×

குள்ளநரி கிடைக்காததால் வந்தவாசியில் முயல் விடும் திருவிழா

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் ஒவ்வொரு காணும் பொங்கலன்றும் கிராம மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதற்காகவும், விவசாயம் நல்ல முறையில் இருக்க வேண்டியும், குள்ளநரி விடும் திருவிழா நடப்பது வழக்கம். கடந்த 6 ஆண்டுகளாக குள்ளநரி கிடைக்காததால் முயல் விடும் திருவிழாவாக மாற்றினர். விழாவையொட்டி நேற்று முயலுக்கு மாலை அணிவித்து குங்குமமிட்டு டிராக்டரில் கொண்டுவந்தனர். பின்னர் முயலை நான்கு திசைநோக்கி எடுத்து செல்லப்பட்டு விடப்பட்டது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீது உரசியபடி சென்றால் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படாது என்பது நம்பிக்கை. இதையொட்டி முன்னதாக குழந்தைகளின் தலையில் முயலை ெதாட்டு எடுத்தனர்.

பின்னர் சுவாமி முன்பாக நட்டு வைக்கப்பட்டிருக்கும் வாழை மரத்தை அர்ச்சகர் வெட்டினார். வெட்டிய வாழை மரத்தில் இருந்து எடுக்கப்படும் நாரை வீட்டில் கட்டி வைத்தால் நல்லது நடக்கும் என்பது ஐதீகம். எனவே அந்த நாரை பக்தர்கள் போட்டிப்போட்டு எடுத்தனர். இந்த வினோத திருவிழா நேற்று அங்குள்ள துணை மின் நிலையம் எதிரில் உள்ள மைதானத்தில் நடந்தது. இதில் முயலை விட்டபோது பொதுமக்கள் துரத்தி பிடிக்க சென்றனர். யார் கையிலும் சிக்காமல் முயல் தெற்கு திசை நோக்கி சென்றது. கரும்பு தோட்டத்தில் புகுந்த முயலை பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் பொதுமக்கள் திரும்பினர்.

Tags : rabbit fest ,Vandavasi , Vandavasi , fox , Rabbit Fest
× RELATED தெள்ளார் அருகே நிலத்தகராறில் விவசாயி...