தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை: மத்திய அரசு திடீர் முடிவு: விவசாயிகள் கடும் அதிர்ச்சி

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை  செயல்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுக்கு  மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விலக்கு அளித்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காவிரிப் படுகையை இரண்டு மண்டலங்களாகப் பிரித்து மொத்தம் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு கடந்த ஆண்டு மே மாதம் அனுமதி அளித்திருக்கிறது. பிரிவு 1ல், விழுப்புரம், புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட உள்ளது. பிரிவு 2ல் கடலூர் முதல் நாகப்பட்டினம் வரையுள்ள பகுதிகளில் 158 கிணறுகளும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ைஹட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. ஹைட்ரோ கார்பன் எடுக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மத்திய அரசு இறங்கியது. இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திட்டத்திற்கு எதிராகவும், திட்டத்தை கைவிட கோரியும்  விவசாயிகள், பொதுமக்கள் சாகும்வரை போராட்டம், வயல்களில் இறங்கி போராட்டம், மனித சங்கிலி போராட்டம் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள், பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர். பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து ஹைட்ேரா கார்பன் எடுப்பதற்கான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியைக் குறைக்கும் வகையில் உள்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதுவரை மொத்தம் 4 முறை ஏலங்கள் நடத்தப்பட்டு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 5வது ஏலத்திற்கான அறிவிப்பு கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக மார்ச் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 19,789 சதுர கிமீ பரப்பளவில் 11 ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான உரிமங்கள் இந்த 5வது ஏலத்தில் வழங்கப்பட உள்ளன. இவற்றில் 4,064.22 சதுர கிமீ பரப்பளவு உள்ள ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட இருக்கிறது.

புதுச்சேரியில் தொடங்கி காரைக்கால் வரையிலான ஆழ்கடல் பகுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடலூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் கடற்பகுதியை ஒட்டியுள்ள நிலப்பகுதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதற்கு உத்தரவாதமும் இல்லை. மேலும், இந்த திட்டத்தின் மூலம் எடுக்கப்படும் ஹைட்ரோ கார்பன் வளங்களைக் கொண்டு வர விளைநிலங்களில் குழாய்கள் புதைக்கப்படும் என்பதால், அது விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோருவதிலிருந்து  கடற்பகுதியில் துளையிடுதலை மேற்கொள்ள விரும்பும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் விலக்கு அளித்துள்ளது. அனுமதி விலக்கு என்பது கரையோர மற்றும் கடல் துளையிடும் ஆய்வுகளுக்கானது. கிணறுகளை தோண்டும்போது கடலோரத்தில் நில அதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

தற்போது, சுற்றுச்சூழல் ஆய்வுகள் (ஏஐஏ) திட்டத்தைத் தயாரிக்க திட்ட ஆதரவாளர்கள் ‘’ஏ’’ வகை எனப்படும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் நடத்திய பின்னர்தான் அதற்கு அனுமதி அளிக்கப்படும். மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிபுணர்களின் குழு, இதை ஆராய்ந்து அனுமதி தரும். இவ்வாறு இருக்க ‘ஏ’ வகை ஆய்வு திட்டங்களுக்கு பதிலாக புதிய திருத்தங்கள் செய்யப்பட்டு ஆய்வு திட்டங்களை ‘பி 2’ வகைக்கு மத்திய அரசு மாற்றியுள்ளது. இதனால், சுற்றுச்சூழல் தொடர்பான முன்அனுமதி முறையில் விலக்கு ஏற்பட்டுள்ளது. மக்களிடம் கருத்து கேட்கவும் அவசியமும் இல்லை. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மேற்பார்வை இல்லாததால் கடலோர சூழலியல் சிக்கல்களை சந்திக்கும் என்று, டெல்டா பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மத்திய அரசின் இந்த புது அறிவிப்புக்கு எதிர்ப்பு மீண்டும் எதிர்ப்பு கிளம்ப தொடங்கியுள்ளது. காவிரி டெல்டாவை பாலைவனமாக்கி விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் இத்த திட்டத்தை கைவிட வேண்டும். அது மட்டுமல்லாமல் இந்த அனுமதி என்பது எதிர்கால சமுதாயத்தையும், தமிழகத்தையும் மிக மோசமான சுற்றுச்சூழல் ஆபத்துகளுக்கு உள்ளாக்கும். எனவே, எக்காரணத்தை கொண்டும் இத்திட்டத்ைத கொண்டுவர கூடாது என்ற குரல் வலுக்க தொடங்கியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக மீண்டும் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள், பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால், டெல்டா மாவட்டங்களில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,government , Hydrocarbon project , Tamil Nadu, environmental clearance, central government, sudden decision
× RELATED மக்களுக்காக அதிமுக அரசு எதுவும்...