×

கோயில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் பணம் கொள்ளை

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே நள்ளிரவில் கோயில் உண்டியலை உடைத்து முகமூடி நபர்கள் ரூ. 1 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அஜிஸ் நகர் கிராமத்தில் பழமையான முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இது அஜிஸ் நகர் மற்றம் நெய்வேலி என்எல்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குலதெய்வ கோயிலாக இருந்து வருகிறது. நேற்று வழக்கம்போல் கோயில் நிர்வாகிகள் கோயில் கதவை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை வந்து பார்த்தபோது, கோயில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 2 உண்டியல்கள் உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து எடைக்கல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜயகுமார், இன்ஸ்பெக்டர் எழிலரசி, சப்- இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.இந்த கோயில் உண்டியல் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்பட்டு வருவதால் இரண்டு உண்டியல்களிலும் ரூ.1 லட்சம் பணம் இருந்திருக்கலாம் என தெரிகிறது.கோயில் உள்ளே இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தபோது, நள்ளிரவு நேரத்தில் 2 மர்ம நபர்கள் முகத்தில் முகமூடி அணிந்தபடி வந்து கோயில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றது பதிவாகி இருந்தது. சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் கொள்ளையர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : cash robbery , temple ,broken, Rs 1 lakh ,cash robbery
× RELATED கோவை மாவட்டம் காளம்பாளையம் அருகே 40 சவரன் நகை , ரூ.15 ஆயிரம் பணம் கொள்ளை