தமிழக அரசு எச்சரிக்கை எதிரொலி 80 எம்சாண்ட் குவாரிகள் சான்றுக்கு விண்ணப்பம்: பொதுப்பணித்துறை தகவல்

சென்னை: தமிழக அரசு எச்சரிக்கையை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் 80 எம்சாண்ட் குவாரிகள் மதிப்பீட்டு சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளது என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆற்றுமணலுக்கு மாற்றாக எம்சாண்ட் எனப்படும் செயற்கை மணலை ஊக்குவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், தமிழகத்தில் போலி எம்சாண்ட் குவாரிகள் ஏராளமானவை இயங்கி வருகிறது. இந்த எம்சாண்ட்டை பயன்படுத்தி வீடு கட்டும் பட்சத்தில் ஒரு சில வருடங்களிலேயே கட்டிடங்கள் உறுதி தன்மை இழந்து இடிந்து விழ வாய்ப்புள்ளது. எனவே, ஒரிஜினல் எம்சாண்ட் தயாரிக்கும் குவாரிகளை கண்டறிந்து அந்த குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்று வழங்க முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், மாநிலம் முழுவதும் 1200 குவாரிகளுக்கு தனித்தனியாக பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகம் மதிப்பீட்டு சான்று கேட்டு விண்ணப்பிக்ககோரி கடிதம் எழுதியது. அதன்பேரில் 300க்கும் மேற்பட்ட குவாரிகள் மதிப்பீட்டு சான்று கேட்டு விண்ணப்பித்த நிலையில், தற்போது வரை 216 குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும், 900க்கும் மேற்பட்ட குவாரிகள் சான்றுகள் பெறப்பட வேண்டியுள்ளது. இந்த குவாரிகள் சான்று பெற அழைப்பு விடுத்தும் விண்ணப்பிக்காத நிலையில், அந்த குவாரிகளில் ஒரிஜினல் எம்சாண்ட் தான் தயாரிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், தமிழக பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகன் ஒவ்வொரு குவாரிகளுக்கும் தனித்தனியாக கடிதம் எழுதினார். அதில், அங்கீகாரம் இல்லாமல் எம்சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறியிருந்தார். அதன்பேரில், தற்போது 80 எம்சாண்ட் குவாரிகள் மதிப்பீட்டு சான்று கேட்டு விண்ணப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த குவாரிகளுக்கு நேரில் சென்று பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வு அறிக்கையை தொழில் நுட்ப குழு கூட்டத்தில் தாக்கல் செய்கின்றனர். அந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை வைத்து மதிப்பீட்டு சான்று வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மதிப்பீட்டு சான்று கேட்டு விண்ணப்பிக்காத குவாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: