ஒப்பனையும் கற்பனையும் சிறகடித்து பறக்கிறது ‘டிக் டாக்’ மோகத்தால் தடம் மாறிப்போகும் பெண்கள்

ஒப்பனையும், கற்பனையும் இயல்பில் இருந்து பெரும்பாலும் நம்மை விலக்கி வைத்திருக்கும் பிம்பங்கள். ஆனால் எப்போதாவது அவற்றோடு நாம் பயணிக்கும் போது, இதயங்கள் இறக்கை முளைத்து விண்ணில் பறக்கிறது. இந்த பயணம் மனதில் நிழலாடும் கனவுகளை சில மணித்துளிகள் நிஜமாக்குகிறது. வியப்பூட்டும் விஞ்ஞானத்தில் இதற்கான விந்தைமிகு சாட்சியமாக இருப்பது ஆன்ட்ராய்டு போன்களில்  ஆனந்தம் என்று கொண்டாடப்படும்  டிக்-டாக், விகோ, ஷேர் ஷாட், லைக்கி போன்ற செயலிகள். இவைகளில் காலம், நேரம் கடந்து கட்டுண்டு கிடப்பதால், நிஜத்தின் வடிவங்கள் நிழலாகி விடும் அபத்தமும் உள்ளது என்பதும்... இங்கே, நாம்  உணர வேண்டிய உண்மைகளில் ஒன்று.

கற்காலம் தொடங்கி தற்காலம் வரை, இறைவன் படைத்த பூமியில் மனிதன் வடித்த அற்புதங்கள் ஏராளம். அதிலும் நொடிக்கு நொடி, அசுர வேகத்தில் பரவும் விஞ்ஞானத்தின் வளர்ச்சி, பல விந்தைகளை விழிகளில் நிரப்பி உலகத்தை உள்ளங்கையில் அடக்கி வைத்திருக்கிறது. இந்த வகையில் இப்போது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களில் ஒன்றாக திகழ்வது ஆன்ட்ராய்டு செல்போன்கள். இந்த போன்களில் வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்-டாக், விகோ, ஷேர் ஷாட், லைக்கி போன்ற செயலிகள், தகவல் பரிமாற்றத்தை நொடிப்பொழுதில் உலகெங்கும் கொண்டு சேர்க்கும் வன்மையுடன் திகழ்கிறது. இதில் சமீபத்திய ஆய்வுகளின் படி, அனைத்து தரப்பு மக்களிடமும் ஏகோபித்த ஆதரவு பெற்ற செயலி என்றால் அது ‘டிக்-டாக்’ செயலிதான். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கலைஞன், கவிஞன், படைப்பாளி கண்டிப்பாக ஒளிந்திருப்பான். அந்த கலைஞனை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்புகள், வாழ்க்கை ஓட்டத்தின் பல்வேறு காரணங்களால் தகர்ந்து போயிருக்கும். இப்படி இலக்குகள் வசப்படாத நிலையில், மற்றவர்கள் ஏற்காவிட்டாலும், தன்னைத் தானே நாயக பிம்பமாய் நினைத்துக் கொண்டு வலம் வரும்  பலருக்கு டிக்-டாக் செயலி  அடித்தளமாய் இருக்கிறது.

ஒரு காலத்தில் திரையில் தோன்றும் நட்சத்திரங்களை, நடிகர் என்ற எல்லையை கடந்து கடவுளாகவும், உலகை காக்க வந்த ரட்சகர்களாகவும் ரசிகர்கள் கொண்டாடினர்.  அந்தநிலை படிப்படியாக கடந்து, தற்போது நானே ஒரு கலைஞன்தான் என்ற எண்ணம் மேலோங்கி, அனைவரும் கேமராவிற்கு முன்தோன்றி நடிக்கும் நிலைக்கு வந்துவிட்டனர். இதற்கு முக்கிய காரணம் டிக்-டாக் என்ற செல்போன் செயலி. கையில் ஒரு செல்போனும், அதில் இன்டர்நெட் வசதியும் இருந்தால் போதும். எந்நேரத்திலும், எந்த இடத்திலும் நானே ஹீரோ, நானே வில்லன் என விரும்பியபடி டிக்-டாக் வீடியோ பதிவு செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். இந்த வீடியோக்கள் மூலம் கிடைக்கும் லைக்குகளும், பாராட்டும் அவர்களுக்குள் உள்ள கூச்சம், என்ன நடக்குமோ என்ற பயம், நம் மீதான மற்றவர்களின் பார்வை என அனைத்தையும் தகர்த்து எறிந்து விடுகிறது. இதுவே டிக்-டாக் மோகம் என்ற நிலை, டிக்-டாக் அடிமையாகும் அளவிற்கு மாற காரணமாக அமைகிறது. ஒருவிதத்தில் இவை மனமகிழ்ச்சியை அளித்தாலும், அதைிட அதிகமான எண்ணிக்கையில் எதிர் வினையாற்றுகிறது.

டிக்-டாக் ஆப் பயன்படுத்துபவர்களை இருவகைப்படுத்தலாம். ஒருபிரிவினர் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தி வருபவர்கள். அவர்களால் பெரும்பாலும் எந்தவிதமான எதிர்வினைகளும் நிகழ வாய்ப்பில்லை. மற்றொரு தரப்பினர், டிக்-டாக்கிற்கு அடிமையாகவே மாறிவிட்டவர்கள். ஆண், பெண், படித்தவர், படிக்காதவர் என அனைவரும்  இதில் அடக்கம். வீடியோ பதிவேற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வந்துவிட்டால் போதும், எதைப்பற்றியும் கவலையின்றி வீடியோ பதிவிட ஆரம்பிக்கின்றனர். அவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு லைக், கமெண்ட் வரவில்லை என்றால், அதனை பெற எந்த நிலைக்கும் செல்கின்றனர்.

ஒரு சிலர் இந்த வீடியோக்களை தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர். கமண்ட்ஸ் பாக்சில் வர்ணிக்கவும் செய்கின்றனர். இதனையெல்லாம் பெண்களும் விரும்பத்தொடங்கிவிடுகின்றனர். ஒருகட்டத்தில் ஆசைக்கு மயங்கி தடம் மாறவும் செய்கின்றனர். இப்படித்தான் ஆந்திராவில் டிக்-டாக் வீடியோவில் கலக்கிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை, வாய்ப்பு தருவதாக கூறி, வாழ்க்கையை சீரழித்த கொடுமை கடந்தாண்டில் அரங்கேறியது. எனவே லைக்குகள் போட்டு, வாய்ப்புகள் தருவதாக வலம் வரும் மனிதர்களின் பின்புலம் அறிந்து, அடையாளம் கண்டு, அதற்கு பிறகு நம்பிச்செல்வது பாதுகாப்பானது என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

பாமர மக்களையும் பிரபலமாக்கிய அற்புதம்

உலகின் ஏதோ ஒரு பகுதியில் உள்ளவருடனும், எளிதில் அறிமுகப்படுத்தி நண்பர்களாக இணைய வைக்கிறது இந்த டிக்-டாக். அதேசமயம் திறமை எங்கிருந்தாலும் அதற்கான அங்கீகாரம் உண்டு என்பதையும் டிக்-டாக் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. உதாரணமாக, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி திருமூர்த்தி பாடிய கண்ணான கண்ணே என்ற பாடல், டிக்-டாக் மூலம் பிரபலமடைந்தது. இதனை கண்ட இசையமைப்பாளர் டி.இமான், திருமூர்த்தியை பாடகராக்கி அழகுபார்த்தார். இதேபோல், மேற்கு வங்க மாநிலத்தின் நாடியா ரயில்நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ராணு மண்டல், பாலிவுட் பாடகராகியுள்ளார். இதுபோல எண்ணற்ற பாமரர்களையும் பிரபலமாக்கிய பெருமை டிக்-டாக்கிற்கு உண்டு.

சாதி, மத மோதலை தூண்டும் வீடியோக்கள்

டிக்டாக் வீடியோவிற்கு எந்தவித கட்டுப்பாடு இல்லாதது ஒரு சாதகமான அம்சமாக இருந்தாலும், அதைவிட பல மடங்கு பாதகமும் உள்ளது. தான் சார்ந்த சாதி மற்றும் மதத்தை போற்றி பேசும் ஒருசிலர், மற்றவர்களை தரம் தாழ்த்தி பேசும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் சரியென்ன, உண்மையென்ன என புரிந்து கொள்ளாமல், வதந்திகளும் ஏராளமாக பரப்பப்படுகிறது.  இதனை ஆண், பெண் வேறுபாடின்றி இருதரப்பினரும் சரி சமமாக சண்டையிடுவதை கண் கூடாக பார்க்க முடிகிறது. இதுவே சாதி ரீதியிலான, மத ரீதியிலான கோபங்களை அதிகப்படுத்தும் அபாயம் உள்ளது.

தடை விதிக்கக்கோரும் இந்திய இளைஞர்கள்

சீனாவில் பைட் டான்ஸ் என்ற நிறுவனத்தால், டௌயின் என்ற பெயரில் கடந்த 2016ம் ஆண்டு தான் இந்த ஆப் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, 2017ம் ஆண்டிலிருந்து வளர்ச்சியடைய தொடங்கிய இந்த ஆப், 2018ம் ஆண்டில் மியூசிக்கலியுடன் இணைந்து, டிக்-டாக் என விஸ்வரூபம் எடுத்தது. இன்று உலகில் உள்ள 150க்கும் மேற்பட்ட நாடுகளில், 75 மொழிகளில் 100 கோடிக்கும் அதிகமானோர் இந்த டிக்-டாக் ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். வங்கதேசம், அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளில் இந்த டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 80 சதவீத இளைஞர்கள், டிக்-டாக்கிற்கு தடைவிதிக்கும்படி சமீபத்திய ஆய்வில் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படிப்பை பலிகொடுக்கும் மாணவர்கள்

டிக்டாக்கில்  தொடர்ந்து வீடியோக்களை பதிவு செய்து லைக்குகளை அள்ளுவது, கல்லூரிமாணவ, மாணவிகள்தான். இதில் பெரும்பாலான கல்லூரி மாணவிகள், காதல் வசனங்கள், பாடல்கள், நடனங்களில் அதிமாக ஈடுபாடு காட்டி தங்களது திறனை வெளிப்படுத்துகின்றனர். அதேசமயம், மாணவர்கள் அடுத்தவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் செல்லும் எல்லை தான், அவர்களின் படிப்பையே பலியாக்குகிறது. தாங்கள் படித்து வரும் கல்லூரி மற்றும் வகுப்பெடுக்கும் பேராசிரியர்களை ரகசியமாக வீடியோ எடுக்கும்  மாணவர்கள், தங்களுக்கு ஏற்றாற்போல் வசனங்களை பொருத்தி டிக்டாக்கில் பதிவேற்றம் செய்கின்றனர். இவை சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு  கொண்டுசெல்லப்பட்டு, கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் ஆகும் நிலைக்கு அவர்களை ஆளாக்குகிறது.

கொலையில் முடிந்த டிக்-டாக் விவகாரம்

கோவையை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவரது 23 வயது மனைவி நந்தினி. தனியார் கல்லூரி ஊழியரான இவர், குடும்பத்தகராறு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்தார். இப்படிப்பட்ட நிலையில் செல்போனில் டிக்-டாக் செயலியை பதிவு செய்தவர், எண்ணற்ற வீடியோக்களை வெளியிட்டார். இதை கண்டித்த கணவர், கல்லூரிக்கு சென்று நந்தினியுடன் பலத்த வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்தவர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்த, அங்கேயே நந்தினி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

கம்பி எண்ண வைத்த டிக்-டாக் வீடியோக்கள்

சேலம் அருகே மெக்கானிக் ஷெட்டுக்கு பழுதுபார்க்க வந்த போலீஸ் ஜீப்பின் முன்பு நின்று கொண்டு, இளைஞர் ஒருவர் மீசையை முறுக்கியபடி சினிமா வசனத்தை பேசி, வீடியோ வெளியிட்டது கவனம் ஈர்த்தது. இதற்கடுத்த சில மணிநேரங்களில் போலீஸ் வாகனத்தை தன்னிச்சையாக வீடியோ எடுத்து பதிவிட்டதாக அள்ளிக் கொண்டு போனது காவல்துறை. இதே போல் திருவண்ணாமலை வாலிபர், பரபரப்பாக பஸ்கள் ஓடிய நடுரோட்டில் படுத்துக் கொண்டு, ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ என்ற பாடலை பதிவு செய்து வீடியோ வெளியிட்டது அதிர்வுகளை ஏற்படுத்தியது. அவரை தேடிப்பிடித்து கம்பி எண்ண வைத்தது காவல்துறை.

Related Stories: