண்டாட்டம் நிறைவு பஸ், ரயில்வே ஸ்டேஷன்களில் கூட்டம் அலைமோதியது: பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் நிறைவடைந்ததையடுத்து ஏராளமானோர் நேற்று சென்னைக்கு திரும்பினர். இதனால் பஸ், ரயில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  பொங்கல் கொண்டாட்டத்திற்காக, சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்கள், ரயில்கள், ஆம்னி பேருந்துகளில் வாயிலாக சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயணித்துள்ளனர். இதனால் கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி நகராட்சி பேருந்து நிலையம், கே.கே.நகர் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம் ஆகிய  இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில்நிலையங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்ற பலரும் மீண்டும் சென்னைக்கு திரும்ப துவங்கி உள்ள நிலையில் நேற்றும், நேற்றுமுன்தினமும் அதிகமாக இருந்தது. இவர்களின் வசதிக்காக பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு கடந்த 16ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சேலம், மதுரை, திருச்சி, தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலிருந்து திருப்பூர் மற்றும் கோயம்புத்தூருக்கும், சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கரூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலிருந்து பெங்களூருக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து சாலைகளிலும் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்பட்டது. ஆங்காங்குள்ள சுங்கச்சாவடிகளில், ஒரே நேரத்தில் ஏராளமான பயணிகள் பயணித்த காரணத்தினால் வாகனங்கள் தேங்கி நின்றது. இதேபோல் பலஇடங்களில் மேம்பாலம் கட்டும் பணி நடப்பதாலும், வாகனங்கள் வேகமாக பயணிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அவை ஊர்ந்தவாறே சென்றது. குறிப்பாக கோயம்பேடு, எழும்பூர், சென்ட்ரல் ரயில்நிலையங்களில் கூட்டம் மிகுந்து காணப்பட்டது. இதேபோல் சம்மந்தப்பட்ட இடங்களுக்கு வந்தவர்கள் மாநகரின் பிற இடங்களுக்கு செல்வதற்கு எம்டிசி பஸ்களையும், ரயில்களையும், மெட்ரோ ரயில்களையும் பயன்படுத்தினர்.

Related Stories: