ஹாரி-மேகன் தம்பதியினர் அரச பட்டம், வரி பணத்தை பயன்படுத்த மாட்டார்கள்: ராணி எலிசபெத் அறிவிப்பு

லண்டன்: ‘இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகும் ஹாரி-மேகன் தம்பதியினர் அரச பட்டம், பொதுமக்கள் வரிப்பணத்தை இனிமேல் பயன்படுத்த மாட்டார்கள்,’ என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பேரனும் சார்லஸ்-டயானாவின் இளைய மகனுமாக இருப்பவர் இளவரசர் ஹாரி. இவருடைய மனைவி மேகன். இவர்கள் இருவரும் இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகப் போவதாக சமீபத்தில் அறிவித்தனர். இது பற்றி ஹாரி மற்றும் முக்கிய குடும்ப உறுப்பினர்களுடன் ராணி எலிசபெத் அவசர ஆலோசனை நடத்தினார். எனினும், ஹாரி-மேகன் தம்பதியினர் தனது முடிவில் உறுதியாக இருந்தனர். இதனால், ஹாரி-மேகனின் முடிவுக்கு ஆதரவு தருவதாக ராணி எலிசபெத் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். இவர்கள் இருவரும் கனடாவில் குடியேற உள்ளனர்.

இது தொடர்பாக ராணி எலிசபெத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஹாரி - மேகன் ஆகியோர் இனிமேல் இளவரசர், இளவரசி எனும் பெருமைக்குரிய பட்டத்தை பயன்படுத்த மாட்டார்கள். மக்களின் வரிப் பணத்தையும் பெற மாட்டார்கள். கடந்த 2 ஆண்டாக இருவரும் தீவிரமாக ஆலோசித்ததையும், எதிர்கொண்ட சவால்களையும் அறிந்திருக்கிறேன். அவர்கள் வாழ்க்கையில் சுதந்திரமாக வாழ்வதற்கு நான் ஆதரவு தருகிறேன். ஹாரி-மேகன் தம்பதியினர் மகிழ்ச்சியாகவும், அமைதியான வாழ்கையும் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன். இந்த புதிய ஏற்பாட்டின்படி அதிகாரப்பூர்வ ராணுவ நியமனம் உள்ளிட்ட அரச கடமைகளில் இருந்து அவர்கள் வெளியேறுகிறார்கள். அரச கடமைகளுக்காக இருவரும் இனி மக்கள் பணத்தை பெற மாட்டார்கள். இவ்வாறு ராணி கூறியுள்ளார்.

Tags : Harry-Megan ,Queen Elizabeth Announces Queen Elizabeth ,Harry ,Meghan , Harry-Megan, Couple, Royal Degree, Tax Money, Queen Elizabeth
× RELATED அரச குடும்பத்தில் இருந்து விலக...