தமிழகத்தில் ஆண்டுதோறும் பாம்பு கடிக்கு 10,000 பேர் பலி: ஆய்வில் தகவல்

கோவை: தமிழகத்தில் பாம்பு கடியால் ஆண்டுதோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் விஷப்பாம்புகள் கடிப்பதால் ஏற்படும் உயிரிழப்புகள் விபத்து மற்றும் பல்வேறு நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இணையாக உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையில் உலக அளவில் ஆண்டுதோறும் 5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதில் 1.5 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். பாம்பு கடியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது. வருடத்திற்கு சுமார் 50 ஆயிரம் பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். இது மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்து இறந்தவர்களின் தகவல் அடிப்படையிலான புள்ளி விபரமே. மருத்துவமனைகளை அணுகாமல் உயிரிழந்தவர்களின் விபரங்களை சேர்த்தால் இந்த எண்ணிக்கை சுமார் 2 லட்சத்தை தொடும்.

இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள ரீடிங் பல்கலைக்கழக பேராசிரியர் சக்திவேல் வையாபுரி தலைமையிலான குழு கடந்த 2010-ம் ஆண்டு தமிழக அளவில் பாம்பு கடி பாதிப்புகள் குறித்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 10 ஆயிரம் பேர் பாம்பு கடிக்கு பலியாவதாகவும், பல ஆயிரம் பேர் கை கால் இழப்புகளால் பாதிக்கப்படுவதாகவும் தெரியவந்தது. இது குறித்து அவர் கூறியதாவது:- உலக அளவில் இந்தியாவில்தான் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கிறது. பாம்பு கடி குறித்த விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணமாகும். பாம்பு கடியால் அதிகமாக ஏழை எளிய கிராமப்புற மக்களே இறக்கின்றனர். இதனால் உயிரிழப்புகள் மட்டுமின்றி பாதிக்கப்படுபவர்களின் குடும்பங்கள் சமூக மற்றும் பொருளாதார பாதிப்புகளை சந்திக்கிறது. பாம்பு கடி உயிரிழப்புகளை குறைக்க முறையான மருத்துவ விழிப்புணர்வே தீர்வாகும். பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு அவசியமாகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான பாம்பு கடி சிகிச்சை மருந்துகள் இருப்பதில்லை. அதேபோல பாம்பு கடிக்கு சிகிச்சையளிக்க பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லை. இதனால் பெரும்பாலும் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்களை தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பாம்பு கடிக்கான விஷ முறிவு மருந்துகள் வைக்கப்பட்டிருக்கவேண்டும். உடனடியான சிகிச்சையே உயிரிழப்புகளை தடுக்க உதவும்.

பல்வேறு மருத்துவர்களிடம் பேசியபோது, பாம்பு கடியை உறுதிப்படுத்தி, பாம்பின் வகை கண்டறிவதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து தெரிவித்தனர். இந்திய அளவில் சுருட்டை, கண்ணாடி, கட்டு விரியன், நாகம் என 4 வகையான பாம்புகளே விஷமுடையவை. மற்ற பாம்புகள் விஷமில்லாதவை. விஷமில்லாத பாம்புகள் கடித்தால் எந்த சிகிச்சையும் எடுத்து கொள்ள வேண்டியதில்லை. அதேபோல விஷமுள்ள பாம்புகள் விஷம் செலுத்தாமல் கடித்தாலும் சிகிச்சை தேவைப்படாது.

பாம்புகள் கடித்த தடத்தை வைத்தே எவ்வகை பாம்புகள் கடித்துள்ளன என்பதை கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம். பாம்பு கடித்துள்ளதா?, எவ்வகை பாம்பு கடித்தது? என்பதை கண்டறியும் உபகரணங்கள், பாம்பு கடிக்கான எளிய மருந்துகள் முதலியவற்றை தயாரிக்கும் ஆராய்ச்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறோம். பாம்பு கடிக்கான சிகிச்சைகளுக்கு அதிக செலவாவதால் காப்பீடு திட்டத்தில் இதற்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் பாம்பு கடி குறித்த விழிப்புணர்வு பாடங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories: