ஆந்திர நகை வியாபாரியிடம் ரூ.1.23 கோடி பறிப்பு இரானிய கொள்ளையர்கள் 4 பேர் போபாலில் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னை: சென்னையில் ஆந்திர நகை வியாபாரியிடம் ஒரு கோடியே 23 லட்சத்தை பறித்து தப்பிய இரானிய கொள்ளையர்கள் 4 பேரை போபாலில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (20). நகை வியாபாரியான இவர், கடந்த 10ம் தேதி நகை வாங்குவதற்காக ஒரு கோடியே 23 லட்சத்துடன் ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் வந்தார். பின்னர் சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடையில் 4 கிலோ தங்க கட்டி வாங்கிக் கொண்டு நெல்லூர் செல்வதற்காக யானைக்கவுனி, திருப்பள்ளி தெருவழியாக நடந்துவந்தார். அப்போது 2 பைக்கில் வந்த 4 பேர், தினேஷ்குமாரை மறித்து “நாங்கள் டெல்லி போலீஸ் சிறப்பு அதிகாரிகள் என்று கூறி, தினேஷ்குமார் வைத்திருந்த பையை பிடுங்கிக்கொண்டு தப்பிவிட்டனர்.

இதுகுறித்து யானைக்கவுனி போலீசில் தினேஷ்குமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பூக்கடை துணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்படி, உதவி கமிஷனர் லட்சுமணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சித்தார்த், ராஜகுமார் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கொள்ளையர்கள் பயன்படுத்திய பைக் நம்பர் மத்திய பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில், தனிப்படை போலீசார் முகவரியை வைத்து மத்தியபிரதேசம், போபால் சென்று விசாரித்தனர்.

இரு தினங்களுக்கு முன் போபாலில் அசேன். அபு ஹதர் அலி, சாதிக், ஹைதர் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர்கள் இரானிய கொள்ளையர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து 1 கிலோ 700 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தங்கத்தை எங்கு பதுக்கி வைத்துள்ளனர். இவர்களுக்கு பின்னணியில் யார் உள்ளனர் என்று விசாரித்து வருகின்றனர்.விசாரணையில் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பல இடங்களில் இவர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதில் தொடர்புடையதாக சில தினங்களுக்கு முன்பு ஆந்திராவில் 6 கொள்ளையர்களை கைது செய்தனர். பிடிபட்ட இரானிய கொள்ளையர்களிடம் தனிப்படை போலீசார் மேலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: