தேர்வை எதிர்கொள்வது குறித்து மாணவர்களுக்கான வழிகாட்டுதல்: பரீட்சா பே சர்ச்சா 2020-ல் பிரதமர் மோடி நாளை உரை

டெல்லி: ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு நடக்கும் பொதுத்தேர்வின் போது மாணவர்கள் பதற்றமாக காணப்படுவது வழக்கம். அதனால், அவர்கள் தேர்வை சரியாக எழுத முடியாமல் போகிறது. மாணவர்கள் இடையே உள்ள  அச்சத்தை போக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பள்ளி  மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வு நடக்க இருப்பதை அடுத்து, பிரதமர் மோடி கலந்துரையாடல் நிகழ்ச்சி கடந்த 16-ம் தேதி மாட்டு  பொங்கல் அன்று நடத்த திட்டமிடப்பட்டது.

Advertising
Advertising

இது தொடர்பாக மத்திய மனித மேம்பாட்டுத்துறை அமைச்சகம், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வை நம்பிக்கையுடனும், பயமின்றியும் எழுதும் வகையில் ‘‘பரீட்சா பே சர்ச்சா 2020’’ என்ற  நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி பள்ளி மாணவர்களுடன் ஜனவரி 16ம் தேதி டெல்லியில் உள்ள தல்காதோரா ஸ்டேடியத்தில் உரையாற்றுகிறார். இதில், 9ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவ, மாணவியர் இந்த நிகழ்ச்சியை  பார்க்கும் வகையில் வைக்க வேண்டும் குறிப்பிடப்பட்டது. இந்த நிகழ்ச்சி நிரல்படி, தமிழகத்தில் ஜனவரி 16ம் தேதி பொங்கல் பண்டிகை. அதற்காக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும். அப்படி இருக்க  மாணவர்கள் எப்படி பள்ளிக்கு வர முடியும் என்று பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன.

இதனையடுத்து, பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக 16-ந் தேதி மாணவர்களுடனான பிரதமர் மோடியின் கலந்துரையாட இருந்த நிகழ்ச்சி 20-ந் தேதி (திங்கட்கிழமை) நாளை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளி இறுதித்தேர்வு எழுத உள்ள மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, நாளை காலை 11 மணிக்கு உரையாட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தேர்வை எதிர்கொள்வது குறித்து மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களை பிரதமர் வழங்குவார் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மனிதவள  மேம்பாட்டு அமைச்சகம், பிரதமருடனான கலந்துரையாடல் குறித்த தங்கள் எதிர்பார்ப்புகளை தெரிவிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

மாணவர்களின் மன அழுத்தத்தை போக்குவதே பிரதமர் மோடியின் நோக்கம் என்றும் மனிதவள மேம்பாட்டு  அமைச்சகம் கூறியுள்ளது. மோடியின் பேச்சை, தூதர்ஸன் தொலைக்காட்சி, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் யூட்யூப் பக்கம், நமோ ஆப் ஆகியவற்றின் வழியாக நேரலையில் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: