கரூர் தாந்தோணிமலை, சணப்பிரட்டியில் பாதாள சாக்கடை திட்டம் துவங்குவது எப்போது?: நீண்ட நாட்களாக பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஒருங்கிணைந்த நகராட்சியாக மாற்றம் செய்யப்பட்டு 10 ஆண்டுகள் கடந்த நிலையில், இதுநாள் வரையிலும் நகராட்சியில் உள்ள தாந்தோணிமலை, சணப்பிரட்டி ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படாததால் பல்வேறு பாதிப்புகளை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். தமிழகத்தின் மைய மாவட்டமாக கரூர் மாவட்டம் உள்ளது. கடந்த 1969 முதல் 1983ம் ஆண்டு வரை முதல் நிலை நகராட்சியாகவும், 1983க்கு பின் தேர்வு நிலை நகராட்சி, 1988ம் ஆண்டில் இருந்து சிறப்பு நிலை நகராட்சியாகவும் செயல்பட்டது. அப்போதைய நகராட்சியின் பரப்பளவு 6.03 ச.கி மீட்டராக இருந்தது. கரூர் நகராட்சியில் 32 வார்டுகள் இருந்தன. இந்த நிலையில்தான் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டு தலைவர்கள், உறுப்பினர்கள் பதவியில் இருந்தனர்.

கரூர் நகராட்சியுடன் இனாம்கரூர், தாந்தோணி, சணப்பிரட்டி ஆகிய பகுதிகள் இணைக்கப்படுவதற்கு முன்பு கடந்த 2003-2004ல் கரூரில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டது. அப்போது, கரூர் நகரத்தை ஒட்டியுள்ள இனாம்கரூர் நகராட்சி பகுதியிலும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டு அதற்கான பணிகள் அந்த காலக்கட்டத்திலேயே மேற்கொள்ளப்பட்டன.கரூர் நகராட்சியை மேம்படுத்தும் வகையிலும், விரிவுபடுத்தும் வகையிலும் கடந்த 2011ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக, கரூர் நகராட்சியுடன், இனாம்கரூர் நகராட்சி, தாந்தோணிமலை நகராட்சி மற்றும் சணப்பிரட்டி பஞ்சாயத்து ஆகியவற்றை இணைத்து 48 வார்டுகள் கொண்டு வரப்பட்டு ஒருங்கிணைந்த நகராட்சியாக அறிவிக்கப்பட்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

அந்த தேர்தலில் தலைவர் பதவியை அதிமுக சேர்ந்தவர் வெற்றி பெற்று ஐந்தாண்டுகள் தலைவராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில் இருந்தே தாந்தோணிமலை, சணப்பிரட்டி ஆகிய பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், அந்த காலக்கட்டத்திலும் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.இதனைத் தொடர்ந்து, 2016ம் ஆண்டு திரும்பவும் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் நடைபெற்ற சமயத்தில் தேர்தல் ரத்தானது. இதனைத் தொடர்ந்து கடந்த நான்கு ஆண்டுகளாக கரூர் நகராட்சியில் உள்ளாட்சி நிர்வாகிகள் யாருமில்லை. அதற்கு பதிலாக, நகராட்சி கமிஷனர்கள்தான் நகராட்சியை நிர்வாகித்து வருகின்றனர்.ஒருங்கிணைந்த கரூர் நகராட்சியில் உள்ள தாந்தோணிமலையில்தான் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட எஸ்பி அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் உட்பட அனைத்து முக்கிய அலுவலகங்களும் தாந்தோணிமலையில் உள்ளன. இதே போல், சணப்பிரட்டியிலும் கொசுவலை உற்பத்தி போன்ற முக்கிய தொழில் நிறுவனங்களும் உள்ளன.

