×

எழும்பூரில் ரயில்களுக்கு பயன்படுத்தும் குழாய் தண்ணீரில் டீ தயாரித்து விற்பனை?

* சமூக வலைதளத்தில் வீடியோ பரவல்
* ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: எழும்பூர் ரயில்நிலையத்தில் குழாயில் செல்லும் தண்ணீரை பிடித்து டீ தயாரித்து விற்பனை செய்வதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ தொடர்பாக, ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களான செங்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விழுப்புரம் போன்ற பகுதிகளுக்கு தினமும் 15க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது. ரயில்களில் டிக்கெட் குறைவு என்பதாலும் விரைந்து செல்ல முடியும் என்பதாலும் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரயிலில் பயணம் செய்பவர்கள் அவசரமாக புறப்பட்டு வரும் நபர்கள் ரயில்நிலையத்தில் விற்பனை செய்யப்படும் கடைகளில் உள்ள பொருட்கள் கூடுதலான விலைக்கு விற்பனை ரயில் பயணத்தின் போது வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மேலும் ரயில்களில் தங்களுடைய உறவினர்களை வழி அனுப்ப வருபவர்கள் அதிக நேரம் காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையங்களில் உள்ள கடைகளில் டீ, பால், காபி போன்றவை வாங்கி சாப்பிடுகின்றனர். பொங்கல் போன்ற விடுமுறை நாட்களில் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் ரயில் நிலைய கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த கூட்ட நெரிசலை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி அப்பகுதி கடைகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக கூறுகின்றனர்.

கடந்த வாரம் பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பு எழும்பூர் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது எழும்பூர் ரயில்நிலையத்தின் 7வது நடைமேடையில் உள்ள ஒரு டீ, பிஸ்கட், தண்ணீர் பாட்டில் விற்பனை கடையில் ஊழியர் ரயில்களில் கழிவறைகளுக்கு பயன்படுத்த தண்ணீர் கொண்டு செல்லும் குழாயில் வரும் தண்ணீரை ஒரு குவளையில் பிடித்து கடையில் வைத்துள்ள டீ கேனில் செல்போனில் பேசிக் கொண்டே ஊற்றியுள்ளார்.
இதை அங்கு ரயிலுக்காக காத்திருந்த பயணி ஒருவர் தன்னுடைய செல்போனில் படம் பிடித்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து எழும்பூர் ரயில்வே அதிகாரிகளுக்கும் புகார் சென்றதையடுத்து 7வது நடைமேடையில் உள்ள அந்த கடையை மூட உத்தரவிட்டனர்.

இதுகுறித்து எழும்பூர் ரயில்வே அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘எழும்பூர் ரயில்நிலைய 7வது நடைமேடையில் உள்ள ஒரு கடையில் ரயிலுக்கு பயன்படுத்தும் தண்ணீரை பிடித்து டீ கேனில் ஊற்றுவது போல் வீடியோவை பயணி ஒருவர் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து புகார்கள் வந்தவுடன் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று ஆய்வு செய்த போது டீ கேனில் உள்ள டீ, பால் போன்றவை எப்போதும் சூடாக இருக்க வேண்டும் என்பதற்காக அதில் தண்ணீர் ஊற்றும் ஒரு பாய்லர் உள்ளது. அதில்தான் அவர் ரயில்களுக்கு பயன்படுத்தும் தண்ணீரை பிடித்து ஊற்றியுள்ளதாக தெரிவித்தார்.

ஆனாலும் அந்த பயணி எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்ட வீடியோவால் ரயில் பயணிகள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே உரிய விசாரணை செய்த பிறகுதான் சம்பந்தப்பட்டவர்களிடம் கடை சாவியை ஒப்படைக்க முடியும். தற்போது 7வது நடைமேடையில் உள்ள அந்த கடை மூடி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 24ம் தேதி கடையின் உரிமையாளர் மற்றும் தண்ணீரை பிடித்து ஊற்றிய ஊழியரிடம் உரிய விசாரணை செய்யப்படும். தவறு நடந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Tags : Egmore , Egmore, train, tap water, tea making and selling?
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...