சுவாமிகள் தீர்த்தவாரியுடன் கடலூர் மாவட்டத்தில் ஆற்று திருவிழா: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஆற்றுத் திருவிழா இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி சுவாமிகள் தீர்த்தவாரியும் நடந்தது. கடலூர் மாவட்டத்தில் பெண்ணையாறு, கெடிலம் ஆறு, மணிமுத்தாறு, வெள்ளாறு ஆகிய பகுதிகளில் இன்று ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கடலூர் பெண்ணையாற்றில் நடைபெற்ற ஆற்றுதிருவிழாவில் கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும் புதுவை மாநிலப்பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லக்குகளிலும் டிராக்டர்கள், மாட்டு வண்டிகளிலும் அலங்கரிக்கப்பட்ட சாமி சிலைகள் கடலூர் பெண்ணையாற்றுக்கு தீர்த்தவாரிக்காக கொண்டுவரப்பட்டு புனித நீராடல் நடந்தது.

அதனை தொடர்ந்து கரைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் சுவாமி வழிபாடு செய்தனர். கடலூர் அருகே பெரிய காட்டுப்பாளையம் எல்லையம்மன், பெரிய கங்கனாங்குப்பம் ஏழுகரக மாரியம்மன், பிள்ளையார்குப்பம் ஸ்ரீ முருகர், கீழ் பரிக்கல்பட்டு மாரியம்மன், வண்ணான்குளம் முத்துமாரியம்மன், மற்றும் தாழங்குடா, பச்சையாங்குப்பம், வண்டிப்பாளையம் ஸ்ரீ சுப்பிரமணியர், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் புதுவை மாநிலம் பாகூர், சேலியமேடு, கன்னிக்கோயில் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் கோயில் சாமிகள் மேள தாளங்களோடும் தாரைதப்பட்டையோடு வீதியுலாவாக கடலூர் பெண்ணையாற்று திருவிழாவிற்கு பக்தர்களால் கொண்டுவரப்பட்டன.

கடலூர் பெண்ணையாற்று விழாவில் டி.எஸ்.பி சாந்தி தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகளை அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. 108 ஆம்புலன்ஸ் சேவை, தீயணைப்புத் துறை வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் என்பதால் ஆற்றுத் திருவிழாக்களில் சிறப்பு போலியோ முகாம்கள் அமைக்கப்பட்டு ஆற்றுத் திருவிழாவிற்கு வந்த 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் மேலும் பட்டாம்பாக்கம், பண்ருட்டி, கண்டரக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் தென்பெண்ணையாற்றிலும், திருவந்திபுரம், வானமாதேவி பண்ருட்டி உள்ளிட்ட இடங்களில் கெடிலம் ஆற்றிலும் ஆற்றுத் திருவிழா உற்சாகமாக நடைபெற்றது.

Related Stories: