தைப்பூசம் நெருங்கும் நேரத்தில் அடிப்படை வசதிகளின்றி அல்லல்படும் பழநி பக்தர்கள்

* ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்

* ஓட்டல்களில் கூடுதல் கட்டணத்தால் அவதி

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா நெருங்கி வரும் நிலையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இத்திருவிழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பழநி கோயிலுக்கு வந்து செல்வர். தைப்பூச திருவிழா வரும் பிப்ரவரி 2ம் தேதி திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான வெள்ளி ரதம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி 7ம் தேதியும், தைப்பூச தேரோட்ட நிகழ்ச்சி 8ம் தேதியும் நடக்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே பழநிக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வர துவங்கி உள்ளனர்.

தற்போது ஐயப்ப, பாதயாத்திரை பக்தர்கள் அதிகளவு வருவதால், பழநி அடிவாரம் பகுதி பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. ஆனால், வரும் பக்தர்களுக்கு போதிய அளவு அடிப்படை வசதிகள் கிடைக்காததால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பக்தர்களின் பல்வேறு தேவைகள் மற்றும் குறைகள் அதிகாரிகளால் கண்டு கொள்ளப்படுவதில்லை. இதனால் ஆண்டுதோறும் பழநிக்கு பாதயாத்திரையாக பல லட்சம் பக்தர்கள் சொல்லமுடியாத வேதனையுடன் திரும்பிச் செல்கின்றனர்.

உணவகங்களில் தரம் குறைவு: சீசன் துவங்கி விட்டாலே பழநி நகரில் ஏராளமான திடீர் கடைகள் முளைத்து விடும். அதுபோல் பழநி அடிவாரத்தில் உள்ள அனைத்து கடைகளும் சைவமாக உருமாறி விடும். இந்நிலையில் அநேக கடைகளில் விலை பட்டியல் என்பதே இருக்காது. மேலும், உணவுகளின் தரமும் கேள்விக்குறியாகவே இருக்கும். இட்லி போன்ற மாவுப்பொருட்களில் வேதிப்பொருட்கள் கலப்பது அதிகளவு நடைபெறும். எனவே, உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் இதுபோன்ற திடீர் கடைகளில் அடிக்கடி ஆய்வுகள் நடத்தி பக்தர்களின் வயிறு பாழாவதை தடுக்க வேண்டும்.

கமாண்டோ வீரர்கள் தேவை : பழநி கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் இடும்பன் குளம் மற்றும் சண்முக நதி ஆற்றில்தான் நீராடுவது வழக்கம். ஆனால், இப்பகுதிகளில் தைப்பூசத் திருவிழா நடைபெறும் 10 நாட்கள் மட்டுமே நீச்சல் வீரர்கள் மீட்பு நடவடிக்கைக்காக பணியமர்த்தப்படுவர். தற்போதே ஏராளமான பக்தர்கள் வருவதால், இடும்பன் குளம் மற்றும் சண்முகாநதி பகுதிகளில் நீச்சல் அடிக்கும் காமாண்டோ வீரர்களை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியமர்த்த வேண்டும். பஸ்களில் கூடுதல் கட்டணம் : பழநி கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், ஊர் திரும்புவதற்கு பயன்படுத்துவது அரசு பஸ்களே ஆகும். ஆனால், சிறப்பு பஸ்கள் திருவிழா காலங்களில் மட்டுமே இயக்கப்படும். அதிலும், ஒருவழிப்பாதையாக மாற்றுவதால் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படும். எனவே, அரசு பஸ்களில் பக்தர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும்.

 இதுகுறித்து பொள்ளாச்சியைச் சேர்ந்த முருக பக்தர் கார்த்திகேயன் கூறியதாவது: கிரி வீதிகளில் சுற்றுலா வாகனங்களை நிறுத்தி விடுவதால் பக்தர்கள் நடந்து கூட செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றினாலும் மீண்டும் மறுநாளே ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டு விடுகின்றன. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, கிரிவீதிகளில் சுற்றுலா வாகனங்கள் நுழைய விடாமல் செய்ய வேண்டும். இடும்பன்குளம், சண்முகநதி பகுதிகளில் உள்ள உடைமாற்றும் இடம், கழிப்பறைகள் செயல்பாடின்றி உள்ளது. இதனை செயல்படுத்த முன்வர வேண்டும். பழநி பஸ் நிலையம், பஸ் நிலைய எதிர்புறம், பூங்கா ரோடு பகுதிகளில் உள்ள கழிப்பறைகள் முறையான பராமரிப்பின்றி உள்ளது. அதனை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர் முழுவதும் குப்பைகள் ஆங்காங்கே மலைபோல் தேங்கி உள்ளன. எனவே, சுகாதாரப்பணிக்கு கூடுதல் ஆட்கள் நியமிக்க வேண்டும். பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக மராமத்து பணிகள் முடிவடைந்துள்ள திருக்கோயில் தங்குமிடங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். நெரிசல்களை குறைக்கும் வகையில் பாதவிநாயகர் கோயில் அருகே உள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

இதுகுறித்து இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம.ரவிக்குமார் கூறியதாவது: ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவிற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். இதில் அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். ஆனால், ஆன்மீக பெரியோர் மற்றும் உள்ளூர் முக்கிய பிரமுகர்களை கலந்து கொள்ள அனுமதிப்பதில்லை. இதனால் பக்தர்கள் தேவைகள் மற்றும் குறைபாடுகள் அதிகாரிகளுக்கு தெரிவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது. எனவே, தைப்பூச ஆலோசனைக் கூட்டங்களில் உள்ளூர் பிரமுகர்கள், ஆன்மீக பெரியோர்கள் மற்றும் இந்து அமைப்பினர்களை கலந்து கொள்ள அனுமதித்து, அவர்களது கருத்துக்களை கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இப்போதே வேண்டும் முன்னேற்பாடு

பக்தர்களுக்கான அவதிகள் குறித்து பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் கூறியதாவது: தைப்பூசத் திருவிழாவிற்கு 15 நாட்கள் இருக்கும் நிலையில் தற்போதே ஏராளமான பக்தர்கள் வர துவங்கி விட்டனர். ஆனால், திருவிழா நடைபெறும் 10 நாட்களுக்கு மட்டுமே முன்னேற்பாடுகளை மேற்கொள்ளப்படுகிறது. இதனை மாற்றி தற்போதிருந்தே பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க முன்வர வேண்டும். நகரின் பல இடங்களில் போதிய கழிப்பிட வசதி இல்லை. ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் தற்காலிக கழிப்பறைகள் காட்சிப்பொருளாக உள்ளன. அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து முறையாக பராமரிக்க வேண்டும்.

பாதயாத்திரை பக்தர்கள் வரும் முக்கிய வழித்தடமான திண்டுக்கல் - பழநி தேசிய நெடுஞ்சாலையில் பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக நடைமேடை பல இடங்களில் சேதமடைந்துள்ளது. புதர் மண்டிக்கிடப்பதால் பக்தர்கள் நடந்து செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. சேதமடைந்துள்ள நடைமேடையை சரிசெய்து, இந்த வழித்தடத்தில் போலீசார் ரோந்துப்பணி மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். இரவு நேரங்களில் பக்தர்கள் நடந்து வருவதற்கு வசதியாக அந்தந்த ஊராட்சிகளின் மூலம் மின்விளக்கு வசதி செய்துதர வேண்டும்.

Related Stories: