மாநகரின் நடுவே நிரம்பி வழியும் கழிவு நீர்: தொற்றுநோய் உருவாகும் அபாயம்: மக்கள் பீதி

கோவை: கோவை உக்கடம் கழிவு நீர் பண்ணையில், கழிவுநீர் நிரம்பி வழிவதால் தொற்றுநோய் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பீதியில் உள்ளனர். கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பாதாள சாக்கடை கழிவுநீரை சுத்திகரிக்க உக்கடம், ஒண்டிப்புதூர், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதிகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டது. இதில், மாநகராட்சி தெற்கு மண்டலம் 86-வது வார்டு உக்கடம் கழிவுநீர் பண்ணை வளாகத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையம் மட்டும் தற்போது செயல்பட்டு வருகிறது. இங்கு, அன்றாடம் சுமார் 3 கோடி லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

ஒண்டிப்புதூர் சுத்திகரிப்பு நிலையம் சோதனை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இங்கு, தினமும் 50 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. நஞ்சுண்டாபுரத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றதால், பணி பாதியில் நிறுத்தப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பணி துவங்கி நடந்து வருகிறது.நஞ்சுண்டாபுரம் சுற்று வட்டார பகுதியில் உள்ள சாக்கடை கழிவுநீர், குழாய் மூலம் உக்கடம் கழிவுநீர் பண்ணைக்கு கொண்டு வரப்பட்டு, இங்குள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படுகிறது. இந்த கழிவுநீர் பண்ணை, போதிய திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதால், கழிவுநீர் ஆங்காங்கே குளம்போல் தேங்கி கிடக்கிறது.இவை, அருகில் உள்ள ஜி.எம்.நகர், பிலால் நகர், பொன்விழா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகிறது. மேலும், இந்த கழிவு நீர் பொன்விழா நகர் சந்திப்பில் உள்ள மழை நீர் வடிகால் வாய்க்காலில் கலக்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர். கழிவுநீர் தேக்கம் காரணமாக, கொசு பெருக்கம் உருவாகி, டெங்கு, மலேரியா உள்ளிட்ட விஷக்காய்ச்சல் மற்றும் வயிற்று உபாதைகளினால் அவதியுறுகின்றனர்.

கோவை மாநகரில், ஸ்மாட்சிட்டி மேம்பாட்டு பணி என உக்கடம், வாலாங்குளம் உள்ளிட்ட குளக்கரை அழகுபடுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இக்குளக்கரை அருகில் உள்ள குடியிருப்புவாசிகளை கவனிக்க மாநகராட்சி நிர்வாகம் தவறிவிட்டது. இப்பகுதி மக்கள் உடல் உபாதையினால் அவதியுறும்போது, குளக்கரை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வது இப்பகுதி மக்களை கடும் கோபம் அடைய செய்துள்ளது. மாநகரின் மைய பகுதியில்  வழிந்தோடும் கழிவுநீர் பிரச்னைக்கு மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக தீர்வு காண வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இது குறித்து ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த பாட்ஷா கூறியதாவது: உக்கடம் பகுதியில் கழிவுநீர் பண்ணையில் கழிவு நீர், கழிவுகள் மற்றும் குப்பைகள் லாரிகள் மூலமாக தினசரி கொட்டப்படுகிறது. கழிவு நீர் மற்றும் கழிவுகள் அப்புறப்படுத்த போதுமான வசதியில்லாத காரணத்தால், அங்கேயே குளம்போல் தேங்கி உள்ளது. தேங்கிய கழிவு நீர் மற்றும் கழிவுகள் புல்லுக்காடு பொன்விழா நகர் சந்திப்பில் உள்ள மழை நீர் வடிகால் வாய்க்காலில், கலக்கிறது.

இந்த கழிவு நீர், பிலால் நகர், பிலால் எஸ்டேட் பின்புறம், பொன்விழா நகர், அற்புதம் நகர், அன்பு நகர் மற்றும் அருள் நகர் சாலை கடைசி வரை செல்கிறது. இந்த பகுதிகளில் குடியிருப்புகள் அதிகமாகவும், ஜனத்தொகை நெருக்கமாகவும் உள்ளது. 1000க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றன. இவர்கள் அனைவரும் சுகாதார சீர்கேட்டால் அவதியுறுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பாட்ஷா கூறினார்.

ஜமாஅத்தே இஸ்லாமிக் ஹிந்த் செயலாளர் அப்துல் ஹக்கீம் கூறியதாவது: உக்கடத்தில் மேம்பால பணிகள் நடந்து வருவதால், பாலக்காடு ரோடுக்கு பதிலாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகம் அருகே உள்ள சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கழிவு நீர் மற்றும் பல்வேறு வகையான கழிவுகளுக்கு மத்தியில் அவர்கள் பயனம் செய்வதால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். வீதியில் தேங்கி கிடக்கும் கழிவு நீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

பாதாள சாக்கடை குழாய்கள் வழியாக கழிவுநீர் கொண்டு வருவது மட்டுமின்றி, லாரிகள் மூலமாகவும் இப்பகுதிக்கு கழிவுநீர் கொண்டு வரப்படுகிறது. பிலால் நகர், பிலால் எஸ்டேட் பின்புறம், பொன்விழா நகர், அற்புதம் நகர், அன்பு நகர் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் சாக்கடை சுத்தம் செய்யவோ, குப்பைகளை அகற்றவோ வருவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். நோய் அதிகம் பரவி, மக்கள் பெருமளவில் பாதிக்கப்படும் முன் மாநகராட்சி நிர்வாகம் விழித்துக்கொள்வது நல்லது. இவ்வாறு அப்துல் ஹக்கீம் கூறினார்.கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: உக்கடம் கழிவுநீர் பண்ணையில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்படும் தண்ணீர் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும்போது, குழாய்களில் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக கழிவுநீர், வீதிகளில்  தேங்கியிருக்கலாம். இவை, உடனுக்குடன் சீர் செய்யப்பட்டு வருகிறது. மேற்கொண்டு, கழிவுநீர் தேங்காத வகையில் உக்கடம் கழிவுநீர் பண்ணையில் நீர் உந்து நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், ஒண்டிப்புதூர், நஞ்சுண்டாபுரம் பகுதிகளில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் முழு வீச்சில் செயல்பாட்டுக்கு வரும்போது, உக்கடம் கழிவு நீர் பண்ணைக்கு கொண்டு வரப்படும் கழிவு நீரின் அளவு வெகுவாக குறைக்கப்படும். இப்பகுதி மக்களிடம் சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு

வருகிறது. இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

Related Stories: