×

சோனியா கூட்டத்தை திமுக புறக்கணிப்பு எதிரொலி ஸ்டாலினுடன் காங். தலைவர்கள் சந்திப்பு: கூட்டணியில் விரிசல் இல்லை என அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமி ஆகியோர் இணைந்து உள்ளாட்சி தேர்தல் குறித்து ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தனர். இதனால் டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி கூட்டிய கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை. இது குறித்து டி.ஆர்.பாலு, துரைமுருகன் ஆகியோரும் கருத்து தெரிவித்திருந்தனர். இதனால் தமிழக அரசியல் களத்தில் பல்வேறு யூகங்கள் கிளம்பின.தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக பல்வேறு செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தியை, தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்துப் பேசினார். அப்போது கூட்டணி குறித்து பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த பரபரப்பான சூழ்நிலையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி நேற்று காலை திடீரென சென்னை வந்தார். அவர், நேற்று காலை 10.45 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கோபண்ணா ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்களுக்கு மேல்
நடந்தது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த, 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களின் ஆதரவைப் பெற்று மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இடங்கள் குறித்து கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தி - வெற்றி வாய்ப்புள்ள பகுதிகளின் அடிப்படையில் இடங்களைப் பகிர்ந்து கொள்வது என்று தெரிவிக்கப்பட்டு - அவ்வாறே மாவட்ட அளவில் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று, இடங்கள் ஒதுக்கீடு செய்து கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த இடங்களே வழங்கப்பட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி “வெளிப்படையாக” ஒரு அறிக்கையை வெளியிட்டார். சுமுகமாகப் பேசித் தீர்த்திருக்க வேண்டிய மறைமுகத் தேர்தல் இடப்பங்கீடு குறித்து, அறிக்கை மூலம் பொது வெளிக்குக் கொண்டு சென்றது, கடந்த சில நாட்களாக இரு தரப்பிலும் விரும்பத்தகாத கருத்துப் பரிமாற்றத்திற்கு வழி வகுத்துள்ளது.திமுகவின் மனப்பாங்கினை உணர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி “தி.மு.க. - காங்கிரஸ் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது” என்றும், “மதவாத, பாசிச சக்திகளையும் அவர்களை ஆதரித்து கைப்பாவைகளாகச் செயல்பட்டு வருபவர்களையும் எதிர்த்து திமுக மேற்கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆதரவளித்து துணை நிற்கும்” என்றும் அறிக்கை வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும் ஆக்கபூர்வமாகத் தெரிவித்துள்ளார். இன்று (நேற்று) அண்ணா அறிவாலயத்தில் என்னை நேரில் சந்தித்து இதுகுறித்து பேசியும் உள்ளார்.

ஆகவே கூட்டணி தொடர்பாக ஏதோ ஒரு சில இடங்களில் இருதரப்பிற்கும் ஏற்பட்ட சில நிகழ்வுகளை முன் வைத்து- இரு தரப்புமே இந்த விவாதத்தை மேலும் பொதுவெளியில் நடத்திக் கொண்டிருப்பது- திமுக தலைமையிலான கூட்டணியில் சிறு ஓட்டையாவது விழாதா என்று ஏங்கித் தவிக்கும் “குள்ள நரி சக்திகளுக்கும்” “சில ஊடகங்களுக்கும்” மேலும் அசைபோடுவதற்கான செயலாக அமைவதை நான் ஒரு சிறிதும் விரும்பவில்லை. ஆகவே விரும்பத்தகாத இத்தகைய விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், இனியும் இவ்வாறு ஏற்பட அனுமதிக்கக் கூடாது என்பதாலும், கூட்டணி குறித்த கருத்துகளை இரு கட்சியினரும் பொது வெளியில் தெரிவிப்பதை கட்டாயம் தவிர்த்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:எங்களது கூட்டணியில் எந்த பிரச்னையும் கிடையாது. கூட்டணியில் எந்த பிளவும் கிடையாது. எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. எங்களுக்கு தோன்றிய கருத்தை நாங்கள் சொன்னோம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலை உள்ளது. எங்களுடைய நிலையை நாங்கள் சொன்னோம். அதனால், கூட்டணியில் பாதிக்கிற விஷயமாக அல்ல. நாங்கள் ஏற்கனவே சொன்னது போன்று ஒரு குடும்பம் என்று இருந்தாலும் ஊடலும், கூடலும் இருக்க தான் செய்யும். ஆனால் அது கோபமும், சாபமும் கிடையாது. ஊடல் வந்த பிறகு, கூடல் வரும். கூடல் வந்த பிறகு ஊடல் வரும். இதில், எந்த தப்பும் கிடையாது. எப்போதும் நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். ஒரு பிரச்னை என்று வருகிற போது பல கருத்துக்கள், பல இடங்களில் இருந்து வருகிறது. அவைகள் எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சொல்லி ஆகி விட்டது. எதாவது கருத்து வேறுபாடு வந்தால் திமுக தலைவரும், தமிழக காங்கிரஸ் தலைவரும் பேசி முடிவு செய்து கொள்வார்கள். இரண்டு கட்சிகளை சேர்ந்த மற்றவர்கள் கருத்து சொல்ல வேண்டியதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரவர் கருத்தை அவரவர்கள் சொன்னார்கள். அதன்பிறகு அவர்கள் அமைதியாகி விட்டார்கள்.

கமலஹாசன் ஒரு புறம் தன்னை மதசார்பற்ற கட்சி ஆதரவாளர் என்று சொல்லி கொள்கிறார். மறுபுறம் ரஜினி பாஜவுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று தெரிந்தும் கூட ரஜினி எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். கமலை கேட்பது ஒன்று தான் அப்படியெனில் அவர் பாஜ உதவியை கேட்கிறாரா என்பது தான். அதனால், கமல் எதுவும் நடக்கும், அது நடந்து விட்டது என்கிறார். அவர் சொல்வது போல் எதுவும் நடக்கவில்லை. ஒரு சிறந்த நட்பு என்பது விவாதம் செய்தால் தான் நட்பு வரும். விவாதம் செய்யாமல் எல்லாவற்றிற்கும் தலையாட்டுபவர்கள் சிறந்த நண்பர்களாக இருக்க மாட்டார்கள். திமுகவும், காங்கிரஸ் சிறந்த நட்புடைய கட்சி. எனவே, எங்களுக்குள் ஆரோக்கியமான விவாதம் வந்து போகும். அது தப்பில்லை.

நான் எங்களுடைய சொந்த கட்சியில் விவாதம் செய்வேன். விவாதம் செய்வது என்பது ஏற்புடையது. விவாதம் என்பது கருத்து வேறுபாடல்ல. வரும் சட்டமன்ற தேர்தல் மட்டுமல்ல அதன்பிறகும் கூட்டணி தொடரும். தர்பார் சினிமாவை பற்றி பேசினோம். மு.க.ஸ்டாலின், தர்பார் நன்றாக இருந்தது. நீங்கள் பார்த்து விட்டீர்களா என்று கேட்டார். நான் இன்னும் இல்லை என்று சொன்னேன். இந்த மாதிரி விஷயங்கள் பற்றி பேசினோம். ரஜினி மிகவும் நல்லவர். ரஜினி ஒன்று சொல்லியிருக்கலாம். அவர் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்லி விட்டு இருக்கலாம். இல்லை, முரசொலி வைத்திருந்தால் திமுககாரர் என்று சொல்லி விட்டு இருக்கலாம். இந்த இரண்டையுமே இணைத்து பேசாமல் இருந்திருக்கலாம். அவர் வாய் தவறி பேசியிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். சினிமா என்றால் எழுதி கொடுத்து பேசியிருப்பார். அவர் சொந்தமாக பேசியதால் வாய்தவறி பேசி குழம்பி விட்டார்.

திமுக கூட்டணிக்கும், அதிமுக கூட்டணிக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளது. எங்களது மதசார்பற்ற கூட்டணி என்பது சுயமரியாதை உள்ள கூட்டணி. கொள்கை ரீதியாக உள்ள கூட்டணி. நாங்கள் எந்த காரணத்துக்காகவும் கூட்டணி சேரவில்லை. 5 ஆயிரம் ஆண்டுகளாக உள்ள இந்திய கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டும். சாதி, மத, மொழி, இனத்தின் பெயரால் மக்களை பிரிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இந்தியா என்பது மேலும் பலமாக இருக்க வேண்டுமே ஒழிய பிளவுபட்டு விடக்கூடாது என்பதற்காக நாங்கள் ஒரு அற்புதமான கொள்கை அமைத்து அதன் அடிப்படையில் சேர்ந்து இருக்கிறோம். இன்றைக்கு திராவிட இயக்கமும், இடதுசாரிகளும், தேசிய இயக்கமும் சேர்ந்து செய்கிறார்கள். நாங்கள் தான் இந்த தேசத்தின் உயிர்நாடி. இந்த தேசத்தின் மனசாட்சி. எனவே, இந்த கூட்டணி என்பது வேறு. அதிமுக கூட்டணி என்பது முற்றிலும் வேறு.

இன்று நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவிப்பது அதிமுக. குடியுரிமை திருத்த மசோதா குறித்து ஒரு கருத்து தெரிவிக்காதது தான் அதிமுக. பாஜவுக்கு எதிராக ஒரு மாற்றுக்கருத்தை கூட எழுப்ப முடியாதவர்கள் தான் அதிமுக. எனவே, அவர்கள் உறுதியான கூட்டணி என்பது சொல்வது தவறு. எங்களது கட்சி தலைமை எனக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது. எங்களது கட்சி என்னுடன் இருக்கிறது. ஒரு கூட்டணி என்பது நன்றாக இருக்க வேண்டும். மதசார்ப்பற்ற சக்திகள் இணைந்து இருக்க வேண்டும். நாம் இணைந்து நிற்கவில்லை என்று சொன்னால் தீயவர்கள் குறுக்கீடு வரும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும். அதே நேரத்தில் விவாதம் என்பது ஆரோக்கியமாக இருக்க வேண்டுமே தவிர ஆரோக்கியம் குறைவாக இருக்க கூடாது. நாங்கள் ஆரோக்கியமாக இருக்கிறோம். இந்தியாவில் எந்தவொரு கட்சியும் கூட்டணி இல்லாமல் அரசியலில் வெற்றி பெற முடியாது. எல்லா கட்சிகளுக்கும் கூட்டணி தேவை. அந்த கூட்டணி கொள்கை ரீதியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அப்படி தான் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : meeting ,Leaders Meeting: Announces No Alliance Cracks Sonia ,DMK ,Stalin ,Leaders , Sonia meeting, DMK boycott, echo, with Stalin, Cong. Leaders, Meet
× RELATED திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்