குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடி கைது ஜாமீன் நிபந்தனையை நீக்க பீம் ஆர்மி தலைவர் புதிய மனு

புதுடெல்லி: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியதால் கைதான பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் தனக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளை நீக்கக் கோரி மனு செய்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியின் ஜும்மா மசூதியிலிருந்து, ஜந்தர் மந்தர் வரை கடந்த டிசம்பர் 20ம் தேதி பேரணி நடந்தது. போலீசார் அனுமதி மறுக்கப்பட்ட இப்பேரணியில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து, பேரணிக்கு தலைமை தாங்கிய பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஆசாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

4 வாரங்களுக்கு டெல்லிக்குள் நுழையக் கூடாது, எந்த போராட்டம், பேரணியில் பங்கேற்க கூடாது, ஒவ்வொரு சனிக்கிழமையிலும் கையெழுத்திட வேண்டும் என பல்வேறு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து ஆசாத் தரப்பில் மீண்டும் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘போராட்டம், பேரணியில் பங்கேற்க கூடாது என்பது அடிப்படை உரிமையை மீறுவதாகும்’’ என கூறப்பட்டுள்ளது.இந்த மனு டெல்லி மாவட்ட நீதிபதி காமினி லாவ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசாத் கூறிய முகவரியில் அவரது அலுவலகம் இயங்குகிறதா, அங்கு கூட்டங்கள் நடக்கிறதா என்பது குறித்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Related Stories: