வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் வரையில் 85 சதவீத பணிகள் நிறைவு: மெட்ரோ ரயில்வே அதிகாரி தகவல்

சென்னை: வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் வரையில் 85 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது பச்சை மற்றும் நீள வழித்தடங்களில் 45.1 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் முதல் திட்டம் செயல்பட்டு வருகிறது. வண்ணாரப்பேட்டையுடன் முடிவடைந்துள்ள இத்திட்டத்தில் நாள் தோறும் 1 லட்சம் பேர் வரையில் பயணம் செய்து வருகின்றனர். இந்தநிலையில், வண்ணாரப்பேட்டை- திருவெற்றியூர் விம்கோநகர் வரையிலான நீட்டிப்பு பணிகள் 3,700 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடங்களில் மொத்தம் 8 ரயில் நிலையங்கள் வர உள்ளது. இந்தநிலையில், இந்த வழித்தடத்தில் 85 சதவீத பணிகள் முடிந்துள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் வரையிலான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழித்தடத்தில் வரும் மார்ச் மாதம் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தண்டவாளங்கள் மற்றும் சிக்னல் அமைக்கும் பணிகளும் பெரும்பாலும் முடிந்துள்ளது. குறிப்பாக 85 சதவீத பணிகள் முடிந்துள்ளது. அடுத்த மாதத்திற்குள் பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் வழித்தடத்தில் உள்ள நிலையங்களை போல் இல்லாமல் இந்த வழித்தடத்தில் உள்ள நிலையங்களின் அளவு குறைவாகவே இருக்கும். பணிகள் முழுமையாக முடிந்தவுடன் பாதுகாப்பு அதிகாரிகள் 8 நிலையங்களையும் முழுமையாக ஆய்வு செய்வார்கள். கட்டிடங்களின் தரம், நிலையங்களின் அமைப்பு, பயணிகளின் பாதுகாப்பு வசதி உள்ளிட்டவைகளை முழுமையாக ஆய்வு செய்த பிறகே ஒப்புதல் அளிப்பார்கள். பாதுகாப்பு அதிகாரிகளின் ஒப்புதல் கிடைத்தவுடன் ஜூன் மாதம் இவ்வழித்தடத்தில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

Related Stories: