×

பல தடைகளை தாண்ட வேண்டியுள்ளது இந்தியாவில் தொழில் நடத்துவது கஷ்டம்: டாடா சன்ஸ் நிறுவன தலைவர் பேச்சு

மும்பை: இந்தியாவில் நிறுவனங்கள் தொழில் தொடங்கி நடத்துவது பெரும் கஷ்டமாக உள்ளது; அதற்கு பல்வேறு தடைகளை தாண்ட வேண்டியுள்ளது. மேலாண்மை, தொழில்நுட்பம் போட்டியை சமாளிக்கக் கூடிய திறன் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் என்.சந்திரசேகரன் கூறினார். மும்பையில் நானி பல்கிவாலா நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் பேசினார். அவர் பேசியதாவது: இந்தியாவில் தொழில்கள் முன்னேற்றம் அடைய பல வகையில் ஒத்துழைப்பு மிகவும் தேவை. அரசு தரப்பில் இருந்து முழு அளவில் ஆதரவு இருக்க வேண்டும். இல்லாவிட்டால், தொழில் கடுமையாக பாதிக்கப்படும்.   இப்போதுள்ள இளைஞர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். அவர்களை வேகமாக செல்லுங்கள் என்று சொல்லி வந்தால் மட்டும் வளம் காண முடியாது; அவர்களுக்கு தேவையான அனைத்து வகையான ஒத்துழைப்புகளும் முக்கியம். எந்த ஒரு துறையிலும் மந்தமாக இருக்க கூடாது என்பது உண்மை தான். ஆனால் அதற்காக, எந்த ஆதரவும் தராமல், வேகமாக சென்றால் தான் முன்னேற்றம் காண முடியும் என்று  மக்களை தள்ளிவிடுவதன் மூலம் வளர்ச்சியைக் காண முடியாது. தொலைநோக்கு சிந்தனை, நவீனத்தை புகுத்துதல், சிறந்த மேலாண்மை தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றில் மாற்றம் செய்தால்தான் முன்னேற்றம் காண முடியும்.

 பொருளாதாரம், தொழில் முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், தற்போதைய சூழ்நிலைக்கு நம்மை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும். பழைய முறையிலேயே தொழில் செய்து கொண்டு இருக்க முடியாது. அதனால் முன்னேற்றம் காண முடியாது. நவீன தொழில்நுட்பம், பணி கலாசாரம் ஆகியவற்றில் மேம்பாடு காண வேண்டும். பெரிய அளவிலான மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும்.இந்தியாவில் ஊழியர்கள் கடுமையாக உழைக்கும் திறன்படைத்தவர்கள். அவர்களின் உழைப்பை சரியான திசையில் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் வளர்ச்சி என்பது உறுதியானதாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) 5 சதவீதமாக இருக்கும் என்று கணிப்பு வெளியாகியுள்ளது. இதை மனதில் கொண்டுதான் மேற்கண்டவாறு அவர் பேசியுள்ளார். பொருளாதார வளர்ச்சிக்காக, சீர்திருத்த நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தற்போது எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.


Tags : Tata Sons ,president talks ,India ,Tata Sons Chairman , Tata Sons,Chairman, talks, India
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...