×

குறுகலான சாலை, நெரிசலை தீர்க்க வழியில்லை குமரியில் சாலை விபத்துகளால் உயிர் பலி அதிகரிப்பு: காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

நாகர்கோவில்: குமரியில் அதிகரிக்கும் விபத்துக்களை தடுக்க காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. குமரி மாவட்டத்துக்கு 2020 ம் ஆண்டு தொடக்கமே பேரதிர்ச்சியாக தான் அமைந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தில், ஒரே நாளில் மொத்தம் 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்கள் 6 பேரும் பைக்கில் வந்து உயிரிழந்தவர்கள் என்பது மிகப்பெரிய சோகம் ஆகும். உயிரிழந்த அனைவருமே ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அதுவும்  களியல் அருகே நடந்த விபத்தில் தொழிலாளர்கள் தான் பரிதாபமாக இறந்தனர். குமரி மாவட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க விபத்துக்களும், உயிர் பலிகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக 20 ல் இருந்து 45 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. கடந்த 10, 12 ஆண்டுகளுக்கு முன் வரை ஆண்டுக்கு 160, 170 என இருந்த இறப்பு விகிதம், பின்னர் படிப்படியாக அதிகரித்து ஆண்டுக்கு 200, 250 ஆக உயர்ந்துள்ளது.

2016ல் மட்டும் 307 பேர் விபத்தில் உயிரிழந்து இருக்கிறார்கள். 2017ல் 267 பேரும், 2018ம் ஆண்டு 221 பேரும் உயிரிழந்துள்ளனர். ஹெல்மெட் சோதனை, அதிக  அபராதம் என போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் கூட, விபத்துக்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. குறிப்பாக பைக்குகளில் அதி வேகத்தில் சென்று உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.  கை, கால் இழப்பு, முதுகு தண்டுவட பாதிப்புக்கு உள்ளாகி செயல் இழந்து போனவர்களும் அதிகம் பேர் உண்டு. மனப்போக்கில் எதை பற்றியும் கவலைப்படாமல் அதிக வேகமாக பைக்கில் செல்வதால் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன. பள்ளி சிறார்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அதி  நவீன பைக்குகளில், வீலிங் என்ற பெயரில் அதிக வேகமாக செல்வதை சாலையில் காண முடிகிறது. போதிய பயிற்சி இன்றி வாகனங்களை இயக்குதல், குடிபோதையில் பைக் ஓட்டுதல் போன்றவையும் உயிர் இழப்புகளுக்கு காரணமாக அமைகின்றன. ஹெல்மெட் சட்டம் நடைமுறையில் இருந்தும், தலைக்காய இறப்புகளே அதிகமாக உள்ளது.

கடந்த 2019 ல் சுமார் 193 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்களில் காயம் அடைந்தவர்கள் புள்ளி விவரம் சராசரியாக ஒரு மாதத்துக்கு 100 என உள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் இந்த மாவட்டத்தில் சாலை விபத்துக்களால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 4000 ஐ நெருங்கி உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள சாலைகள் மிக குறுகிய சாலைகள் என்பதுடன், வளைவுகள் அதிகம் நிறைந்த பகுதி ஆகும். மேலும் பள்ளம், மேடுகள் அதிகம் உள்ள சாலைகளும் உண்டு. முறையான பயிற்சி இல்லாமல், அதி வேகமாக மாணவர்கள், இளைஞர்கள் பைக்கில் பறப்பதை தடுக்க போதிய நடவடிக்கை இல்லை. இது போன்ற காரணங்கள் விபத்துக்கள் நிகழ்வுக்கு முக்கியமாக அமைகின்றன. இது தவிர தேசிய  மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அதிகளவில் ஆக்ரமிப்புகள் உள்ளன. சாலைகளை ஆக்ரமித்து தனியார் கட்டிடங்கள், ஓட்டல்கள், பர்னிச்சர் கடைகள் என கட்டி உள்ளனர். இவர்களிடம் இருந்து சாலையை மீட்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்வதில்லை. அப்படியே நடவடிக்கை மேற்கொண்டாலும் கூட நீதிமன்றத்துக்கு சென்று தடையாணை பெறும் நிலை உள்ளது. இதனால் சாலையை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் இந்த மாவட்டத்தில் மிகப்பெரிய தொய்வு நிலையில் உள்ளது.

