தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்: 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கலாம்

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது.உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின்படி போலியோவை ஒழிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் போலியோ சொட்டு மருந்து வழங்க சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும். இதன்படி இந்த ஆண்டிற்கான சிறப்பு முகாம் நாளை தமிழகம் முழுவதும் நடக்கிறது.இதுதொடர்பாக அனைத்து துறை ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இந்த முறை சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள் உள்ளிட்ட இடங்களில் 1438 நிரந்தர மையங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையம், வழிபாட்டுதலம், மார்க்கெட் பகுதிகளில் 165 மையங்கள், செங்கல் சூளைகள், கட்டுமான பணி நடைபெறும் இடங்களில் 45 மையங்கள் என்று மொத்தம் 1645 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

ஒவ்வொரு மையத்திலும் நான்கு பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் செயல்படும் மையங்கள் காலை முதல் இரவு வரை செயல்படும். இதை தவிர்த்து நடமாடும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.சிறப்பு முகாம் முடிந்தவுடன் அடுத்ததாக, வீடாக வீடாக சென்று ஆய்வு செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்படி இரண்டு பணியாளர்கள் ஒரு குழுவாக பிரிக்கப்பட்டு வீடு வீடாக ஆய்வு செய்வார்கள். சென்னையில் 300 முதல் 400 வீடுகளுக்கு ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது.இந்த ஆய்வின் போது சொட்டு மருந்து வழங்கப்பட்ட வீடுகளில் x குறியீடும், வழங்கப்படாத வீடுகளில் p குறியீடும் போடப்படும். மொத்தம் 7 ஆயிரம் ஊழியர்கள் இந்த முகாமில் பணியாற்ற உள்ளனர். நாளை நடைபெறும் முகாமில்களில் 7 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: