அறுபடை வீடுகளுள் 2ம் படை வீடான திருச்செந்தூரில் பல்லாங்குழியாக மாறிய சாலைகள்: தட்டுத்தடுமாறும் வாகனங்கள்

திருச்செந்தூர்: அறுபடை  வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூரில் பல்வேறு பகுதிகளில் சாலைகள்  குண்டும், குழியுமாக  காணப்படுவதால் வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றன.  வாகனங்கள் கிளப்பும் புழுதிப் புயலால் கோயிலுக்கு வரும் பக்தர்கள், வியாபாரிகள்  மிகுந்த சிரமப்படுகின்றனர். அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் வைகாசி விசாகம், ஆவணித் திருவிழா, கந்தசஷ்டி திருவிழா, மாசித் திருவிழா ஆகிய பண்டிகைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது தவிர தைப்பூசம், சபரிமலை சீசன், கோடை விடுமுறை சீசன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார நாட்கள், தமிழ்ப்புத்தாண்டு, ஆங்கிலப்புத்தாண்டு தினங்கள் மற்றும் திருமண நாட்களில் கூட்டம் அலைமோதும். நேர்த்திக் கடன் செலுத்தவும், கடலில் குளித்து நீராடவும், நாழிக்கிணறில் நீராடவும் பக்தர்கள் நீண்ட வரிசை காணப்படும்.

திருச்செந்தூர் பேரூராட்சியில் 21 வார்டுகள்  உள்ளன. சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 10  ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவை தவிர ஏராளமான சிறிய  மற்றும் பெரிய தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், வர்த்தக நிறுவனங்கள்,  கடைகள் உள்ளன. திருச்செந்தூர் கோயில், அழகிய கடற்கரை என உலக பிரசித்திப் பெற்ற சுற்றுலாத்தலம் என்ற  போதிலும் இங்கு சுகாதார வசதிகள் எள்ளளவும் இல்லை. ஆங்காங்கே பாதாள சாக்கடை  கழிவுநீர் அவ்வப்போது வெளியேறி பக்தர்களின் சுகாதாரத்தை  கேள்விக்குறியாக்குகிறது. சாலைகள் அனைத்தும் கடந்த மாதம் பெய்த கனமழையால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் பல்லாங்குழிகளாக மாறி விட்டன. திருச்செந்தூர் கோயிலுக்கு பக்தர்கள் காமராஜர் சாலை வழியாக சென்று விட்டு மேலரதவீதி வழியாக காமராஜர் சாலையில் பயணித்து நெல்லை, தூத்துக்குடி மார்க்கமாக செல்வது வழக்கம். நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான  திருச்செந்தூர் மேலரதவீதி, காமராஜர் சாலை  உள்ளிட்டவைகளில் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத  அளவிற்கு குண்டும், குழியுமாக மணல் நிறைந்து காணப்படுகிறது. அதுவும் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆர்ச் வரைக்கும் உள்ள காமராஜர் சாலையின் நிலைமையை சொல்லவே வேண்டாம். அந்த  அளவுக்கு தலைகீழாக உள்ளது.

இந்த சாலை வழியாகத்தான் நெல்லையில்  இருந்து திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பஸ்கள், நாகர்கோவில், உடன்குடி,  சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் செல்லும் நூற்றுக்கும்  மேற்பட்ட  வாகனங்கள் சென்று வருகின்றன. இவ்வாறு செல்லும் வாகனங்கள் புழுதிப் புயலை  கிளப்பி விட்டுச் செல்கின்றன. இதனால் அவற்றின் பின்னால் இருசக்கர  வாகனங்களில் செல்வோர் பயணிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. புழுதிப் புயலால்  சாலையின் இருபுறமும் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளும்  பாதிக்கப்படுகின்றன. திருச்செந்தூரில் இருந்து பரமன்குறிச்சி  செல்லும் சாலையும் மிகவும் மோசமாக உள்ளது. சுமார் 8 கிலோ மீட்டர் தூரமுள்ள  இந்த சாலையில் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் வாகனங்கள் செல்ல முடியாத  அளவிற்கு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. ஆங்காங்கே மெகா பள்ளங்களும்  உருவாகி உள்ளன. இந்தச் சாலை வழியாகத்தான் உடன்குடி, மெஞ்ஞானபுரம்,  நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் திருச்செந்தூர் வருகின்றனர். நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலைகளின் நிலைமைதான்  இப்படி என்றால்? பேரூராட்சிக்கு சொந்தமான சாலைகளின் நிலைமை அதைவிட  படுமோசமாக உள்ளது.

இங்குள்ள வடக்கு ரதவீதி, கீழரதவீதி, தெற்குரதவீதி, டிபி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள்  மழையினால் இருபுறங்களிலும் அரிப்பு ஏற்பட்டு குண்டும், குழியுமாக  காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் இப் பகுதியில் இருசக்கர வாகனங்களில்  செல்வோர் பலர் கீழே விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். தெருக்களில்  பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளில் பல்வேறு இடங்களில் மண்ணை மட்டும்  போட்டு நிரப்பி உள்ளதால் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு புதைகுழி போன்று காணப்படுகிறது. தற்போது  திருச்செந்தூருக்கு நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி,  சங்கரன்கோவில், விருதுநகர், கடையநல்லூர், கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரை பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள்  சாலைகளில் காணப்படும் மெகா பள்ளங்களால் தட்டுத் தடுமாறிச் செல்கின்றனர்.  

இதுகுறித்து  திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்த எட்டயபுரத்தைச் சேர்ந்த பக்தர்  குமரன் கூறும்போது, நாங்கள் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை அல்லது  தைப்பூசத்திற்கு விரதமிருந்து பாதயாத்திரையாக நடந்து வருவோம். தற்போது   திருச்செந்தூர் நகரத்தின் சாலைகள், நடந்து செல்ல  முடியாத அளவிற்கு மிகவும் மோசமாக உள்ளது. சாலைகள் ஆங்காங்கே குண்டும்,  குழியுமாக பெயர்ந்து கிடப்பதால் அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் எங்கள்  மீது புழுதி புயலை வாரி இறைக்கின்றன. இதனால் பாதயாத்திரையாக வரும்  முதியவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே பாதயாத்திரை பக்தர்களின்  நலன் கருதி திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாலைகளை  சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

திருச்செந்தூர் நகரத்தில் சாலை போன்ற அடிப்படை வசதிகளில் பேரூராட்சி நிர்வாகம் அக்கறை காட்டுவதில்லை. சுற்றுலா தலமான திருச்செந்தூருக்கு வந்து செல்லும் பக்தர்கள் நலன் கருதி சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டியது பேரூராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கடமையாகும். ஒவ்வொரு திருவிழாக்களின் போது மட்டும் சம்பிரதாயத்திற்காக கூட்டம் நடத்தும் மாவட்ட நிர்வாகம் திருச்செந்தூர் நகரத்தில் சாலை வசதிகளிலும் அக்கறை காட்ட வேண்டும் என்பதே பக்தர்களின் விருப்பமாகும்.

சாலைகளில் புழுதிப்புயல்

 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெற்கு மாவட்டத் தலைவர்  காமராசு நாடார் கூறியதாவது: கடந்த மாதம் பெய்த கனமழையால் திருச்செந்தூரில்  உள்ள அனைத்து சாலைகளும் பயணிக்க முடியாத அளவிற்கு பழுது அடைந்துள்ளது.  திருச்செந்தூர் பேருந்து நிலையம் காமராஜர் சாலை, நான்கு ரதவீதிகளிலும் சாலைகள்  பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதில் பேரூராட்சி  நிர்வாகம் கிரஷர் பொடியை தூவியதால்  ஊருக்குள் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் வரும்போது புழுதி பறந்து அந்த பகுதி  முழுவதும் புகை மண்டலம் போன்று காணப்படுகிறது.

இதனால் பாதயாத்திரை வரும்  பக்தர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். முதியவர்கள், சிறு  குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், வியாபாரிகளும்  பாதிக்கப்படுகின்றனர். கடையில் உள்ள பொருட்கள் எல்லாம் தூசிபட்டு  வீணாகிறது. வரும் தைப்பூச  திருவிழாவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள்  வருவார்கள். எனவே போர்க்கால அடிப்படையில்  திருச்செந்தூர் பேரூராட்சி  நிர்வாகம் 4 ரதவீதிகளிலும், பேருந்து நிலையம் காமராஜர் சாலை  மற்றும் ரதவீதி சாலைகளையும் சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

அனுமதிக்காக காத்திருப்பு

பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, மழையினால் சேதமடைந்த வடக்கு  ரதவீதி, கீழரதவீதி, தெற்குரதவீதி ஆகிய 3 ரத வீதிகளிலும் சிமென்ட் சாலை  அமைக்க ரூ.2.70 கோடியில் மறுமதிப்பீடு தயார் செய்து சென்னையில் உள்ள  பேரூராட்சிகளின் இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. அவை வர  காலதாமதமானால் தற்காலிகமாக சாலையில் ஒட்டுப்போடும் பணி நடைபெறும். மேலும்  உள்மாட வீதிகளில் பழுதான சாலைகள், மொட்டைமுடுக்கு, புளியடிஅம்மன் கோயில்  தெரு, வீரராகபுரம் தெரு இணைப்பு சாலை ஆகிய சாலைகளில் ரூ.10 லட்சம்  மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்க அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி  கிடைத்தவுடன் உடனடியாக பணிகள் தொடங்கப்படும், என்றார்.

Related Stories: