கள்ளக்குறிச்சி மக்களின் 15 ஆண்டு கால கனவு சின்னசேலம்-கள்ளக்குறிச்சி ரயில்பாதை திட்டம்: நிலம் எடுப்பு, கட்டுமான பணியால் தாமதம்

மனிதனின் அன்றாட வாழ்க்கையில் போக்குவரத்து என்பது மிக இன்றியமையாததாகி விட்டது. குறிப்பாக விமான போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, பஸ், கார் மூலம் போக்குவரத்து என இருந்தாலும் ரயிலில் பயணம் செய்யவே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். காரணம் விமான போக்குவரத்து, காரில் பயணம் என்பது நடுத்தர, ஏழை எளிய மக்களால் நினைத்து பார்க்க முடியாத ஒன்றாகிறது. அதைப்போல பஸ் பயணமும் குடும்பத்தோடு செல்ல சகல வசதியோடு செல்ல முடியாது. ஒருவரையொருவர் நெரித்துக் கொண்டும், முண்டியடித்துக் கொண்டும், போதிய காற்றோட்ட வசதி இல்லாமலும் பயணம் செய்யும் நிலை உள்ளது. அதனால்தான் சாதாரண மக்கள் முதல் பெரிய வியாபாரிகள், தொழிலதிபர்கள் வரை ரயிலில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர்.

 குறிப்பாக கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தபோதும் சரி, தற்போது தனி மாவட்டமாக உருவாகி உள்ளபோதும் சரி. கள்ளக்குறிச்சிக்கென தனி அந்தஸ்து உள்ளது. கள்ளக்குறிச்சியில் ஏராளமான வியாபாரிகள் உள்ளனர். பெரிய பெரிய அரிசி ஆலைகள் உள்ளது. தஞ்சைக்கு அடுத்தபடியாக அதிக நெல் விளையும் பகுதி ஆகும். அதைப்போல கரும்பு, மரவள்ளி, எள் போன்றவையும் அதிகமாக விளைகிறது. இதனை வாங்கும் வியாபாரிகள் வெளி மாநிலம், மாவட்டங்களில் எடுத்து சென்று விற்பனை செய்ய லாரிகளில் எடுத்து செல்வதால் போக்குவரத்து செலவு அதிகமாகிறது. பொருளுக்கும் போதிய பாதுகாப்பில்லை.  இதை உணர்ந்த கள்ளக்குறிச்சி சுற்று வட்டார வியாபாரிகள், பொதுமக்கள் கள்ளக்குறிச்சிக்கு ரயில் வசதி வேண்டும். அதாவது சின்னசேலம் ரயில் பாதையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு ரயில்பாதை அமைக்க வேண்டும் என முடிவு செய்து, கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த வியாபாரிகள் சங்கம் முத்து, செல்வகுமார், அருண்கென்னடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அப்போதைய சட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதியிடம் மனு அளித்தனர். அவர் கள்ளக்குறிச்சி ரயில் திட்டத்திற்கென தனி பைல் உருவாக்கி அதை மத்திய அரசிடம் சமர்ப்பித்தார்.

 இந்நிலையில் அப்போது ரயில்வே இணை அமைச்சராக இருந்த தமிழகத்தை சேர்ந்த வேலு தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ. 255கோடியை ஒதுக்கி, சேலம்- கரூர், ஈரோடு- சேலம், திண்டிவனம்- நகரி, அத்திப்பட்டு- புத்தூர் ஆகியவற்றோடு சேர்த்து சின்னசேலம்- கள்ளக்குறிச்சி ரயில் திட்டத்தையும் அறிவித்தார். அதோடு சின்னசேலம்- கள்ளக்குறிச்சி ரயில் திட்டத்திற்கு சுமார் ரூ.39 கோடி வரை செலவிட திட்டமிடப்பட்டது. ஆனாலும் கடந்த 2011வரை நிலம் கையகப்படுத்தாமலும், எந்தெந்த ஊர் வழியாக பாதை செல்ல வேண்டும் என்ற இறுதி முடிவு எட்டப்படாததாலும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. காலம் கடந்து போனதால் விலைவாசி ஏற்றத்தினால் ஒதுக்கிய நிதியும் பற்றாக்குறை ஆனது.

நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த 2016 பிப்ரவரி 7ம் தேதி சென்னையில் இருந்து அப்போதைய மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். மேலும் இந்த ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசின் பங்களிப்பான ரூ. 64 கோடியையும் சேர்த்து ரூ. 116.61 கோடியில் திட்டப்பணிகள் துவங்கியது. இந்த சின்னசேலம்- கள்ளக்குறிச்சி ரயில் பாதை தடத்தில் 2 பெரிய பாலங்களும், 22 சிறிய பாலங்களும், ஒரு ரயில் தட மேம்பாலம், 10 தரைகீழ் பாலங்களும் கட்ட திட்டமிடப்பட்டு பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.  பொதுப்பணித்துறை ஆற்றிலும், ஓடைகளிலும் நடந்து வரும் பாலம் கட்டும் பணிகள் கூட முழுமையாக நடைபெறவில்லை. ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து துரிதப்படுத்துவது இல்லை.

  கள்ளக்குறிச்சி ரயில்பாதை திட்டத்திற்கென சுமார் 47 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கிராமப்புற எல்லைப்பகுதியில் நிலத்திற்கான விலை நிர்ணயம் ஓரளவு முடிந்து விட்டதாக தெரிகிறது. ஆனால் நகர்புற பகுதியில் பத்திர பதிவு விலை அதிகமாக உள்ளதால் அரசால் அந்த விலையை தர முடியவில்லை. நில உரிமைதாரர்களும் இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இதனால் 2006ல் துவங்கப்பட்ட கள்ளக்குறிச்சி மக்களின் கனவுத்திட்டம் கடந்த 15 ஆண்டுகளாக நிறைவேறாமலேயே கானல் நீராக உள்ளது.

ஆனால் மத்திய அரசு தன் பங்கிற்கான திட்ட ஒப்புதலை தந்து தன் பங்கிற்கான நிதியையும் ஒதுக்கி விட்டது. ஆனால் மாநில அரசு நில உரிமைதாரர்களிடம் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதில் அலட்சியம் காட்டுகிறது. ஆகையால் தமிழக முதல்வர் சின்னசேலம்- கள்ளக்குறிச்சி ரயில் திட்டத்தில் தனிகவனம் செலுத்தி நிலம் கையகப்படுத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும். நாடு விடுதலை பெற்ற பின்பு அமைக்கப்பட்ட மிகச்சில புதிய ரயில் திட்டங்களில் சின்னசேலம்- கள்ளக்குறிச்சி ரயில் திட்டம்  நாட்டின் ரயில்வே வரைபடத்தில் அமையும் என கள்ளக்குறிச்சி பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  

விரைவில் பணி ஆரம்பிக்கப்படும்

கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கவுதமசிகாமணி கூறுகையில், நான் தேர்தலில் போட்டியிட்டு வாக்கு சேகரிக்க சென்ற போதும், வெற்றி பெற்று நன்றி தெரிவிக்க சென்ற போதும் கள்ளக்குறிச்சி மக்கள் கள்ளக்குறிச்சிக்கு ரயில் திட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று மத்திய ரயில்வே துறையிடம் கேட்டபோது, நிதி ஒதுக்கியாச்சி. நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது என்றனர். இதையடுத்து நில எடுப்பு வருவாய்த்துறை ஆணையர் கற்பகம் ஐஏஎஸ்சிடம் கேட்டபோது “கள்ளக்குறிச்சி நகர எல்லைப்பகுதியில் நில எடுப்பு பணியில் தாமதம் உள்ளது. நகர எல்லை பகுதியில் பத்திர பதிவு விலை அதிகமாக இருப்பதால் அரசாங்கத்தால் அதை கொடுக்க முடியாத நிலை உள்ளது. இதனிடையே நிலத்திற்கு சொந்தக்காரர்களும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளனர். இதற்கிடையே நிலம் கையகப்படுத்தும் பணியை 11 பைல்களாக பிரிக்கப்பட்டு தற்போது 8பைல் வரை ரெடியாக உள்ளது. கோர்ட் வழக்கு முடிந்த உடன் நிலம் கையகப்படுத்தும் பணி சுமூகமாக முடியும்” என்றார்.  

நில எடுப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்

சின்னசேலம் அரிசி ஆலை சங்கத்தலைவர் அப்துல் ரஹீம் கூறுகையில், கள்ளக்குறிச்சிக்கு ரயில் வசதி வேண்டும் என்று கடந்த 15 ஆண்டு காலமாக வியாபாரிகள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் போராடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சென்னையில் சுமார் 60,000க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். இவர்கள் பொங்கல், தீபாவளி போன்றவற்றுக்கு வீடு வருவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். கள்ளக்குறிச்சிக்கு ரயில் வசதி இருந்தால் பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் அவர்கள் சுலபமாக வரலாம். அதைப்போல கள்ளக்குறிச்சியில் 40 அரிசி ஆலை உள்ளது. இவர்கள் கொள்முதல் செய்யவும், விற்கவும் ரயில் வசதி கட்டாயம் தேவை. லாரியில் கொண்டு சென்றால் பணவிரையம் ஏற்படும். தமிழகத்தில் கடந்த 2018, 2019ல் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் வாகன விபத்துகளில் இறந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. ஆகையால் மத்திய, மாநில அரசுகள் குழு அமைத்து நில எடுப்பு பணியை தீவிரப்படுத்துவதுடன், கட்டுமான பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

Related Stories: