×

54 மகளிர் குழு மூலமாக சானிடரி நாப்கின் தயாரிப்பு

கோவை: தமிழகத்தில் 54 மகளிர் சுய உதவி குழுவினர் மூலமாக ஆண்டிற்கு 36 லட்சம் சானிடரி நாப்கின் தயாரிக்கும் பணி நடக்கிறது. தமிழகத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாநில அளவில், அனைத்து கிராம பகுதி பெண்கள் பயன்பெறும் வகையில் சானிடரி நாப்கின் தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக மாநில அளவில் 54 மகளிர் சுய உதவி குழு தேர்வு செய்யப்பட்டது. இந்த குழுவை இணைத்து கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு, தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் ‘பெல்ட் வகை சானிடரி’ நாப்கின் தயாரித்து விற்க ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. அரசாணை எண் 458ன் படி குடும்ப நலத்துறை கடந்த 2017ம் ஆண்டு சானிடரி நாப்கின் ஆர்டர் தரப்பட்டுள்ளது. ஒரு ஆண்டிற்கு 36 லட்சம் சானிடர் நாப்கின் தயாரித்து பாக்கெட்டில் அடைத்து வினியோகம் செய்யவேண்டும் என அனுமதி உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. ஒரு பாக்கெட் நாப்கின் விலை 21 ரூபாய் என சுகாதார துறை சார்பில் கொள்முதல் செய்து வருகிறது. மாதம் 3 லட்சம் நாப்கின் என ஆண்டிற்கு 36 லட்சம் நாப்கின் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பள்ளி, கல்லூரி, அங்கன்வாடி மையங்களில் வளரிளம் பெண்களுக்கு மட்டும் பெல்ட் வகை சானிடரி நாப்கின் விலையின்றி இலவசமாக வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 7.56 கோடி ரூபாய் மதிப்பில் சானிடரி நாப்கின் தயாரித்து வழங்கப்பட்டது. நடப்பாண்டில் இதே அளவில் நாப்கின் தயாரிக்கப்படும். ஒரு பாக்கெட்டில் 6 சானிடரி நாப்கின் இருக்கும். ஒரு நபருக்கு இரு மாதத்திற்கு ஒரு பாக்கெட் என வழங்கி வருகிறோம். வரும் காலங்களில் பயனாளிகளின் எண்ணிக்கையும், நாப்கின் உற்பத்தியும் அதிகரிக்கப்படும். நாப்கின் உற்பத்தியில் 500க்கும் மேற்பட்ட மகளிர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.

Tags : women ,group ,54 Women's Committee , 54 Women's Committee, by, Sanitary Napkin, Product
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...