அறுவடைக்கு தயாரான நிலையில் திடீர் கனமழை ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர் சேதம்: கும்பகோணம் விவசாயிகள் வேதனை

கும்பகோணம்: கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பெய்து வரும் திடீர் மழையால், சம்பா தாளடி பயிர்களில் உள்ள நெல்மணிகள், அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். தஞ்சை மாவட்டத்தில் சம்பா தாளடி பயிருக்கு சுமார் 2 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 90 சதவீதம் நடவுப்பணிகள் நடைபெற்றது. கும்பகோணம் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விதை தெளித்து நடவு செய்திருந்தனர். பயிர்களுக்கு போதிய யூரியா உரம் கிடைக்காமல், கூடுதல் விலை கொடுத்து யூரியா விலைக்கு வாங்கி, வயலுக்கு தெளித்து, அழியும் தருவாயில் இருந்த நெற்பயிரை காப்பாற்றினர். இந்நிலையில் கடந்த வாரத்தில் பலத்த மழையினால் கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம், தாராசுரம், முழையூர், தேனாம்படுகை, சுவாமிமலை, அய்யம்பேட்டை, திருவிடைமருதூர், திருப்பனந்தாள் உள்ளிட்ட சம்பா தாளடி பயிர்கள், மழைநீரில் முழ்கியது. இருப்பினும் மனம் தளராத விவசாயிகள் தண்ணீரை வடிய வைத்து நெல்களை அறுவடைக்கு ஏற்ற வகையில் கொண்டு வந்தனர்.

தற்போது, நேற்று முன்தினத்தில் இருந்து கும்பகோணம் பகுதியில் பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து கிடக்கிறது. இதனால் நெல்மணிகள் உதிர்ந்து முளைத்து விடும் அவல நிலையில் உள்ளது. அனைத்து வயல்களிலும் தண்ணீர் வடியாமல் மழை நீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மழை நீர் வடியும் வகையில் வாய்க்கால்களை தூர் வார வேண்டும், தவறும் பட்சத்தில் சம்பா தாளடி பயிர்கள் நாசமாகிவிடும். இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என விவாயிகள்  தெரிவித்துள்ளனர்.

Related Stories: