ராசிபுரம் அருகே வீட்டில் தஞ்சம் வழிதவறி வந்த அரிய வகை குருவி

ராசிபுரம்: தென்கிழக்கு ஆசியா கண்டத்தில் வாழும் அரியவகை  பறவை ஒன்று  நேற்று ராசிபுரம் அருகே வந்திருந்தது. இதை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன்  பார்த்துசென்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம்  பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் கண் கண்ணாடி கடை நடத்தி வருகிறார்.  நேற்று அதிகாலை இவரது வீட்டிற்கு வெளியே சிறிய குருவி ஒன்று பறக்க  முடியாமல் சிரமப்பட்டுக்கொண்டு இருந்தது.  அந்த குருவியை காப்பாற்றிய  செல்வம்,  வீட்டினுள் வைத்து ஆரஞ்சு மற்றும் வாழைப்பழத்தை சாப்பிட  கொடுத்துள்ளனர். அந்த குருவி, ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டது.  சாதாரண குருவியை போல இருந்த அதில் பல வண்ண கலர்களை கொண்டு காணப்பட்டது.

இதுகுறித்த தகவலறிந்த அப்பகுதி மக்கள், செல்வத்தின் வீட்டிற்கு வந்து ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர். இதுகுறித்து செல்வம் ராசிபுரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ  இடத்துக்கு வந்த வன காப்பாளர் நவமணி மற்றும் வன உதவியாளர்கள், அந்த அரிய  வகை குருவியை மீட்டு வன அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: இந்த அரிய வகை  குருவியின் பெயர் செம்மார்க்குக் குறுவான் ஆகும். இவை இந்திய  துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியா கண்டத்தில்  வாழக் கூடியதாகும். சீசன்  நேரங்களில் வெளியே வரும் இந்த குருவி, மரப்பொந்துகளில் வாழும். அது  இருக்கும் இடத்தில் அந்நியர்கள் யாரேனும் வந்தாலோ, வேறு ஏதாவது தீங்கு  ஏற்பட்டாலே ஒருவித குரல் எழுப்பும். இதனால் இந்த குருவி, தட்டாரக்குருவி  என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: