அரசு துறை திவாலாகிறதா? நிதி நெருக்கடியில் மின் வாரியம்

சென்னை: தமிழக மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. .தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் வாங்கிய மின்சாரத்திற்கு 11,728 கோடியை மின்வாரியம் வழங்க வேண்டும். அதே சமயம் தமிழக அரசு துறைகள் 1,500 கோடியை மின்வாரியத்திற்கு பாக்கி வைத்துள்ளன. இந்த இரண்டு பிரச்னைகளையும் அடுத்த 3 மாதங்களுக்குள் தீர்க்கவில்லை என்றால் நிதி வழங்க மாட்டோம், மின் திட்டங்களுக்கு கடன் உதவி செய்ய மாட்டோம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஆனால் இவற்றை எல்லாம் சரி செய்ய முடியாத நிலையில் மின் வாரியத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ளது.

மேலும் மின்வாரியத்தின் மொத்த கடன் 1.50 லட்சம் கோடியை நெருங்கிவிட்டது. ஒருபுறம் நிதி நெருக்கடி, மறுபுறம் ஊழியர் பற்றாக்குறை, மின் தேவை அதிகரிப்பு அதை சமாளிக்க முடியாத நிலை இப்படி பல்வேறு பிரச்னைகளால் மின்வாரியம் தடுமாறி வருகிறது. இதே நிலை நீடித்தால் திவாலாவதைத் தவிர வேறு வழியில்லை என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். எதிர்க்கட்சிகளும் அரசின் நிர்வாக சீர்கேட்டால் மின்வாரியம் இந்த அளவுக்கு மோசமானது. எனவே அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. தமிழகத்தின் தினசரி மின் தேவை 13,215 மெகாவாட். தற்போதைய உற்பத்தி 2974 மெகாவாட் தான். தமிழகம் உற்பத்தி செய்ய வேண்டிய 7158 மெகாவாட் மின்சாரத்தில் தற்போது 4184 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை. எனவே தினமும் 4881 மெகாவாட் மின்சாரம் மத்திய திட்டங்கள் மூலமும், 5360 மெகாவாட் தனியார் மின்திட்டங்கள் மூலமும் வாங்கப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. கூடுதல் விலை கொடுத்து தனியாரிடம் கொள்முதல் செய்வதால் ஒவ்வொரு மாதமும் மின்வாரிய இழப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 ஆயிரம் கோடி இழப்பு கூடிக் கொண்டே போகிறது. இதனால் மின்வாரியத்தின் மொத்த கடன்  1.50 லட்சம் கோடியை நெருங்கி விட்டது. இப்போது 12 ஆயிரம் மெகாவாட் மின்திட்டங்களை தொடங்க வேண்டிய நிலையில் மின்வாரியம் உள்ளது. 5700 மெகாவாட் மின்திட்டங்களுக்கு வேலை நடக்கிறது. இந்த திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி தேவை. ஆனால் தமிழக திட்டங்களுக்கு உதவும் நிலையில்  மத்திய அரசு இல்லை. இதே நிலை நீடித்தால் மின் கட்டண உயர்வு என்பது தவிர்க்க முடியாதது. இதுமட்டுமல்லாமல் இலவச மின்சாரத்தையும் ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு மின்வாரியம் தள்ளப்படும்  மின்வாரியத்தின் குளறுபடிகள் ஏற்படும் பாதிப்பு, மக்கள் தலையில் வைக்கப்படும் சுமையாகத்தான் மாறும். ஏற்கனவே மின் இணைப்பு கட்டணம் உயர்ந்து விட்டது. அடுத்தது வீடுகளுக்காக மின் கட்டணத்தை 20 முதல் 30 சதவீதம் வரை உயர்த்தலாமா? என்பது பரிசீலனையில் உள்ளது. ஊழியர் பற்றாக்குறையால் பணி சுமை அதிகரித்துள்ளது.. இப்போது நிதி நெருக்கடியும் மின்வாரியத்தை மீளவே முடியாத குழியில் தள்ளுகிறது. கிட்டத்தட்ட திவால் நிலைக்கு சென்றுவிட்டது என்று மின்வாரிய வட்டாரங்கள் வேதனை தெரிவித்து உள்ளன.

‘கூடுதல் மின்சாரம் தேவை’

டெல்லியில்  கடந்த வாரம் மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே சிங்கை தமிழக மின்துறை  அமைச்சர் தங்கமணி சந்தித்தார். அப்போது, கோடையில் தமிழக மின் தேவையை  சமாளிக்க மத்திய தொகுப்பில் இருந்து 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்க  வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தற்போது 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்  மத்திய தொகுப்பில் இருந்து வழங்கப்படுகிறது. உடன்குடி, எண்ணூர் உள்பட பல  புதிய மின் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவும், புதிய  ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ₹1,200 கோடி நிதி வழங்கவும் கோரிக்கை  வைக்கப்பட்டுள்ளது.

50,000 காலி பணியிடங்கள்

மின்வாரியத்தில்  50,000க்கும் மேற்பட்ட பணி இடங்கள் காலியாக உள்ளன. இதனால் ஊழியர்களுக்கு பணிச்சுமையும், மன அழுத்தமும் அதிகரித்துள்ளது. எனவே  காலியிடங்களை நிரப்ப வேண்டும். ஊதிய உயர்வு பிரச்னை உள்பட  பல்வேறு பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் விரைவில் தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம்  நடத்தப்படும் என்று தமிழ்நாடு மின் கழக தொமுச நிர்வாகம் தீர்மானம்  நிறைவேற்றி உள்ளது.

நிலக்கரி டெண்டர் தேதி நீட்டிப்பு

தமிழக மின் வாரியத்தின் அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரியை ஒடிசாவில் உள்ள சந்திரபிலா நிலக்கரி சுரங்கத்தில் இருந்து எடுத்துக் கொள்ள  மத்திய அரசு கடந்த 2016ல் அனுமதி அளித்தது. ஆனால் இங்கிருந்து நிலக்கரியை எடுத்துவர ஆயத்த பணியை மின்வாரியம் தற்போதுதான் மேற்கொண்டுள்ளது. இந்த சுரங்கத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் டன் என்ற அளவில் 35 ஆண்டுகளுக்கு நிலக்கரியை எடுத்து தமிழகத்திற்கு அனுப்பும் பணியை ஒப்பந்த நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணியை ₹21,000 கோடி மதிப்பில் 35 ஆண்டுகளுக்கு மேற்கொள்ள மின்வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 29ல் ‘டெண்டர்’ கோரியது. இதில் பங்கேற்க கடைசி தேதி கடந்த ஜனவரி 13ம் தேதி என நிர்ணயம் செய்திருந்தது. இந்நிலையில், டெண்டர் தேதியை இந்த மாதம் 28ம் தேதி வரை  மின்வாரியம் நீட்டித்துள்ளது.

ஊதிய உயர்வுக்கு தாமதம் ஏன்?

கடும்  நிதி நெருக்கடியில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்கெட்கோ), ஊழியர்களுக்கு 2 கோடி வரையிலான ஊதிய உயர்வு மற்றும்  பலன்களை வழங்காமல் காலம் தாழ்த்துவதாக வடசென்னை அனல் மின் நிலைய ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பொது வருங்கால வைப்பு நிதி, ஊதியத்துடன்கூடிய  விடுப்பை சரண்டர் செய்ததற்கான ஊதியம், அனல் மின் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு ஊக்கத் தொகை, 5 மாதங்களாக பண பலன்கள் வழங்கப்படவில்லை என்று தொழிற்சங்கத்தினர் கூறுகின்றனர். இதேபோல், மேட்டூர்,  தூத்துக்குடி அனல் மின் நிலைய ஊழியர்களுக்கும் பண பலன் வழங்கப்படவில்லை. நிதி நெருக்கடி காரணமாகத்தான் ஊழியர்களுக்கு இந்த பண பலன்களை வழங்க காலதாமதம் ஆகிறது என்று டான்கெட்கோ தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: