×

காணும் பொங்கல் தினத்தில் மட்டும் ரூ.3 கோடியே 46 லட்சம் வருவாய்: மாநகர போக்குவரத்து மேலாண் இயக்குநர் தகவல்

சென்னை: காணும் பொங்கல் தினத்தில் மட்டும் ரூ.3 கோடியே 46 லட்சம் வருவாய் வந்துள்ளது என்று மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மற்றும் சுற்றி உள்ள சுற்றுலா தலங்களான அண்ணா சதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, வி.ஜி.பி. கோவளம், மாமல்லபுரம், கிஷ்கிந்தா, குயின்ஸ்லேண்ட், பெசன்ட் நகர், பிராட்வே, தாம்பரம், திருவான்மியூர், எம்.ஜி.எம்., முட்டுக்காடு கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் சுற்றுலாப் பொருட்காட்சி நடைபெறும் தீவுத் திடல் ஆகிய இடங்களுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் பொதுமக்களின் வசதிக்காக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, காணும் பொங்கலை முன்னிட்டு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், மேற்காணும் இடங்களுக்கு வழக்கமாக இயக்கப்படுகின்ற 1,000 பேருந்துகளை காட்டிலும், கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்பட்டன.

மேலும், இந்த ஆண்டு மாமல்லபுரத்திற்கு எதிர்பார்த்ததை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததையொட்டி, பெரிய பேருந்துகள் நகருக்குள் இயக்க முடியாத நிலையில் மாமல்லபுரம் புறவழிச்சாலையிலிருந்து சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல ஏதுவாக 30க்கும் மேற்பட்ட சிற்றுந்துகள் இயக்கப்பட்டன. அந்தவகையில், இந்தாண்டு காணும் பொங்கலையொட்டி இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு ஒட்டுமொத்தமாக ரூ.3 கோடியே 46லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இவ்வாறு மாநகர போக்குவரத்து மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Pongal, Rs 3 crore, Rs 46 lakh, Revenue, Municipal Transport Managing Director, Information
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...