அபினவ் அபார சதம் தமிழகம் முன்னிலை

சென்னை: ரயில்வே அணியுடனான ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில், தொடக்க வீரர் அபினவ் முகுந்த்தின் அபார சதத்தால் தமிழக அணி வலுவான முன்னிலை பெற்றது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற ரயில்வே முதலில் பேட் செய்தது. தமிழக பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய அந்த அணி 39.1 ஓவரில் வெறும் 76 ரன்னுக்கு சுருண்டது. சவுரவ் சிங் 22, செராவத் 15, ஷிவேந்திரா சிங் 10* ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.

Advertising
Advertising

தமிழக பந்துவீச்சில் ஆர்.அஸ்வின், சித்தார்த் தலா 4 விக்கெட், நடராஜன் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய தமிழக அணிக்கு அபினவ் முகுந்த் - சூர்யபிரகாஷ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 156 ரன் சேர்த்தது. சூர்யபிரகாஷ் 50 ரன் (100 பந்து, 7 பவுண்டரி), முகுந்த் 100 ரன் (115 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி வெளியேறினர். காந்தி 8, கேப்டன் அபராஜித் 13 ரன்னில் பெவிலியன் திரும்ப, தமிழகம் முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்துள்ளது. தினேஷ் கார்த்திக் 57 ரன், இந்திரஜித் 2 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 6 விக்கெட் இருக்க, தமிழகம் 160 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று 2ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: