இணையதளத்தில் 10, 12ம் வகுப்பு தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு: சிபிஎஸ்இ அறிவிப்பு

சென்னை: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட்டுகள் சிபிஎஸ்இ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  10ம் வகுப்பு மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் இணைய  தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து தர வேண்டும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு கட்டமாக நடக்க இருக்கிறது. தொழில் கல்வி படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள் தனியாகவும், முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் தனியாகவும் நடக்க இருக்கிறது.  10ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 26ம் தேதி தொடங்கி மார்ச் 18ம் தேதி முடிய உள்ளன.

இந்நிலையில்,  10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் ஜனவரி இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்து இருந்தது. அதன்படி  ஹால்டிக்கெட்டுகள் சிபிஎஸ்இ இணைய தளமான cbse.nic.inல் வெளியிடப்பட்டுள்ளன. அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இணைய தளத்தில் இருந்து 10ம் வகுப்பு ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து தர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  பள்ளிகள் மூலம் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகள் மூலம் ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்படும். அந்தந்த பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் நிர்வாகத்தினர் ஹால்டிக்கெட் வழங்க ஏற்பாடுகளை செய்துள்ளனர். இது தவிர தனித் தேர்வர்களாக பதிவு செய்துள்ள மாணவர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை சிபிஎஸ்இ இணைய தளத்தில் இருந்து தாங்களே நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

Related Stories: