காய்கறி, பூ ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து 2 ஆந்திர வியாபாரிகள் பரிதாப சாவு: 10 பேர் படுகாயம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த காய்கறி ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து 2 ஆந்திரா வியாபாரிகள் பரிதாபமாக இறந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியை சேர்ந்த வியாபாரிகள், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து, தினமும் காய்கறிகள், பூக்கள் வாங்கி வருவது வழக்கம். அதுபோன்று நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 வியாபாரிகள் மினி லாரியில் காய்கறிகள் மற்றும் பூக்கள் வாங்கி கொண்டு சத்தியவேடுக்கு திரும்பி கொண்டிருந்தனர். கும்மிடிப்பூண்டி அருகே தச்சூர் அடுத்த பெரவள்ளூர் பகுதியில் வந்தபோது, வேகமாக வந்த ஒரு கார், லாரியை உரசுவது போன்று வந்தது. இதனால் கார் மீது மோதாமல் இருக்க, மினிலாரி டிரைவர் பிரேக் போட்டு திருப்ப முயன்றார். எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி தலைகுப்புற மினி லாரி கவிழ்ந்தது.இந்த விபத்தில் லாரியின் பின்னால் அமர்ந்திருந்த வியாபாரிகள் சாலையில் விழுந்து அலறி கூச்சலிட்டனர்.

இதை பார்த்ததும், அவ்வழியாக வந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், வியாபாரிகளான சேகர் (50), பரந்தாமன் (48) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10 வியாபாரிகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர்.தகவல் அறிந்து கவரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 2 வியாபாரிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயம் அடைந்த 10 பேரை சிகிச்சைக்காகவும் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: