×

கீழ்பென்னாத்தூர் அருகே பெரும் பரபரப்பு கூத்தாண்டவர் விழாவில் மோதல் சுவாமி சிலை, 20 வீடுகள் சூறை: சமரசம் செய்த எஸ்ஐக்கு உருட்டுக்கட்டை அடி

கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் அருகே கூத்தாண்டவர் திருவிழாவில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 வீடுகளை சூறையாடி, சுவாமி சிலை, கார், 3 பைக்குகளை அடித்து நொறுக்கினர். இந்த தாக்குதலில் சமரசம் பேச சென்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு உருட்டுக்கட்டை அடி
விழுந்தது. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த கருங்காலிகுப்பம் கூத்தாண்டவர் கோயிலுக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலத்தில் ஒருபிரிவினர் பயிர் செய்து வந்தனர். இதற்கான குத்தகை தேதி முடிந்ததால், வேறு பிரிவினர் குத்தகை எடுத்து பயிர் வைக்க முயற்சித்தனர். இதுதொடர்பாக இருபிரிவினர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் காணும் பொங்கலையொட்டி இரவு 11 மணியளவில் சுவாமி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை கருங்காலிகுப்பம் கிராம மக்கள் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த மற்றொருதரப்பை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர்,  ‘கோயில், கோயில் நிலம், சுவாமி சிலை ஆகிய அனைத்தும் எங்களுக்கே சொந்தம்’ எனக்கூறி தகராறு செய்தனராம். இதனால் இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.

தொடர்ந்து ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் அங்குள்ள 20க்கும் மேற்பட்டோரின் வீடுகளை அடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும், கதவு, ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் வீடுகளின் வெளியே நிறுத்தியிருந்த கார், 3 பைக்குகளை அடித்து நொறுக்கினர். கற்களை எடுத்து வீடுகள் மீது சரமாரி வீசினர். இதனால் பெண்கள் அலறியடித்தபடி வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டனர். சில பெண்கள் வெளியே ஓடி பக்கத்து வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.இதற்கிடையே அந்த கும்பல் கூத்தாண்டவர் சுவாமி சிலையையும் ஆவேசமாக  தாக்கி உடைத்தனர். இந்த தாக்குதலில் ெபண்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். மற்றொரு தரப்பில் பி.கே.ஏழுமலை என்பவர் காயமடைந்தார். இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
 
தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சமாதானம் செய்ய முயன்றனர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர், திடீரென எஸ்ஐ தமிழரசன் தலையில் உருட்டுக்கட்டையால் தாக்கினார்.  படுகாயமடைந்த அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று காலை 8 மணியளவில் தாசில்தார் ராமபிரபு  இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி கோயில் நிலம் தொடர்பான பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும். எனவே, யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றார். பதற்றம் நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பு ேபாடப்பட்டுள்ளது.

Tags : Swami ,houses , Statue , Swami, 20 houses collapsed, Kiipennathoor
× RELATED முடிவற்ற காலத்தின் எல்லையற்ற பரம்பொருள்