தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அருகே ஜோராக நடக்கும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர் விற்பனை: குடித்து விட்டு பொது இடங்களில் வீசும் குடிமகன்கள்

வேலூர்: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அருகே தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் டம்ளர் விற்பனை படுஜோராக நடந்து வருவதுடன் அவற்றை குடிமகன்கள் குடித்துவிட்டு பொதுஇடங்களில் வீசிவிட்டு செல்வதால் சுற்றுச்சூழல் பாதிப்படைவதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. குறிப்பாக பிளாஸ்டிக் கவர்கள், டம்ளர்கள், பிளாஸ்டிக் வாட்டர் பாக்கெட் உட்பட 10க்கும் மேற்பட்ட பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. மேலும் இதை கண்காணிக்க ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பின் கீழே உள்ள அதிகாரிகள் தங்களின் எல்லைக்குட்பட்ட கடைகள், ஓட்டல்கள் மற்றும் வணிக வளாகங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால், அந்த கடைகளுக்கு அபராதமும், பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதலும் செய்து வருகின்றனர். அரசு உத்தரவு அமலுக்கு வந்து ஓராண்டு ஆகிறது. ஆனால் இன்னும் முழுமையாக பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய முடியவில்லை.

அதேபோல், டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் பிளாஸ்டிக் கப், பை, வாட்டர்  பாக்கெட், வாட்டர் பாட்டில் உள்ளிட்ட பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என அனைத்து மாவட்டங்களிலும் உள்ள டாஸ்மாக் பார் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் பார் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் இந்த கடைகளின் அருகே அமைந்துள்ள பெட்டிக்கடை, தள்ளுவண்டி கடை மற்றும் இதர இடங்களில் பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட், காகித கப் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதேபோல், பார்களில் குடிமகன்களில் இருந்து ₹20 நுழைவு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. பார்களில் பிளாஸ்டிக் டம்ளருக்கு பதிலாக  கண்ணாடி டம்ளர், எவர்சில்வர் டம்ளர் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, தண்ணீர் வசதி செய்து கொடுப்பது அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்காக போதியளவு டாஸ்மாக் பார்களில் ஒத்துழைப்பு இல்லாததால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் தடையின்றி கிடைக்கிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் கூறியதாவது: டாஸ்மாக் கடைகளுக்கு வரும் குடிமகன்கள் மதுவை வாங்கி அங்கேயே பிளாஸ்டிக் டம்ளர்களில் ஊற்றி குடித்துவிட்டு சாலைகளில் வீசிவிட்டு செல்கின்றனர். தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் டம்ளர்கள் அதிகளவில் இங்கு புழக்கத்தில் உள்ளது. பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாத வகையில் டம்ளர்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் சிதறி கிடக்கிறது. அதிகாரிகள் பெயரளவில் மட்டும் ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். ஒரே நேரத்தில் உணவு பாதுகாப்பு, மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள், உள்ளாட்சி அதிகாரிகள் சேர்ந்து அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும். மேலும் டாஸ்மாக் கடைகளின் அருகே பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று தடை இருந்தும் சில பார்களில் சர்வசாதாரணமாக பயன்படுத்தி வருகின்றனர். இதை தடுக்கவும் கடுமையான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: