இறைச்சி, மீன் கடைகளில் அலைமோதிய கூட்டம்

சேலம்: பொங்கல் பண்டிகை கடந்த 15ம்தேதி கொண்டாடப்பட்டது. 2ம்நாளில்  மாட்டு பொங்கல் பண்டிகையும், 3வதுநாளாக நேற்று முன்தினம் காணும் பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்பட்டது. காணும்பொங்கல் அன்றுமக்கள் வீடுகளில் அசைவம்  சமைத்து உண்பது வழக்கம். ஆனால் இந்தஆண்டு வெள்ளிக்கிழமை காணும் பொங்கல் வந்ததால் பெரும்பாலான மக்கள் அன்று அசைவத்தை தவிர்த்தனர். இதற்கு பதிலாக ஞாயிறுக்கிழமையான இன்று அசைவம் சமைத்து சாப்பிட்டனர். இதனால் வழக்கமான ஞாயிற்றுகிழமைகளை விட இன்று இறைச்சிக்கடைகளில் விற்பனை அதிகமாக இருந்தது.

மற்ற ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் வியாபாரத்தைவிட, இன்று 20 முதல் 30 சதவீதம் விற்பனை அதிகமாக இருந்ததாக வியாபாரிகள் ெதரிவித்தனர். இதுபற்றி சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த இறைச்சி வியாபாரிகள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை முடிந்து, அடுத்த 2வது நாளில் அசைவம் எடுப்பார்கள். நடப்பாண்டு பொங்கல் பண்டிகையில் கரி நாள் வெள்ளி கிழமை வந்ததால் பெரும்பாலோனோர் அசைவம் எடுக்கவில்லை. இதனால் அன்று கூட்டம் இல்லாமல் இறைச்சி விற்பனை சரிந்தது. வழக்கமாக 10 ஆடுகள் விற்பனையாகும் கடையில் இரண்டு, மூன்று ஆடுகள் மட்டுமே வியாபாரம் நடந்தது.

இதேபோல் கோழி இறைச்சி, மீன் விற்பனையும் சரிந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் அதிகளவில் இறைச்சி எடுத்தனர். வழக்கமாக 10 ஆடு விற்பனை ஆகும், கடைகளில் 12 ஆடுகள் விற்பனையானது. அதேபோல் கோழி இறைச்சிக்கடைகளில் வழக்கத்தைவிட 30 சதவீதம் விற்பனை அதிகமாக காணப்பட்டது. மீன் கடைகளிலும் விற்பனை அதிகமாக இருந்தது. ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூ 550 முதல் ரூ600 எனவும், கறிக்கோழி இறைச்சி ரூ160 முதல் ரூ180 எனவும், மீன் ரூ 180 முதல் ₹600 வரையும் விற்பனை செய்யப்பட்டது, என்றனர்.


Tags : stores ,fish stores , Meat, Fish Shop
× RELATED உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இறைச்சிக்கடைகளில் ஆய்வு