சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை: ஷீரடியில் முழு அடைப்பு...கோயில் வழிபாட்டில் பாதிப்பில்லை

ஷீரடி: சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சையால், ஷீரடியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஆனால், பக்தர்கள் கோயில் வழிபாட்டில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மகாராஷ்டிர மாநிலம், ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு வெளிமாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் சாய்பாபா பக்தர்கள்  கோயிலுக்கு வந்து செல்கின்றனர். அந்த மாநிலத்தில் தற்போது முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில்  சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், சாய்பாபாவின் பிறந்த இடமாக கூறப்பட்டு வரும் பார்பானி மாவட்டம் பாதிரி நகரை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றவிருப்பதாக முதலமைச்சர்  உத்தவ் தாக்கரே சமீபத்தில் அறிவித்தார்.

மேலும், அந்த நகரின் வளர்ச்சிக்காக ரூ.100 கோடி ஒதுக்கப் போவதாகவும் கூறியிருந்தார். அப்படி பாதிரி நகரை சாய்பாபாவின் பிறந்த இடமாக கருதி சுற்றுலா தலமாக மாற்றினால், ஷீரடியின் மதிப்பு குறைந்து போய் விடும் என்று உள்ளூர்  மக்கள் ஆவேசமடைந்தனர். இதையடுத்து, முதலமைச்சரின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அதன்படி, இன்று முதல் ஷீரடியில் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படுகிறது.

முன்னதாக, சாய்பாபா கோயிலும் இன்று மூடப்படும் என்று நேற்று தகவல்கள் வெளியாகின. ஆனால், இதை சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் தலைமை செயல் அதிகாரி தீபக் மதுக்குர் முக்லிகர் மறுத்தார். ‘சாய்பாபா கோயில் மூடப்படாது,  வழக்கம் போல் திறந்திருக்கும்’ என்று அவர் அறிவித்தார். ஆனால், இன்று ஷீரடி நகரில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. எனினும், சாய்பாபா கோயில் வழக்கம் போல் திறந்திருக்கிறது. பக்தர்களின் கூட்டமும் குறையவில்லை. இதனால், சில  பகுதிகளில் மட்டும் ஓரிரு கடைகள் திறந்திருக்கின்றன. அசம்பாவிதங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: