சிவகங்கை அருகே மஞ்சு விரட்டு, அரியலூரில் ஜல்லிக்கட்டு காளை முட்டி இருவர் பலி: 100 பேர் காயம்

சிவகங்கை:  சிவகங்கை மாவட்டம், கண்டுப்பட்டியில் புனித அந்தோணியார் ஆலய பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான வீரர்கள் காளைகளை அடக்க  களத்தில் இறங்கினர். காளைகள் முட்டியதில்  66 பேர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  மேலும், மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த திருப்புத்தூர் அருகே கோவில்பட்டியை  சேர்ந்த விஜயராகவன்(48) மீது காளை முட்டியது. இதில் படுகாயமடைந்த அவர், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மஞ்சுவிரட்டில் அவிழ்த்து விடப்பட்ட  மதுரை மாவட்டம், மேலூர் அருகே பனையபட்டியை சேர்ந்த கோயில் காளை, கண்டுப்பட்டி அருகே ரயில்வே  தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி  உயிரிழந்தது.

அரியலூர் ஜல்லிக்கட்டில் வாலிபர் பலி:

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே கோக்குடி கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலய பொங்கல் விழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து 642 காளைகள் பங்கேற்றன. 250 வீரர்கள் சுழற்சி முறையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 37 பேர் காயமடைந்தனர். கோக்குடி ஜல்லிக்கட்டில் மாட்டின் உரிமையாளருடன் வந்திருந்த லால்குடி போஜிரான்(25) பின்னால் வந்த காளை முட்டியதில் பலியானார்.

Related Stories: