×

புத்தகம் சுமக்கும் வயதில் குடும்பச்சுமை குழந்தைகளை பெற்றெடுக்கும் ‘குழந்தைகள்’

அந்த சிறுமிக்கு வயது 13. அவளுடன் உடன் பிறந்தது 3 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை. வீட்டிற்கு மூத்த அவளின்  தாய், சர்க்கரை நோயால் இறந்து போனாள். சிறுமியின் அப்பா, மலையில் கிடைக்கும் கிழங்கு, பழங்களைப் பறித்து விற்பனை செய்யும் கூலித்தொழிலாளி. வீட்டிற்கு மூத்தவளான அவள், 8ம் வகுப்பு படித்து வந்தாள். படிப்பறிவு இல்லாத அவளுடைய தந்தை, பழம் விற்க வந்த இடத்தில் தனது கஷ்ட ஜீவனத்தை அங்கிருப்பவர்களிடம் கூறியுள்ளார். இதைக் கேட்ட 47 வயதான அந்த மாற்றுத்திறனாளி, ``8ம் வகுப்பு படிக்கும் உங்களுடைய மகளை எந்த செலவும் இல்லாமல் திருமணம் செய்து கொள்கிறேன்’’ என்றார். 4 பெண் குழந்தைகளைப் பெற்ற அந்த அப்பாவி அப்பா, தனது 13 வயது மகளை திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தார். வெள்ளியன்று பள்ளி சென்று வந்த அந்த சிறுமியை, ஞாயிறன்று அந்த மாற்றுத்திறனாளிக்கு திருமணம் செய்து வைத்தார். அன்று இரவு முழுவதும் அந்த மாற்றுத்திறனாளியின் வீட்டில் இருந்து அந்த சிறுமியின் வலி பொறுக்க முடியாத குரல் விடிய, விடிய கேட்டுள்ளது. காலையில் அக்கம்பக்கத்தினர், என்ன விஷயம் எனக்கேட்ட போது, அந்த சிறுமிக்கு பேய் பிடித்துள்ளது என்று மாற்றுத்திறனாளி கூறியுள்ளார்.

காலையில்  தன் குழந்தைகளுடன் மாற்றுத்திறனாளியின் வீட்டிற்கு அந்த சிறுமியின் தந்தை வந்துள்ளார். அவருடன் அவளை பேய் ஓட்ட மாற்றுத்திறனாளி அனுப்பி வைக்கிறார். செவ்வாயன்று அந்த சிறுமி இறந்து போனார். அந்த சிறுமியின் உடல் எரியூட்டப்பட்டு விடுகிறது. இது சம்பந்தமாக தகவல்  வெளியே வரவும், அந்த சிறுமிக்கு பேய் பிடித்ததாக டிஎஸ்பி கூறுகிறார். ‘அவுங்க அம்மாவிற்கு இருந்த சர்க்கரை நோய், அந்த சிறுமிக்கும் இருந்தது. அதனால் இறந்து போனாள்’ என அந்த மாற்றுத்திறனாளி கூறுகிறார். இது ஏதோ சிறுகதை என நினைத்து விட வேண்டாம். தேனி மாவட்டம், போடியில் 6 மாதங்களுக்கு முன் நடந்த கொடூரச் சம்பவம் இது.  13 வயது சிறுமிக்கு திருமணம் நடந்ததே குற்றம் என்ற  உணர்வு இல்லாத  சமூகம் மற்றும் காவல்துறையால், 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுமியின் வாழ்க்கை சட்டென முடிந்து போய் உள்ளது. இதுகுறித்து அன்றைய தேனி மாவட்ட எஸ்பியிடம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. இதுபோல தமிழகத்தில் அன்றாடம் நடக்கும் குழந்தை திருமணங்களால் ஏராளமான அப்பாவி சிறுமிகள் உயிரிழக்கின்றனர் என்பது தான் அதிர்ச்சி கலந்த உண்மை.

சட்டம் என்ன சொல்கிறது? குழந்தை திருமண தடுப்புச் சட்டம், சிறப்பு திருமண சட்டம், இந்து திருமண சட்டம், பார்சி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம், முஸ்லிம் திருமண சட்டம் என எல்லா சட்டங்களிலும் திருமணம் செய்து கொள்ள குறைந்தபட்சமாக ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் இருக்க வேண்டுமென கூறுகிறது. ஆனால், ஆணாதிக்கமும், கலாச்சார நடைமுறை என்ற பெயரில் நடக்கும் பழமைவாத செயல்பாடுகளும் இன்னனும் குழந்தை திருமணங்கள் தொடர்வதற்கான காரணமாக உள்ளன.

இரண்டாவது இடத்தில் தமிழகம்: உலக சுகாதார அமைப்பு குழந்தை திருமணம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், உலகளவில் 11 சதவீதம் குழந்தைகளுக்கு திருமணம் நடக்கிறது என்றும், ஒரு குழந்தையே குழந்தையை பெற்று எடுப்பதால் 23 சதவீதத்துக்கும் அதிகமாக குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறுகிறது. கடந்த 2015-16ம் ஆண்டு தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கீட்டில் கிடைத்த முடிவுகளை தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் 2019ம் ஆண்டு வெளியிட்டது. அதன்படி பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தை திருமணம் அதிக எண்ணிக்கையில் நடைபெற்றுள்ளது.  நகரப்பகுதிகளில் குழந்தைத் திருமணம் நடப்பதில் 37 சதவீதத்துடன் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

17 சதவீதம் தமிழகத்தில் தான்: தேசிய குடும்ப நலத்துறையின் 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 2.3 கோடி பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடந்துள்ளது என்றும், நாட்டில் நடக்கும் திருமணத்தில் 26.8 சதவீதம், 18 வயது நிரம்பாத பெண் குழந்தைகளுக்குதான் நடக்கிறது என்றும் கூறுகிறது. யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கிராமப்புறங்களில் 56 சதவீதம் பெண்களுக்கு 18 வயதிற்கு முன்பே திருமணமாகி விடுகிறது. உலகெங்கும் நடக்கும் குழந்தைத் திருமணங்களில் 40 சதவீதம் இந்தியாவில்தான் நடக்கிறது..

தேசிய குடும்ப நலத்துறையின் கணக்கெடுப்பின்படி நாட்டில் 17 சதவீத  குழந்தை திருமணங்கள் தமிழகத்தில் தான்  நடக்கிறது. தமிழகத்தில் தர்மபுரி,  கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தேனி, திருப்பூர் மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடக்கிறது. தமிழகத்தில் நடக்கும் 82 சதவீத  குழந்தை  திருமணங்கள்  பெற்றோர் வற்புறுத்தலால் தான் நடைபெறுகிறது. அப்படி திருமணம் செய்து முடித்து வைக்கப்பட்ட பெண் குழந்தைகள்  பெரும்பாலும் 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு வரை  மட்டுமே படித்தவர்களாக உள்ளனர். இதில் குழந்தை திருமணம் செய்தவர்களில் 17 சதவீதம் பேர் தங்களது கணவரை  இழந்துள்ளதாக ஒரு அதிர்ச்சியான புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.  அத்துடன் குழந்தை திருமணம் செய்த சிறுமிகள் பிரசவத்தின்போது கடும் உடல் பாதிப்பு, உதிரப் போக்கு, குறைபிரசவம் போன்றவற்றால் ஏராளமானோர் உயிர் இழந்துள்ளனர்.

மரப்பாச்சி திருமணம்: ஒரு காலத்தில் மரப்பாச்சி பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இதற்கு எதிராக சமூக சீர்த்திருத்தவாதிகள்  தொடர் போராட்டங்கள் நடத்தினர். ஆனால், மதத்தின் பேரால் குழந்தை திருமணத்தை ஒரு சாரார் ஆதரித்தனர். இந்த நிலையில் தான் 1894ம் ஆண்டு மைசூர் மாகாணத்தில் 8 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் திருமணம் செய்து கொள்வதை தடைசெய்யும் சட்டம் இயற்றப்பட்டது. 1918ம் ஆண்டு ஆண்களுக்கு திருமண வயது 14 என்றும், பெண்களுக்கு 12 என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனாலும், பெண்ணின் திருமண வயதை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு பெண் விடுதலை இயக்கங்கள் போராட்டம் நடத்தி வந்தன.
இந்த நிலையில் குழந்தை திருமணத்தை தடுக்க 1927ம் ஆண்டு ராய் சாஹேப் ஹர்பிலாஸ் சர்தா அறிமுகம் செய்த மசோதாவில், திருமணம் செய்துகொள்ள ஆண்களுக்கு குறைந்தபட்ச வயது 18 என்றும், பெண்களுக்கு 14 என்றும் முன்மொழியப்பட்டது.  இதன் பின் இந்த சட்டம் 1978ம் ஆண்டு திருத்தப்பட்டது. அதன் பிறகுதான் ஆண்களுக்கான திருமண வயது 21 என்றும், பெண்களுக்கு 18 என்றும் ஆனது.  2006ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குழந்தை திருமண தடுப்புச் சட்டம், குழந்தை திருமணம் செய்வது கடும் குற்றம் என்று பிரகடனப்படுத்தியது. ஆனாலும், இன்றுவரை குழந்தை திருமணங்கள் தொடர்கின்றன.

சமத்துவத்திற்கு எதிரானது: பால்ய விவாகம் எனப்படும் குழந்தை திருமணத்திற்கு ஆதரவான கருத்திற்கு எதிராக இந்தியாவில் மட்டுமின்றி தமிழகத்தில் வலுவான போராட்டம் நடைபெற்றுள்ளது. குழந்தை திருமணத்திற்கு ஆதரவாக அன்றைய தினத்தில் பாராளுமன்றத்தில் ஆச்சார்யா என்பவர் பேசிய பேச்சைக் கேட்டால் அதிர்ச்சியாய் இருக்கிறது. ``பால்ய விவாகமில்லா விட்டால் உண்மையான கற்பு சாத்தியமில்லை. பெண்களின் வாழ்க்கை நாசமடைந்துவிடும். குழந்தைத் திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள் கைது செய்யப்படும்படி சட்டவிதி இருப்பதை காட்டி  புருஷர்களுக்கு சிறைத்தண்டனை அளித்து விடுவதால் பெண்கள் நடத்தையும் அதிக கேவலமாக மாறிவிடும். பால்ய விவாகம் இருந்தாலொழிய வாழ்க்கையில் உண்மையான ஒழுக்கம் ஏற்படுவது அசாத்தியம்’’ என்று அவர் பேசியுள்ளார். பால்ய விவாகத்திற்கு எதிராக  தந்தை பெரியார், முத்துலட்சுமி ரெட்டி உள்ளிட்ட சமூக சீர்த்திருத்தவாதிகள் நடத்திய போராட்டத்தின் விளைவே, பெண்ணுக்கான திருமண வயது 18 என வரையறுக்கப்பட்டது.  குழந்தை திருமணம் என்பது பெண்ணின் கல்வி வளர்ச்சிக்கும், அவர்களது சமத்துவத்திற்கும் எதிரானது என்பது நிஜம்.

ஏன் இப்படி நடக்கிறது? தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் குழந்தை திருமண முறை இன்றளவும் தொடர்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் 2018 ஏப்ரல் முதல் 2019 மார்ச் வரை 280 குழந்தை  திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. சாதி, பொருளாதாரம், அந்தஸ்து என்ற படிநிலையால் சில குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 16 வயதில் திருமணம் செய்து வைக்கும் நடைமுறை தமிழகத்தில் தொடர்கிறது.  உறவுமுறை விட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காக  சிறுமிகளுக்கு அவர்களை விட 2 மடங்கு வயது கூடிய ஆண்களுடன் திருமணம் செய்து வைக்கும் கொடூரம் நடக்கிறது. திருமண வயது பெண்களுக்கு 18 என்பது அவர்கள் உயர்கல்வி பயிலும் வயதாகும். திருமண சட்டத்தில் உள்ள இந்த குறைபாடு, பெண்களின் உயர்கல்விக்கு முட்டுக்கட்டையாக உள்ளது என்பதை மறுக்க முடியாது. எனவே, ஆணின் திருமண வயதைப் போலவே, பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று சமூகநல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். குழந்தை திருமணத்திற்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.இந்த தண்டனையை அதிகப்படுத்துவதுடன், இந்த குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பெண்ணிய செயல்பாட்டாளர்களும், குழந்தைகள் நல  அமைப்பினரும் தொடர்ந்த வலியுறுத்தி வருகின்றனர்.

