நடப்பாண்டில் இலக்கை அடைய முடியாமல் தவிப்பு 3 மாதங்களில் 6 ஆயிரம் கோடி வசூல் செய்வது எப்படி?: பதிவுத்துறை ஊழியர்கள் குழப்பம்

சென்னை: பத்திரப்பதிவுத்துறையில் 3 மாதங்களில் ரூ.6 ஆயிரம் கோடி  வசூல் செய்வது எப்படி? என்பது தெரியாமல் ஊழியர்கள் குழப்பத்தில் தவித்து வருகின்றனர். பத்திரப்பதிவுத்துறையின் மூலம் வீடு, விளை நிலங்கள் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதை தவிர்த்து திருமணம், சிட்பண்ட், சங்க பதிவு மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ரூ.8 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. இந்த வருவாயை பெருக்கும் வகையில் கடந்த 2012ல் புதிதாக வழிகாட்டி மதிப்பு அமலுக்கு வந்தது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வரை வருவாய் எட்டும் என எதிர்பார்த்தது. ஆனால், வழிகாட்டி மதிப்பு குளறுபடியால் ரூ.8 ஆயிரம் கோடி வருவாய் இலக்கை அடைவதே கடும் சிரமமாக இருந்தது. இந்த நிலையில், கடந்த 2017ல் வழிகாட்டி மதிப்பு 30 சதவீதம் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த 2017-18ம் நிதியாண்டில் ரூ.9 ஆயிரம் கோடி வருவாய் இலக்கு எட்டியது. இதற்கிடையே கடந்த 2018 பிப்ரவரி முதல் ஆன்லைன் பத்திரபதிவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, பத்திரப்பதிவில் வேகம் எடுத்ததால் கடந்த 2018-19ம் நிதியாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி இலக்கு எட்டியது.

இதை தொடர்ந்து நடப்பாண்டில் ரூ.13,123 கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை பதிவுத்துறை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆன்லைன் பதிவில் உள்ள குளறுபடி உடனுக்குடன் சரி செய்யப்படாததால் பத்திரபதிவின் வேகம் குறைந்தது. அதே போன்று அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்யக்கூடாது என்று பதிவுத்துறைக்கு டிடிசிபி அறிவுரை வழங்கியுள்ளது. ஆனால், அந்த மனைகளுக்கு அங்கீகாரம் தருவதில் டிடிசிபி காலதாமதம் செய்து வருகிறது. மேலும், பதிவு கட்டணமும் அதிகமாக இருப்பதால் விற்பனை பத்திரம், தானம், செட்டில்மென்ட் பத்திரபதிவும் குறைந்து விட்டது. இதனால், கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை பதிவுத்துறையால் ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே வருவாய் அடைய முடிந்துள்ளது. இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் ரூ.6 ஆயிரம் கோடி வருவாய் எட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் உயர்மதிப்பிலான பத்திரங்கள் முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும் என்றும், வருவாய் குறைவாக இருந்தால் சார்பதிவாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐஜி அலுவலகம் எச்சரித்துள்ளது. இருப்பினும், சார்பதிவாளர் அலுவலகங்களில் உயர்மதிப்பு பத்திரங்கள் குறைவாகவே பதிவாகி வருகிறது. இதனால், 3 மாதத்தில் ரூ.6 ஆயிரம் கோடி வசூல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் நடப்பாண்டில் இலக்கை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: