×

சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சைக்கு கண்டனம் தெரிவித்து ஷீரடியில் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: கோயில் வழக்கம்போல் திறந்திருக்கும் என அறிவிப்பு

ஷீரடி: சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சைக்கு கண்டனம் தெரிவித்தும், இந்த பிரச்னையில் முதல்வர் உத்தவ் தாக்கரே தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வலியுறுத்தியும் இன்று முதல் ஷீரடியில் காலவரையற்ற வேலை
நிறுத்தம் நடைபெறும் என்று அந்நகர மக்களும், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்களும் அறிவித்துள்ளனர். ஆனால், சாய்பாபா கோயில் வழக்கம்போல திறந்திருக்கும் என்றும் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும் என்றும் கோயில் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உலகப்புகழ் பெற்ற சாய்பாபா கோயில் உள்ளது. 102 ஆண்டுகளுக்கு முன்பு சாய்பாபா சமாதி அடைந்த இடத்தில்தான் இந்த கோயில் அமைந்துள்ளது.இந்த கோயிலுக்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது பல வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி வருகை தருகிறார்கள். இதனால், இந்தியாவின் புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாகவும், முக்கிய நகரங்களில் ஒன்றாகவும் ஷீரடி விளங்குகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிராவின் பர்பனி மாவட்டத்தில் உள்ள ‘பாத்ரி’ என்ற இடத்தில்தான் சாய்பாபா பிறந்ததாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. பாத்ரியிலும் சாய்பாபா கோயில் ஒன்று உள்ளது.

இந்த கோயிலுக்கும் பல இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சாய்பாபா பக்தர்கள் வந்து செல்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு பாத்ரிக்கு வந்து சாய்பாபாவை தரிசனம் செய்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாத்ரியில்தான் சாய்பாபா பிறந்தார் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் பாத்ரியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த முதல்வர் உத்தவ் தாக்கரே, பாத்ரியில் உள்ள சாய்பாபா கோயிலின் மேம்பாட்டு பணிகளுக்காகவும் அந்நகரின் மேம்பாட்டுக்காகவும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பிறகு சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை பெரிய அளவில் வெடித்தது.

நேற்று முன்தினம் பேட்டியளித்த தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் மூத்த தலைவருமான துர்ராணி அப்துல்லா கான், ‘‘பாத்ரியில்தான் சாய்பாபா பிறந்தார் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. சாய்பாபாவின் கர்மபூமி ஷீரடி என்றால், அவரது ஜென்மபூமி பாத்ரி. பாத்ரியிலும் சாய்பாபா கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். பாத்ரியின் மேம்பாட்டுக்காக முதல்வர் நிதி ஒதுக்குவதாக அறிவித்திருப்பதை தொடர்ந்து பாத்ரியில் உள்ள சாய்பாபா கோயில் பிரசித்திப் பெற்று, ஷீரடி கோயில் தனது முக்கியத்துவத்தை இழந்து விடும் என்று ஷிர்டி மக்கள் அச்சப்படுகிறார்கள்’’ என்று கூறியிருந்தார்.

சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை ஷீரடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களை கடுமையாக அதிருப்தியடையச் செய்துள்ளது. இந்த சர்ச்சைகளை கண்டித்தும், சாய்பாபா பிறந்த இடம் தொடர்பான பிரச்னையில் முதல்வர் உத்தவ் தாக்கரே தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வலியுறுத்தியும் இன்று முதல் ஷிரடியில் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக ஷீரடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக சாய்பாபா கோயில் மூடப்படும் என்று வதந்தி பரவியதால் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், கோயில் மூடப்படாது என்று அறிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது கோயிலை நிர்வகிக்கும் சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை. இதுகுறித்து அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி தீபக் முக்லிகர் நேற்று கூறுகையில், ‘‘வழக்கம்போல் கோயில் திறந்திருக்கும். சாய்பாபாவுக்கு வழக்கமான பூஜைகள், ஆர்த்திகள் நடைபெறும். தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடையேதும் இல்லை. கோயிலில் அன்னதானக்கூடம் உட்பட வழக்கமாக நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளும் தடையின்றி நடத்தப்படும்’’ என்றார்.

இதற்கிடையே, இந்த காலவரையற்ற பந்த் போராட்டத்துக்கு ஷிர்டி நகர மக்களும், 12 கிராம மக்களும் இணைந்த கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. ஷிரடியை சேர்ந்த தீவிர சாய்பாபா பக்தரான நிதின் கோட்டே கூறுகையில், ‘‘சாய்பாபா பிறந்த இடம் குறித்த பிரச்னையில் முதல்வர் உத்தவ் தாக்கரே தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் வரை பந்த் நீடிக்கும். முதல்வரிடம் யாரோ தவறான தகவலை தெரிவித்திருக்கிறார்கள்’’ என்றார். இந்த பிரச்னை குறித்து ஷிர்டியை உள்ளடக்கிய அகமத்நகர் தொகுதி பாஜ எம்.பி., சுஜய் விகே பாட்டீல் கூறுகையில், ‘‘சாய்பாபா பிறந்த இடம் குறித்து இதுவரை சர்ச்சை எழுந்தது இல்லை. மாநிலத்தில் புதிய அரசு பதவிக்கு வந்த பிறகுதான் இந்த சர்ச்சை எழுப்பப்பட்டிருக்கிறது. இதற்கு எதிராக ஷீரடி மக்கள் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பார்கள்’’ என்றார்.

Tags : strike ,birthplace ,Shirdi ,Sai Baba ,Sai Baba: Announcing Temple , Saibaba, place of birth, controversy, condemnation, shiradhi, from today, strike
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து