×

பாரம்பரிய மரங்களை நடுவதால் தமிழகத்தில் காற்று மாசு பிரச்னையை குறைக்க முடியும்: நிபுணர்கள் கருத்து

சென்னை: வேம்பு, புங்கை மரங்களை அதிக அளவில் நடுவதன் மூலம் தமிழகத்தில் காற்று மாசால் ஏற்படும் பிரச்னைகளை குறைக்க முடியும் என்று தாவரவியல் அறிஞர்கள் கூறினர். அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அறுவடைக்கு பின் மீதமுள்ள பயிர்களின் அடிப்பகுதியை எரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியில் காற்று மாசின் அளவு அதிகரித்தது. அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் வாகன புகையால் சென்னையிலும் காற்று மாசு அதிகரித்து வருகிறது. போகிப் பண்டிகை அன்று காற்றுமாசு மேலும் அதிகரித்தது. சென்னையில் பெருகி வரும் காற்றுமாசை கட்டுப்படுத்துவது தொடர்பாக தாவரவியல் அறிஞர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

கிராமங்களில் வேப்ப மரத்தை அதிகமாக நடுமாறு நம் முன்னோர் கூறினர். வேப்ப மரம் மட்டுமல்லாது பெரும்பாலான இருவித்திலை தாவரங்கள் (செடி முளைக்கும் போது விதை இரண்டாக பிரியும் தாவரங்கள்) அதிக அளவு ஆக்சிஜனை வெளியிடுகின்றன. ஒளிச்சேர்க்கை செய்வது, ஆக்சிஜனை வெளியிடுவது ஆகியவற்றை வைத்து தாவரங்கள் பல்வேறு விதமான வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் பொதுவாக சொல்ல வேண்டுமென்றால், பாரம்பரிய மரங்களில் வேப்ப மரம், புங்கை மரம் ஆகியவை அதிக அளவு கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகின்றன.

சென்னை போன்ற நகரங்களில் இந்த மரங்களை அதிக அளவில் நட வேண்டும். ஆனால் வேகமாக வளர வேண்டும் என்பதற்காக சென்னையில் சரக்கொன்றை, மயில் கொன்றை, அயல்வாகை மரங்களை நடுகின்றனர். வேம்பு, புங்கை மரத்தை ஒப்பிடும்போது, இவை குறைவான அளவிலேயே காற்றை தூய்மைப்படுத்துகின்றன. மரத்தின் வயதை பொறுத்தும், மரத்தின் உயரம், மரம் ஆக்கிரமித்திருக்கும் பரப்பை பொறுத்தும் ஆக்சிஜன் வெளியிடும் அளவு அதிகரிக்கும். அதனால் சென்னை உள்பட பெரு நகரங்களில் வேம்பு, புங்கை மரங்களை அதிக எண்ணிக்கையில் நடுவதன் மூலம் இனி வரும் ஆண்டுகளில் காற்று மாசால் ஏற்படும் பிரச்னைகளை குறைக்க முடியும். இவ்வாறு தாவரவியல் அறிஞர்கள் கூறினர்.

Tags : Experts ,Tamil Nadu , Traditional Trees, Planting, Tamil Nadu, Air Pollution, Problem, Experts, Opinion
× RELATED கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பினால்...