×

மல்டி மீடியா, காணொளி வசதியுடன் போலீசார் தகவல் தொடர்புக்கு அதிநவீன போல்நெட் 2.0 சேவை: அடுத்த வாரம் தொடக்கம்

புதுடெல்லி: போலீஸ் தகவல் தொடர்புக்காக மல்டி மீடியா மற்றும் காணொளி காட்சி வசதியுடன் மேம்படுத்தப்பட்ட ‘போல்நெட் 2.0’ சேவையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த வாரம் தெடங்கி வைக்கிறார். போலீஸ் தகவல் தொடர்பு சேவைக்காக ‘போலீஸ் வயர்லெஸ் ஒருங்கிணைப்பு இயக்குனரகம்’ (டிசிபிடபிள்யூ) கடந்த 1946ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.  இது, போல்நெட் என்ற தகவல் தொடர்பு சேவையை கடந்த 2006ம் ஆண்டு முதல் அளித்து வருகிறது. இதன்மூலம், சட்ட ஒழுங்கு பிரச்னை நேரத்தில் போலீசாரும், இதர பாதுகாப்பு படையினரும் ரேடியோ அலைவரிசைகள் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். மேலும், தொலைதூர பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகளுக்கான தகவல் தொடர்பு இணைப்பையும் இந்த போல்நெட் ஏற்படுத்துகிறது.

தற்போது, மல்டி மீடியா, காணொளி காட்சி வசதிகளுடன் போல்நெட் சேவை மேம்படுத்தப்பட்டு, போல்நெட் 2.0 எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக நாட்டின் 4 முக்கிய இடங்களில், இன்டர்நெட், காணொளி காட்சி வசதியுடன் தகவல் தொடர்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. பேரழிவு மீட்பு நடவடிக்கையின்போது மத்திய, மாநில பாதுகாப்பு படையினர்,  தீயணைப்பு படையினர், மருத்துவமனைகள், பேரிடர் மீட்பு படையினர் ஆகியோரின்  தகவல் தொடர்புகளை போல்நெட் 2.0 ஒன்றிணைக்கும். இவற்றின் மூலம் போட்டோக்கள்,  வீடியோக்கள் மற்றும் இதர விவரங்களை பகிர்ந்து கொள்ள முடியும். புதிய  போல்நெட் 2.0 சேவை, செயற்கைக்கோளின் சி-பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் மூலம்  செயல்படும். தொலை தூரங்களில் பணியாற்றும் போலீசார், துணை ராணுவப் படையினர் தங்கள் குடும்பத்தினரை போன் மூலம் தொடர்பு கொள்ளும் வசதியையும் போல்நெட் 2.0 அளிக்கும். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பேரழிவு நிவாரண அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு டெல்லி விஞ்ஞான் பவனில் நாளை நடைபெறவுள்ளது. இதில் போல்நெட் 2.0 சேவையை  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த வாரம் தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  போலீஸ் தகவல் தொடர்பில் ‘மேக் இன் இந்தியா’ ஹார்டுவேர் பயன்பாடு குறித்த தொழில்நுட்ப பயிற்சியும், டெல்லியில் நடக்கும் 2 நாள் கருத்தரங்கில் நடக்கிறது.

Tags : Sophisticated BoNet ,2.0 service, police, multimedia , video communication,Starting next week
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு