தமிழகத்தில் கடந்த 2018-19ம் ஆண்டில் 82,000 பேருக்கு காசநோய் பாதிப்பு: 2025க்குள் ஒழிக்க மத்திய அரசு தீவிரம்

வேலூர்: ஆட்கொல்லி நோயான எலும்புருக்கி நோயானது காசநோய், டியூபர் குளோசிஸ் டிபி என்று அழைக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த மனிதனின் உடலில் மைக்ரோ பாக்ட்டேரியன் என்கிற ஒரு வகை பாக்ட்டீரியாவால் உருவாகிறது. இந்த பாக்ட்டீரியா நோய் பாதித்தவர் இருமும் போதும், சளியுடன் கலந்த எச்சிலை கீழே உமிழும்போதும் காற்றின் மூலமாக பரவி மற்றவர்களுக்கு தொற்றுகிறது. உடலின் நுரையீரல் பகுதியை தாக்கும் பாக்ட்டீரியா நாளடைவில் அதிகரித்து மனிதனின் எலும்பு, நுரையீரல், மூளை ஆகிய பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பசியின்மை, எடை குறைதல், மாலையில் காய்ச்சல், இரவில் வியர்வை, நெஞ்சுவலி, சளியுடன் ரத்தம் கலந்து வருதல் போன்றவை இந்த நோயின் தொடக்க கால அறிகுறிகளாகும். இந்நிலையில், சமீப காலமாக காசநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது.

மனித உயிர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க புதிய மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நோயை தொடக்க காலத்திலேயே கண்டறிந்து மருந்து, மாத்திரைகள் மூலமாக சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் அனைத்து மாநிலஙகளுக்கும், காசநோய் கண்டறிய உதவும் நடமாடும் ஆய்வுக்கூட ஆம்புலன்ஸ் வாகனம், மற்றும் நடமாடும் எக்ஸ்ரே வாகனம் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கிராமப்புறங்களுக்கு சென்று இருமல், சளியால் அவதிப்படுவோரிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கபட்டு காசநோய் பாதிப்பு கண்டறியும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் ஒரு காசநோய் கண்டறிய உதவும் நடமாடும் ஆய்வுக்கூட ஆம்புலன்ஸ் வாகனம், மற்றும் நடமாடும் எக்ஸ்ரே வாகனம் ஆகியவை தமிழகம் முழுவதும் பயணித்து வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை தமிழகம் முழுவதும் இந்த ஆம்புலன்ஸ் சென்று ஆய்வு நடத்தியதில் மொத்தம் 82 ஆயிரம் பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து காசநோய் தடுப்பு பிரிவு டாக்டர்கள் கூறுகையில், ‘தற்போது தொடக்க நிலையிலேயே காசநோயை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நவீன கருவிகள் மூலமாக காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சிபிஎன்ஏஏடி என்கிற நவீன காசநோய் கண்டுபிடிக்கும் கருவி பயன்படுத்தப்படுகிறது. சளி பரிசோதனையை 2 மணி நேரத்தில் முடித்து காசநோய் பாதிப்பு உள்ளதா? என்பதை உறுதி செய்யும். மேலும், பரிசோதனைகளின் மூலமாக கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டால் எக்ஸ்ரே ஆய்வின் மூலமாக எளிதாக கண்டறியலாம். தற்போது, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 41 பேருக்கு தொடக்க நிலையில் காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சத்தான உணவுகளை உட்கொள்ள மாதந்தோறும் 500 உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை காசநோய் பாதித்தவரின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். சிகிச்சை பெறும் காலம் முழுவதும் அவர்களுக்கான உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும். அவ்வப்போது அவர்களது வீடுகளுக்கு நேரடியாக சென்று உடல்நிலை குறித்து பதிவு செய்யப்படும். தேவைக்கு ஏற்ப மேல்சிகிச்சைக்கும் அனுப்பி வைக்கப்படுவார்கள். வரும் 2025ம் ஆண்டிற்குள் காசநோயை முழுமையாக ஒழிப்பதை இலக்காக கொண்டு மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து செயலாற்றி வருகிறது’ என்றனர்.

Related Stories: