6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு சிறுமியை பலாத்காரம் செய்த 2 பேர் குற்றவாளியாக அறிவிப்பு: டெல்லி செஷன்ஸ் நீதிபதி அதிரடி

புதுடெல்லி: கடந்த 6 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த 5 வயது சிறுமி பலாத்கார வழக்கில், சம்பந்தப்பட்ட 2 பேரையும் டெல்லி செஷன்ஸ் நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.கிழக்கு டெல்லி காந்தி நகரில் மனோஜ் ஷா, பிரதீப் குமார் என்ற 2 வாலிபர்கள், கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்தனர். அவரை கொடூரமாக தாக்கி சித்ரவதையும் செய்தனர். நிர்பயா பலாத்கார, கொலை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்ததால், சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடுமை வெளியில் வராமலே அடங்கியது.

பலாத்காரத்தால் சிறுமி இறந்து விட்டதாக கருதிய மனோஜ் ஷாவும், பிரதீப் குமாரும் பீகாரில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு தப்பிச் சென்றனர். ஆனால், சிறுமியை காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார், 40 மணி நேரத்திற்கு பின் சிறுமியை உயிருடன் மீட்டனர். தீவிர சிகிச்சைக்குப் பிறகு சிறுமியின் உடல்நிலை தேறியது. அவரை பலாத்காரம் செய்த 2 பேரும், அடுத்த சில நாட்களில் பீகாரில் கைது செய்யப்பட்டனர். அதே ஆண்டு மே மாதம் இவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் ஜூலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு 10 மாதத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக 6 நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டு, இறுதியில் 7வதாக கூடுதல் செஷன்ஸ் நீதிபதி நரேஷ் குமார் மல்ஹோத்ராவின் விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில், 2 பேரையும் நீதிபதி குற்றவாளியாக அறிவித்தார். இவர்களின் தண்டனை விவரத்தை வரும் 30ம் தேதி அறிவிப்பதாக நீதிபதி கூறியுள்ளார்.

நிருபர்களுக்கு குத்து

தீர்ப்புக்கு பின் குற்றவாளிகளை சிறையில் அடைக்க நீதிமன்றத்தில் இருந்து போலீசார் வெளியே அழைத்து வந்தபோது, அங்கு கூடியிருந்த நிருபர்களும், புகைப்படக்காரர்களும் செய்தி சேகரிக்க முண்டியடித்தனர். அதனால் ஆத்திரம் அடைந்த மனோஜ் ஷா, மூத்த பெண் நிருபர் உள்பட சில நிருபர்களுக்கு முகத்தில் குத்து விட்டுள்ளார். அது பற்றி நீதிபதியிடம் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

Related Stories: