×

விமானநிலைய பயணிகள் சோதனையில் நகைகள் மாயம் விழிபிதுங்கும் போலீசார்

மலைக்கோட்டை மாநகரில் விமான நிலைய பகுதி காவல் நிலைய போலீசாருக்கு பெரும் தலைவலி ஏற்படுத்தும் விதத்தில் மாதத்திற்கு 10க்கும் மேற்பட்ட நகைகள் மாயமாகும் வழக்குகள் வருவதால் விழிபிதுங்கி உள்ளனர். குற்றவாளிகள் யார் என துப்பு துலக்குவதில் கடும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளதாக கூறி கவலையடைந்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து திரும்பும் பயணிகள் குறிப்பிட்ட அளவு தங்கம் எடுத்து வர அனுமதி உண்டு. அளவுக்கு அதிகமாக கொண்டு வந்தால் அந்த நகைக்கு வரி செலுத்தி எடுத்து செல்லலாம். ஆனால் வரி தங்கத்தின் விலையை விட கூடுதலாக இருப்பதால் நகைகளை கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் விட்டு செல்வதும் வாடிக்கையான ஒன்று. அனுமதி உள்ள தங்கத்தை எடுத்து வரும் பயணிகளிடம் உடமைகள் சோதனை, பொருட்களுக்கான அனுமதி உள்ளிட்ட சோதனை முடிந்த பின் வெளியே வரும் பயணிகள், தங்கள் பொருட்கள் பத்திரமாக உள்ளதா என மீண்டும் சோதனை செய்யும் போது 1 பவுன் முதல் 2 பவுன் வரை மாயமாவதால் அதிர்ச்சி அடைகின்றனர். இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். இதுபோன்று மாதம் 10 புகார்கள் வருவதால் காவலர்கள் திகைப்பில் உள்ளனர். சோதனை செய்யும் போது இருக்கும் தங்கம், வெளியே வரும் போது எப்படி குறைகிறது என விழிபிதுங்கி உள்ளனர்.
பயணிகளின் புகாருக்கு முறையான விசாரணை இல்லாததால் விமான நிலைய அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் உள்குத்து இருக்கும் என புகார்தாரர்கள் வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

வசூல்வேட்டையில் எஸ்ஐ; நொந்துபோன கான்ஸ்டபிள்
புதுச்சேரியின் 2வது பெரிய நகரம் எனப்படும் வளர்ந்து வரும் பகுதியில் மணல் கடத்தல் அமோகமாக நடந்து வருகிறது. இதற்கு அந்த காவல்நிலையத்தின் உள்ளூர் போலீசார் பேருதவி செய்கின்றனராம். ஆனால் இது தெரியாத நேர்மையான காவலர் ஒருவர், சினிமா படத்தில் வருவதுபோல், சில நாட்களுக்கு முன்பு மணல் கடத்தலில் ஈடுபட்ட மாட்டு வண்டியை அதிரடியாக பறிமுதல் செய்து, கடத்திய நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்திருக்கிறார். ஆனால் `கடமை’’’’ தவறாத சப்-இன்ஸ்பெக்டரோ, அன்று மாலையே பணத்தை பெற்றுக் கொண்டு அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டார். அத்தோடு, மாட்டு வண்டியை இரவு 11 மணிக்கு யாருக்கும் ெதரியாமல் உரிமையாளரிடம் ஒப்படைத்தும் விட்டார். இதேபோல், பைபாஸ் ரோட்டில் நின்ற லாரி டிரைவரை சந்தேக வழக்கில் அழைத்து சென்று விசாரணை என்ற பெயரில் பணம் கேட்க, அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறியதால் வழக்கு பதிந்துள்ளார். ஆனால் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரின் பைக்கை பறிமுதல் செய்து எடுத்துச் சென்று பணத்தை பெற்றுக் கொண்டு இரண்டே நாளில் பைக்கை ஒப்படைத்தும் இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க, கட்டப்பஞ்சாயத்துகளால் அந்த சப்-இன்ஸ்பெக்டர் பணத்தில் ெகாழுத்து வருகிறார். பணம் இருந்தால் கொலையாளியும் தப்பித்து விடலாம் என வேதனையுடன் தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். சப்-இன்ஸ்பெக்டரின் இந்த வசூல் வேட்டையால் நொந்துபோன சுயமரியாதைமிக்க அந்த காவலர் வேறு இடத்துக்கு பணிமாற்றம் பெற்று சென்று விட்டது தனிக்கதை.

புரோக்கர்களுக்கு இன்பார்மர்களாக மாறிய போலீசார்
செம்மரக்கட்டை கூலித்தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் புரோக்கர்களையும், கடத்தல் ஆசாமிகளையும் பொறி வைத்து பிடிக்க ஆந்திர செம்மரக்கட்டை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் மாவட்ட மலை கிராமங்களிலும், மலையடிவார கிராமங்களிலும் ரகசியமாக முகாமிட்டிருந்தனராம். இதுபற்றிய விஷயத்தை ஏற்கனவே பெற்ற அனுபவத்தால் இங்குள்ள உள்ளூர் போலீசாருக்கு ஆந்திர போலீசார் தெரிவிக்கவில்லையாம். ஆனால், இதை எப்படியோ மோப்பம் பிடித்த உள்ளூர் போலீசார், புரோக்கர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து விட்டார்களாம்.இதனால் யாரையும் பிடிக்க முடியாமல் வெறுங்கையுடன் இங்கு ஆந்திர போலீசார் சுற்றி, சுற்றி வருகிறார்களாம். அதேநேரத்தில் நாம் ரகசியமாக சுற்றி வந்தும் தகவல் எப்படி வெளியே கசிந்தது என்பது புரியாமல் தங்களுக்கு உள்ளேயே ஒருவரையொருவர் சந்தேகக்கண்ணுடன் பார்த்துக் கொள்கிறார்களாம். இதை பார்த்து உள்ளூர் போலீசார் தங்களுக்குள் மவுனமாக சிரித்துக் கொண்டு, தங்கள் விசுவாச தகவலுக்கு சன்மானமும் பெற்றுக் கொண்டார்களாம். இவ்விஷயத்தில் கணியம்பாடி சர்க்கிளில்தான் பண மழை கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டியதாம்.
இது ஒருபுறம் என்றால் திருவண்ணாமலையில் செம்மரக்கட்டை கடத்தல் ஆசாமிகளே உள்ளாட்சி தேர்தலில் பணத்தை கொட்டோ கொட்டென்று கொட்டி பதவிகளை பிடித்துள்ளார்களாம். அதை போலவே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலும் நமது ஆட்கள் உள்ளூர் பதவிகளை பிடித்தால் அதை வைத்து நமது தொழிலை நாசுக்காக தொடரலாம் என்று கடத்தல் ஆசாமிகள் கணக்கு போடுகிறார்களாம்.

Tags : passengers ,Airport , Airport passengers, jewelry in check, magic wand, police
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...