×

தூத்துக்குடியில் கார் மீது லாரி பயங்கர மோதல் சென்னை தொழிலதிபரின் பேரன், பேத்தி உட்பட 4 பேர் பலி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கார் மீது லாரி மோதியதில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரின் பேரன், பேத்தி உட்பட 4 பேர் உடல் நசுங்கி பலியாகினர். சென்னை, அடையாறு சாஸ்திரிநகரை சேர்ந்தவர் தொழிலதிபர் சுபாஷ் சந்திரபோஸ்(73). இவர் மனைவி லட்சுமிபிரபா, மகள் கவிதா, பேத்தி ரம்யா(20), பேரன் வீரேந்திரன்(15) மற்றும் ரம்யாவின் தோழி பார்கவி(23) ஆகியோர் தென்மாவட்ட கோயில்களில் தரிசனம் செய்வதற்காக கடந்த 16ம் தேதி இரு கார்களில் புறப்பட்டனர்.
சுபாஷ்சந்திரபோஸ், லட்சுமி பிரபா, கவிதா ஒரு காரில் இருந்தனர். காரை சென்னையைச் சேர்ந்த சந்திரன் ஓட்டினார். வீரேந்திரன், ரம்யா, பார்கவி ஆகியோர் மற்றொரு காரில் வந்தனர். காரை திருச்சி, அம்மாபேட்டையைச் சேர்ந்த ஜோபின்ரெமிஜியஸ்(29) ஓட்டினார்.

மதுரை, விருதுநகர் மாவட்ட கோயில்களில் தரிசனம் முடித்து நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு திருச்செந்தூருக்கு புறப்பட்டனர். இரவு 9 மணியளவில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அருகே மேம்பாலத்தில் கார் வந்தபோது, துறைமுகத்தில் இருந்து மதுரைக்கு சென்ற கன்டெய்னர் லாரி பயங்கரமாக மோதியது. இதில் காரில் இருந்த வீரேந்திரன், டிரைவர் ஜோபின் ரெமிஜியஸ், ரம்யா, பார்கவி ஆகியோர் அதேஇடத்தில் உடல் நசுங்கி இறந்தனர். வீரேந்திரன் உடல் காரின் முன்பக்கம் சிக்கியதால் பொக்லைன் இயந்திரம் உள்ளிட்ட மீட்பு வாகனங்கள் மூலம் 4 மணி நேரம் போராடி மீட்டனர். லாரி டிரைவர் மதுரை பேரையூர், சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகரை சிப்காட் போலீசார் கைது செய்தனர்.

* உதார்’ விட்ட தொழிலதிபர்
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் விபத்தில் இறந்தவர்கள் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கு வந்த சுபாஷ்சந்திரபோஸ், தன்னை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் சகோதரர் என கூறியுள்ளார். மேலும் விரைவில் பிரேத பரிசோதனை செய்யக்கூறி டாக்டர்கள் மற்றும் பணியாளர்களை மிரட்டினார். பிரேத பரிசோதனை செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? என்றும் கேட்டுள்ளார். செய்தி சேகரிக்க வந்த நிருபர்கள், போட்டோ கிராபர்களுக்கும் மிரட்டல் விடுத்தார். போலீசார் விசாரணையில், அவர் பொள்ளாச்சி ஜெயராமனின் உறவினர் இல்லை என்பது தெரிய வந்தது.

Tags : grandson ,Chennai ,granddaughter ,businessman ,Four , Tuticorin, car, truck, terror collision, Chennai businessman, grandson, granddaughter, 4 people, killed
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...