கருக்கொலைக்கு எதிராக நடத்தப்பட்டதைப் போல, குழந்தை திருமணத்திற்கு எதிரான பிரசாரம் தொடர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். குழந்தை திருமணம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்று ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம் குறிப்பிடுகிறது. அந்த உரிமை மீறல் தொடர்வதை எப்படி தடுத்து நிறுத்தப் போகிறோம்?

போதிய பிரசாரமில்லை
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தேனி மாவட்ட செயலாளர் எஸ்.வெண்மணி கூறுகையில், ``தேனியில் அதிகமாக குழந்தை திருமணங்கள் நடப்பதற்கு மிக முக்கிய காரணம் சாதிய உணர்வும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததும் தான். படித்து விட்டு பெண்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்ற கேள்வியும், வேறு சாதி ஆணுடன் திருமணம் செய்தால் குலப்பெருமை என்னாவது என்ற சிந்தனையும் தான் இத்தகைய திருமணங்கள் நடக்க காரணம். உயர்கல்வி படித்தால் வேலைக்கு சேர கல்விநிலையங்களைத் தவிர வேறு நிறுவனங்கள் தேனி மாவட்டத்தில் இல்லை. அத்துடன் ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு போன்ற பகுதிகளில் பெண்களுக்கு போதிய கல்வி கிடைக்காத நிலை உள்ளது. இதன் காரணமாகவே அதிக குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. இதற்கு எதிராக  அரசு மற்றும் அரசு சார்பு நிறுவங்களின் பிரசாரம் போதிய அளவு இல்லை. அத்துடன் குழந்தை திருமணத்தை தடுப்பதற்கான காவல்துறையினரின்  நடவடிக்கை போதுமான அளவு இல்லை. எனவே, புகார் வந்தால் தான் குழந்தை திருமணம் என்ற நிலையில் இருந்து, எங்கு குழந்தை திருமணம் நடக்கிறது என்ற ஆய்வு மனப்பான்மையுடன் கூடிய அதிகாரிகளை தமிழக அரசு நியமிக்க வேண்டும்’’ என்றார்.

கல்வி பாதிக்கப்படுகிறது
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகோமதி கூறுகையில்,  ‘‘இன்றைய யுகம் நவீனம் நிறைந்தது. கையடக்க செல்போன் பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாகவும் இருக்கிறது. முன்பின் தெரியாதவர்களுடன் தொடர்பு கொள்ளவும், அதன் மூலம் பழக்கம் கொள்ளவும், அந்த பழக்கம் நாளடைவில் தவறான  தொடர்பை ஏற்படுத்தவும் காரணமாக உள்ளது. படிக்கும் வயதில் திசைமாறும் சிலரால், பெற்றோர் அச்சப்பட்டு பெண் குழந்தைகளுக்கு திருமணத்தை செய்து வைக்கின்றனர். இதேபோல வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழக்கூடியவர்கள் பொருளாதாரத் தேடலால் தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் ஏமாறக்கூடிய குழந்தைகள், சிலரை நம்பி செய்து கொள்ளும் திருமணங்கள் குழந்தை திருமணங்கள் தான். அத்துடன் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. குழந்தை திருமணத்தில் அந்த மாப்பிள்ளைக்கு மட்டுமின்றி, அதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடும் தண்டனை தர வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை பள்ளிகளிலேயே துவக்க வேண்டும். குழந்தை திருமணம் செக்‌ஷன் 12 வற்புறுத்தி திருமணம் செய்து வைப்பது செல்லாது என்கிறது. செக்‌ஷன் 3 குழந்தை திருமணம் செய்த சிறுமிகள், தங்கள் திருமணம் செல்லாது என்பதை 18லிருந்து 20 வயதிற்குள் சொல்லவேண்டும் என்கிறது. இந்த இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளது. எனவே, துவக்க நிலையிலேயே குழந்தை திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’’ என்றார்.

Tags : children , Book carrying, age, family size, giving birth, when children
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்