×

போலீஸ் சேனல்

எஸ்.ஐ. கொலையும்... உருளப்போகும் குமரி போலீசும்..
களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் தீவிரவாதிகள் அப்துல் சமீம் மற்றும் தவுபீக் ஆகியோர் கைதாகி இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் கைதானதில் தமிழக போலீஸ் குறிப்பாக குமரி மாவட்ட போலீஸ் நிம்மதியானாலும் கூட இவங்க இரண்டு பேரும் நிபந்தனை ஜாமீனில் இருந்த போது இவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்காமல் கோட்டை விட்டது குமரி மாவட்ட போலீஸ் தான் என்று இப்போது காவல் துறையின் அனைத்து பிரிவுகளும் குற்றம் சாட்டி வருகிறார்கள். தலைமறைவான இவர்கள் இருவரும் மிகப்பெரிய சதி செயலுக்கு திட்டம் போடுகிறார்கள் என்று தெரிந்து கேரள போலீஸ் எச்சரித்து இருந்தும் கோட்டை விட்டுவிட்டார்கள் என்று குமரி மாவட்ட போலீஸ் மீது ஒட்டுமொத்தப்பழியும் விழுந்திருக்கிறது . இவர்கள் திருந்தி விட்டார்கள் என்று நம்பி வேறு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது இப்போது விபரீதம் ஆகி இருக்கிறது. இதற்கு யார் தலை உருள போகிறது என்பதுதான் இப்போது மிகப் பெரிய கேள்விக்குறியாகி உள்ளது.

அரக்கோணம் தனிப்பிரிவில் அதிர்ச்சி
வேலூர் மாவட்டத்தில் தனிப்பிரிவு எஸ்ஐக்கள், ஏட்டுகள் பலர் கட்டப்பஞ்சாயத்து, மணல் கடத்தல் என பல புகார்களின் பேரில் அதிரடியாக டிஐஜியால் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டனர். இது வேலூர் மட்டுமின்றி திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்திலும் தனிப்பிரிவு போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் சப் டிவிஷனில் அரக்கோணம் டவுன், தாலுகா, நெமிலி, பாணாவரம், தக்கோலம், காவேரிப்பாக்கம், அவலூர், சோளிங்கர், கொண்டபாளையம், அரக்கோணம் மகளிர் என 10 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் அரக்கோணம் டவுன், நெமிலியில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை கொடிக்கட்டி பறக்கிறதாம். அதேபோல் காவேரிப்பாக்கம், தக்கோலத்தில் மணல் கடத்தல் ஜரூராக நடக்கிறதாம். இதுபற்றி தனிப்பிரிவினர் எஸ்பிக்கு தகவல் கொடுக்கப்படுவதில்லையாம். இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் தனிப்பிரிவு எஸ்ஐக்கள், ஏட்டுகள் வேறு மாவட்டத்துக்கு தூக்கியடிக்கப்பட்ட சம்பவம் இங்கும் நடக்கலாம் என்ற அச்சத்தால் கொஞ்ச நாட்களுக்கு நாம் அடக்கியே வாசிப்போம் என்ற முடிவில் தனிப்பிரிவு போலீசார் உள்ளார்களாம்.

ஜல்லிக்கட்டு பதிவிலும் காசு பார்த்த காக்கிகள்
மதுரையின் மகுட விழாவான சித்திரைப் பெருவிழா நாட்களில் திருக்கல்யாணம் உள்ளிட்ட காலங்களில் விஐபிகளுக்கான டிக்கெட்டுகளை, மதுரை போலீசே வளைத்து வைத்துக் கொண்டு, தங்கள் உறவுகளுக்கு வழங்கி விடுவதாக ஏற்கனவே புகார் உள்ளது. தற்போது பொங்கல் பண்டிகை நாளில் அவனியாபுரத்திலும், அடுத்தடுத்த நாட்களில் பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் போலீசாரின் கைகளே ஓங்கி இருந்தது என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது. பொதுவாக எப்போதும் இல்லாத வகையில் பாலமேடு உள்ளிட்ட இடங்களில் ‘போலீஸ் கேலரி’ என்று தனியாக போலீசார், தாங்கள் சார்ந்தவர்களுக்கே தனி இடம் ஒதுக்கிக் கொண்டனர். வேறு யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. இதைவிட உச்சமாக,  ஜல்லிக்கட்டு காளைகள் பதிவின்போது, கால்நடைத்துறையினருடன் ‘பேச்சுவார்த்தை’ நடத்தி, நூற்றுக்கணக்கான டோக்கன்களை பேசி வாங்கி, பங்கிட்டுக் கொண்டிருக்கிற அதிர்ச்சித் தகவல்களும் வெளிவந்துள்ளது. இந்த டோக்கன்களை போலீசார், ஒரு டோக்கனுக்கு ₹3 ஆயிரத்திலிருந்து ₹5ஆயிரம் வரையிலும் விலை பேசி விற்றும் வருவாய் பார்த்திருக்கின்றனராம். இத்தோடு, இந்த டோக்கன் வாங்கியிருந்த காளைகளை, தங்கள் அதிகார பலத்தில் இடையில் உள்ளே நுழைத்து அனுப்பியதும், இதனைத் தட்டிக் கேட்டதால் ‘தடியடி’ நடத்தியதும் என மீறல்கள் தொடர்கிறது. வரும் காலங்களில் இந்த தவறுகள் தொடராமல் இருப்பதுடன், போலீஸ் மீதான மரியாதை மேம்பட, அப்பட்டமாக நடந்த இந்த ‘டீலிங்’ மீது, போலீஸ் உயர் அதிகாரிகள் ஒரு விசாரணை குழு அமைத்து நடவடிக்கை எடுப்பது அவசியம் என்கின்றனர் பொதுமக்கள்.


Tags : Police Channel , Police, Channel
× RELATED போலீஸ் சேனல்