நிதி நெருக்கடியில் உச்சகட்ட தத்தளிப்பு: அரசு நிறுவனங்கள் அடுத்தடுத்து விற்பனை

மத்திய அரசின் நிதி நெருக்கடி நாளுக்கு நாள் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். ஒரு பக்கம் எதிர்பார்த்த அளவுக்கு ஜிஎஸ்டி வரி வருவாய் வரவே இல்லை; கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் அறிமுகமானதில் இருந்து மாத சராசரி ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் கடந்த 30 மாதங்களில் 9 மாதங்கள் மட்டுமே ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளது.  வரி வருவாய் தான் வரவில்லை என்றால், ரூபாய் மதிப்பு தொடர் சரிவால் அன்னிய செலாவணியிலும் அடி விழுந்தது. ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி போன்றவற்றால் பல துறைகளில் உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டது. உள்நாட்டு உற்பத்தி விகிதம் (ஜிடிபி) சடசடவென சரிந்து 5 சதவீதம் தேறுமா என்ற நிலைக்கு அரசு தள்ளப்பட்டது.

இப்படி பல வகையிலும் அரசுக்கு நிதி நெருக்கடி முற்றியதால் திணறி வருகிறது. ரிசர்வ் வங்கி ஏற்கனவே தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தன் உபரி வருவாய் பணத்தை அரசுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் வரை வாரி வழங்கியது. மீண்டும் இந்தாண்டும் அரசுக்கு லட்சம் கோடிக்கு மேல் தரலாம் என்று பேச்சு  அடிபடுகிறது. அதுவும் போதாததால், பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் முடிவுக்கு அரசு வந்து விட்டது. குறிப்பாக, பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்த்து விடலாம் என்ற தகவல் அந்த நிறுவன ஊழியர்களுக்கு பெரும் பீதியை கிளப்பி விட்டது.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தையும் பல ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்ய தயாராகி விட்டது. இதன் சொத்து மதிப்பு வெளிச்சந்தை மதிப்புடன் கணக்கிட்டால் அரசுக்கு 9 லட்சம் கோடி நஷ்டம் என கூறப்படுகிறது. இதுபோல, ஏர் இந்தியாவும் ‘தாரை வார்ப்பு’ பட்டியலில் பல மாதம் காத்திருக்கிறது. ரயில்வே  போன்றவற்றில் தனியார் மயத்தை ஓசைப்படாமல் புகுத்தி, ₹2 லட்சம் கோடி பணத்தை திரட்ட அரசு தீவிரமாக உள்ளது. இப்படி பார்த்தால், கடந்த 27 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசை காட்டிலும் மிக அதிகமாக அரசு துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதில் பாஜ மிஞ்சி விட்டது என்று பொருளாதார நிபுணர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


Tags : crisis ,enterprises ,government agencies , In the financial crisis, peak adoption, government agencies, subsequent sales
× RELATED பொதுமக்கள் கோரிக்கை காரியாபட்டியில்...