சாலை விபத்தில் நடிகை ஷபானா ஆஸ்மி படுகாயம் கார் டிரைவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு: கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டியதாக குற்றச்சாட்டு

மும்பை: சாலை விபத்தில் நடிகை ஷபானா ஆஸ்மி காயமடைந்த சம்பவம் தொடர்பாக அவரது கார் டிரைவருக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஷபானா ஆஸ்மிக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஷபானா ஆஸ்மியும் அவரது கணவரும் கவிஞருமான ஜாவேத் அக்தரும் நேற்று முன்தினம் தனித்தனி காரில் புனே சென்று கொண்டிருந்தனர். ஷபானா பயணம் செய்த டாடா சபாரி காரை கம்லேஷ் காமத்(38) என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார். மும்பையில் இருந்து 60 கிமீ தொலைவில், ராய்கட் மாவட்டத்தில் உள்ள காலாப்பூர் அருகே சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்றை டிரைவர் கம்லேஷ் காமத் முந்தி செல்ல முயன்றபோது லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் ஷபானா ஆஸ்மி படுகாயமடைந்தார். டிரைவர் கம்லேஷ் காமத் லேசான காயத்துடன் தப்பி விட்டார்.

படுகாயமடைந்த ஷபானா ஆஸ்மி உடனடியாக மீட்கப்பட்டு நவி மும்பையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் அந்தேரியில் உள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஷபானாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சந்தோஷ் ஷெட்டி கூறினார். அவர் மேலும் கூறுகையில், ‘‘ஷபானாவின் உடல்நிலை தேறி வருகிறது. அவர் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். அவருக்கு அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை. மருத்துவ சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றார். இதற்கிடையே, ஷபானாவின் கார் டிரைவர் கம்லேஷ் காமத்துக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனினும், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர் வாகனம் ஓட்டியபோது மது அருந்தியிருக்கவில்லை என தெரியவந்துள்ளது.Tags : Shabana Azmi ,car driver ,road driving accident ,death , Actress Shabana Azmi, Injury, Police, Case, Vehicle
× RELATED குரூப்-4 விடைத்தாள்களை மாற்ற உதவிய...