இதன் காரணமாக, கடந்த ஐந்தாண்டுக்கும் மேலாக, தாந்தோணிமலை, சணப்பிரட்டி ஆகிய பகுதிகளில் நாளுக்கு நாள் புதிதாக குடியிருப்போர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில்தான் உள்ளன. மேலும், தாந்தோணிமலை, சணப்பிரட்டி ஆகிய பகுதிகளில் எல்லைப்பகுதிகள் விரிவாக்கம் செய்து, புதிதாக வீட்டு மனைகள் உருவாகுவதும், குடியிருப்பு வாசிகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலும் உள்ளன.ஆனால், இரண்டு பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் இல்லாத காரணத்தினால், பல பகுதிகளில் சாக்கடை வடிகால்களில் கழிவுகள் தேங்கி பல்வேறு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், அருகில் உள்ள கரூர் மற்றும் இனாம்கரூர் பகுதிகளில் இதுபோன்ற நிலை இல்லை. வளர்ந்து வரும் முக்கிய பகுதியாக உள்ள தாந்தோணிமலை, சணப்பிரட்டி ஆகிய பகுதிகளில்தான் நாளுக்கு நாள் இதுபோன்ற பிரச்னை அதிகளவு உள்ளன.

குறிப்பாக, தாந்தோணி நகரின் மையப்பகுதியான ராயனுர், வெங்கடேஷ்வரா நகர், மில்கேட் போன்ற பகுதிகளில் சாக்கடை வடிகால்கள் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த பணி தாமதம் காரணமாக சாக்கடை கழிவுகள் தேங்கி பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படடு வருகிறது. இதே போன்ற நிலைதான் சணப்பிரட்டி பகுதியிலும் உள்ளன.கரூர் நகராட்சியில் வளர்ந்து வரும் பகுதியாகவும், நியூசிட்டி என்ற புனைப்பெயருடன் உள்ள இந்த தாந்தோணிமலையில் இதுநாள் வரை பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம் கொண்டு வரப்படாததது அனைவரின் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், தாந்தோணிமலை, சணப்பிரட்டி ஆகிய இரண்டு பகுதிகளிலும் சேர்த்து 1லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த பகுதிகளில் வசித்து வருகின்றனர்.எனவே, தினம் தினம் கொசு உற்பத்தி காரணமாக பொதுமக்கள் அவதி, சாக்கடை கழிவுகள் தேக்கம் காரணமாக துர்நாற்றத்தால் அனைத்து தரப்பினர்களும் சிரமப்படுவது போன்ற பல்வேறு பிரச்னைகள் இந்த இரண்டு பகுதிகளிலும் நிலவி வருகிறது.

தாந்தோணிமலை பகுதியில் எங்கும் நிலையான அளவில் சாக்கடை வடிகால்கள் இல்லை. இதற்கு முக்கிய தீர்வு பாதாள சாக்கடை திட்டம் ஒன்றே தீர்வு எனக் கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாந்தோணிமலை, சணப்பிரட்டி ஆகிய பகுதிகளில் அந்த பகுதி மக்கள் நலன் கருதி பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் நகராட்சி கிட்டத்தட்ட மாநகராட்சியாக மாற்றப்படுவதற்கு தேவையான அனைத்து தகுதிகளும் உள்ளன. மக்கள் தொகை, தொழில் வளர்ச்சி போன்ற பல்வேறு காரணங்கள் அதிகளவு கொண்ட நகராட்சிகளில் ஒன்றாக கரூர் நகராட்சி விளங்கி வருகிறது. எனவே, மீதமுள்ள பகுதிகளான தாந்தோணிமலை, சணப்பிரட்டி ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும் பட்சத்தில் மாநகராட்சியாகவும் மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளது எனவும் கூறப்படுகிறது.