அதிகாரிகளும் போதிய நடவடிக்கையில் இறங்குவதில்லை. குறிப்பாக நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி அமைப்புகளில் பணிகளில் இருப்பவர்களுக்கு நெருக்கமானவர்கள் சாலை ஆக்ரமிப்பாளர்களின் பட்டியல்களில் வருகிறார்கள். இதனால் எந்த விதமான நடவடிக்கை மேற்கொண்டாலும் அவர்கள் முன்கூட்டியே முட்டுக்கட்டை போடும் நிலையும் உள்ளது.
குமரி மாவட்டத்தில், குறிப்பாக நாகர்கோவிலில் உள்ள சாலைகளின் அதிகபட்ச வேகமாக 40 முதல் 50 கி.மீ. வேகம் என்ற அளவில் தான் உள்ளது. அந்தளவுக்கு தான் சாலையின் தரம் உள்ளது. ஆனால் இங்கு நகர்ப்புறத்துக்குள் உள்ள சாலையில் கூட 50 கி.மீ. வேகத்துக்கு மேல் பைக்கில் பறக்கும் நபர்களை பார்க்க முடிகிறது. விளைவு விபத்துக்களும், உயிர் பலிகளும் அதிகரிக்கின்றன. இதை தடுக்க எந்த வகையிலாவது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வெறும் வாகன சோதனை, அபராதம் மட்டும் தீர்வு ஆகுமா? என்ற  கேள்விக்குறியும் எழுந்துள்ளது. எனவே போதிய விழிப்புணர்வுடன், நகரில் உள்ள முக்கிய சாலைகளில் ஆக்ரமிப்புகளை அகற்றி, போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்
சாலை பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் தாமஸ் கூறுகையில், குமரி மாவட்டத்தில் விபத்துக்கள் நடப்பதற்கு அரசின் அலட்சியம் தான் காரணம். குண்டும், குழியுமான ரோடுகளால் ஒரு பக்கம் விபத்துக்கள் நடக்க, அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுவதிலும்  விபத்துக்கள் நடக்கின்றன. இதே போல் பாதசாரிகள் நடந்து செல்ல பிளாட்பார வசதி இல்லை. நகரின் முக்கிய சாலையான பாலமோர் போன்ற சாலையில் பிளாாட்பாரம் இல்லாதது பெரும் பின்னடைவாக உள்ளது. வேப்பமூடு சந்திப்பில் ரவுண்டானா அமைப்போம் என்றார்கள்.

ஆனால் அது கிடப்பில் உள்ளது. இது போன்ற நிலையை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்வதில்லை . சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டம் பெயரளவுக்கு தான் நடக்கிறது. பெற்றோர்களும் குழந்தைகளுக்கு விலை உயர்ந்த பைக்குகளை வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். குடிபோதையில் நிகழும் விபத்துக்கள் தான் அதிகம் உள்ளது. இளைஞர்கள் உயிரை காப்பாற்ற டாஸ்மாக் கடைளை மூடுவது முக்கியம் ஆகும் என்றார்.

சட்டத்தால் மட்டும் தடுக்க முடியாது போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் கூறியதாவது : விபத்துக்களினால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது.  பள்ளி, கல்லூரிகளில், விபத்துக்கள், அதனால் நிகழ்ந்த உயிர் இழப்புகள் தொடர்பான விளக்கங்களை கொடுக்கிறோம். விபத்துக்களை தடுப்பதில் காவல்துறையின் பங்களிப்பை விட பொதுமக்களின் பங்களிப்பு அதிகமாக வேண்டும். குறிப்பாக பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு  18 வயது நிரம்பாமல் பைக், கார்களை வாங்கி கொடுத்து அதை ஓட்ட அனுமதிக்க கூடாது. வெறும் சட்டத்தால், காவல்துறையால் மட்டும் இதை தடுத்து விட முடியாது.

வாகனங்களில் செல்லும் போது தனது குடும்பம், பெற்றோர் என்ற நினைப்பில் கவனமாக, மிதமான வேகத்தில் வாகனங்களை ஓட்ட  வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் வந்தால் தான்  விபத்து உயிர் பலிகளை குறைக்க முடியும் என்றனர்.

Tags : Road accidents ,Kumari ,police action Road accidents ,deaths , Road accidents,increase deaths , Kumari, Police take action
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...