மேலும், கரூர் நகரப்பகுதியை ஒட்டியுள்ள ஆண்டாங்கோயில், காதப்பாறை போன்ற பஞ்சாயத்து பகுதிகளும் நகராட்சியின் அருகில் உள்ள அதிக வேகத்தில் வளர்ந்து வரும் பஞ்சாயத்து பகுதிகளாக விளங்கி வருகிறது.கரூர் நகராட்சி மாநகராட்சியாக மாற்றப்படும் பட்சத்தில், இதுபோன்ற பகுதிகளையும் இணைத்து மாநகராட்சியாக மாற்றம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.ஒருங்கிணைந்த நகராட்சியாக இருந்தாலும் இரண்டு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாத காரணத்தினால், மாநகராட்சியாக மாற்றப்படுவது, அம்ருத் திட்டம், ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டங்களில் கரூர் நகராட்சியும் கொண்டு வரப்பட்டு தேவையான நிதிகள் பெறப்படுவதற்கும் இந்த பாதாள சாக்கடை திட்டம் முழுமைப்படுத்த வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.கொசுவலை, டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பஸ்பாடி நிறுவனங்கள் போன்றவை கரூரை மையப்படுத்தி இருந்தாலும், கொசுவலை நிறுவனங்கள் மற்றும் பஸ்பாடி சம்பந்தப்பட்ட முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் தாந்தோணிமலையை மையப்படுத்தியே உள்ளது.

எனவே, இதுபோன்ற காரணங்களால், மாநகராட்சியாக மாற்றுவதற்கும், நகரம் மேலும் வளர்ச்சியடைவதற்கும் தடையாக இருந்து வருவதாக கூறப்படும் தாந்தோணிமலை, சணப்பிரட்டி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து கொண்டு வர வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

முக்கிய தொழில் நிறுவனங்கள்

தாந்தோணிமலை நிர்மலா பாலு கூறுகையில், அனைத்து அரசு அலுவலகங்களும் தாந்தோணிமலையில்தான் உள்ளன. இதே போல், முக்கிய தொழில் நிறுவனங்களும் தாந்தோணிமலையிலும், சணப்பிரட்டி பகுதியிலும் உள்ளன. இந்த இரண்டு பகுதிகளிலும் இதுநாள் வரை பாதாள சாக்கடை வசதி கொண்டு வரப்படாமல் உள்ளன. இதனால், பல்வேறு பகுதிகளில் சாக்கடை வடிகால்களில் கழிவுகள் தேக்கம், துர்நாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, கரூர், இனாம்கரூர் பகுதிகளில் சாக்கடை வடிகால் திட்டம் கொண்டு வரப்பட்டு பயன்பாட்டில் உள்ளது போல, வளர்ந்து வரும் பகுதியாகவும், நியூ சிட்டி என அழைக்கப்பட்டு வரும் தாந்தோணிமலையிலும், அருகில் உள்ள சணப்பிரட்டி பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து கொண்டு வருவதற்கு தேவையான ஏற்பாடுகளை நகராட்சியினர் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

திட்டப்பணிகள் துவங்க நடவடிக்கை

இது குறித்து நகராட்சி கமிஷனர் சுதா கூறுகையில், தாந்தோணிமலை, சணப்பிரட்டி ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறைவேற்றப்படும் வகையில் கன்சல்டிங் குழு நியமிக்கப்பட்டு, முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆரம்பிக்கப்பட்ட பணிகள் நிறைவடைந்த பிறகு பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

பாதாள சாக்கடையால் தூய்மை பெறும்

பொதுநல ஆர்வலர் ராயனூர் முருகேசன் கூறுகையில், கரூர், இனாம்கரூர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டு அமலில் இருந்தாலும், இன்றைக்கும் கரூர் நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடைகள் திடீரென உட்புறம் சரிந்து விழுவதும், பின்னர், போக்குவரத்து தடை செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதுமான நிகழ்வுகள் நடைபெறுகிறது.

எனவே, இதனை தாந்தோணிமலை, சணப்பிரட்டி பகுதிகளில் விரிவுபடுத்தும் போது, முறையான நபர்கள் பாதாள சாக்கடை திட்ட பணிகளை மேற்கொள்ள தேர்வு செய்து, பணிகளை வழங்க வேண்டும். இந்த பணிகள் முழுமை பெறும் போது, கரூர் நகராட்சி பகுதி முழுவதும் தூய்மை பெறும். அதைத்தான் தாந்தோணிமலை, சணப்பிரட்டி பகுதி மக்கள் எதிர்நோக்கியுள்ளனர் என்றார்.

Related Stories: